வெற்றி வேல் விமர்சனம்

பாலா படத்தில் சன்னாசியா நடிச்சு சின்னாபின்ன பட்ட சசிகுமார், “இன்னாத்துக்குப்பா ரிஸ்க்?’ என்று நினைத்திருக்கிறார். அந்த எச்சரிக்கையுணர்வு சீனுக்கு சீன் வெளிப்பட்டாலும், சசிகுமாரை கழுவி துடைத்து கலகலப்பு பூசிய டைரக்டர் வசந்தமணிக்கு அகில உலக சசிகுமார் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு ஆளுயர மாலை!

நண்பர்களின் காதல் ஒன்றே நாலு வேளைக்கும் சாப்பாடு என்று திரிந்தே பழக்கப்பட்ட சசிகுமார் இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு தம்பியின் காதலை சேர்த்து வைக்க கிளம்புகிறார். மாறுவேடத்துக்கு ஆசைப்பட்டு மருவை ஒட்டிக்கொண்ட மாதிரிதான் இருக்கிறது இந்த லேசான டிபரண்ட்!

உரக்கடை வைத்திருக்கும் சசிக்கு, உள்ளுர் வேளாண்மை கூடத்தில் பணியாற்றும் மியாஜார்ஜ் மீது லவ் வந்துவிடுகிறது. தானுண்டு தன் காதலுண்டு என்று அதை டெவலப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் அவருக்கு, அந்த லவ்வை மியாவும் ஏற்றுக் கொள்ளப் போகிற நேரத்தில்தான் வந்து தொலைக்கிறது அந்த இடையூறு. தம்பிக்கும் பக்கத்து ஊர் பிரசிடென்ட் மகளுக்கும் லவ் என்று தெரியவர, அந்த லவ்வுக்கு உதவ கிளம்புகிறார் சசி. காதலை சொல்ல வருவார் என்று காத்திருக்கும் மியா, சொந்த ஊரான கேரளாவுக்கு போய்விட்டு பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தால்? ஆசைப்பட்ட சசி, அடுத்தவளோட புருஷன்! ஏன்? அதுதான் இந்த படத்தின் செமத்தியான ட்விஸ்ட்! (லேசாக தேவர் மகன் வாசனை அடித்தால், வசந்தமணிக்கு ஒரு ரிங் கொடுங்கப்பு)

“ஒரே வழி பொண்ணை கடத்திட வேண்டியதுதான்” என்று கிளம்பும் நாடோடிகள் கோஷ்டி, திருவிழாவில் கடத்த வேண்டியவளை விட்டுவிட்டு இன்னொருத்தியைதான் கடத்துவார்கள் என்று அரசல் புரசலாக மண்டைக்குள் ஏறினாலும், அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளுக்கு நம்மை தயாராக்குகிற விதத்தில் ‘அட’ போட வைக்கிறார் டைரக்டர். அந்த திருவிழா காட்சி தொடங்கி, சசிகுமார் நிகிலா திருமணம் ஏன் நடந்தது என்பதை அவரது குடும்பம் அறிந்து கொள்கிற அந்த நிமிஷம் வரைக்குமான ஒருவித பரபர திரைக்கதைக்கும் சேர்த்து ஒரு ஆஹா! படத்தில் நிகிலா பேசுகிற டயலாக்குகளை ஒரு உள்ளங் கையில் அள்ளி எடுத்துவிடலாம். ஆனால் மணிக்கணக்காக நம்மோடு பேசிக் கொண்டிருந்த உணர்வை தந்துவிடுகிறார் அந்த பெண். சபாஷ்மா… நல்லா வருவே!

சசிகுமாரை வேப்பிலை வைத்து துவட்டினாலும், பிடிச்சிருக்கிற ஆ.கோ போகாது போலிருக்கிறதே…! பின்னே என்னப்பா? பரதநாட்டியமெல்லாம் ஆடுனா ஆடியன்ஸ் நிலைமையை யோசிக்க வேணாம்? இருந்தாலும் “நான் ஹீரோப்பா. ஒருத்தன்கிட்டயும் அடி வாங்க மாட்டேன்” என்று அடம் பிடிக்காமல் கதையோடு ஒத்துப்போய், காட்டுத்தனமாக அடிவாங்கவும் துணிந்திருக்கிறார். மியா ஜார்ஜுக்கும் இவருக்குமான லவ்வில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை என்பதை சொல்லிய கையோடு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். சசிகுமாருக்கு அறிமுகப் பாட்டு வைக்கிறேன் என்று அவரை ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுவதெல்லாம் ஓவர்டா உலகநாதா!

படத்தில் ‘எல்லா புகழும் எனக்கே’ என்று அள்ளி எடுத்துக் கொள்வது தம்பி ராமய்யாதான். மனுஷன் மைன்ட் வாய்ஸ் கொடுத்தாலும் கைதட்றாங்க. அதை மியூட் பண்ணினாலும் கைதட்றாங்க. ஒரு காட்சியில் பாலத்தின் மீது அமர்ந்திருக்கும் அவர் லேசாக சசிகுமாரை லுக் விட, அட… அதற்கும் கைதட்டுகிறதப்பா கூட்டம். மனைவி வாடாமல்லியை துஷ்டர்களிடமிருந்து பாதுகாக்க அவர் படும் பாடு… தியேட்டரையே குலுங்க வைக்கிறது. ஆமாம்… கடைசி வரைக்கும் வாடாமல்லியோட முகத்தை காமிக்காமலே விட்டுட்டீங்களே டைரக்டர்?

பெண்ணை கடத்துவதில் புது டெக்னாலஜியுடன் வந்திறங்கும் சமுத்திரக்கனி அண் கோஷ்டியை பார்த்ததுமே தியேட்டரில் கைதட்டல். அவரும் இரண்டு சீன்கள் வந்தாலும் என்ன நடக்குமோ என்று பதற விட்டு சிரிக்க வைக்கிறார். சொந்த அண்ணனை பார்க்கும் போதெல்லாம் சுட சுட அயர்ன் பாக்சை முழுங்கிய எபெக்ட் கொடுக்கும் விஜி சந்திரசேகர், அப்படியே கிராமத்து பொல்லாப்பை நினைவு படுத்துகிறார். கம்பீர பிரபு, கடைசியில் பரிதாப பிரபு ஆகிவிடுவதும் கூட ட்விஸ்ட்தான் போலிருக்கு! வழக்கம் போல இளவரசு, புலம்பல் அப்பா.

சசிகுமாரின் தம்பியாக நடித்திருக்கும் ஆனந்த், விஜிசந்திரசேகரின் மகன் என்று சில கவனிக்க வைக்கிற வரவுகள்!

இமானுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ஸ்டைலில் இம்மியளவும் மாறாத ட்யூன்கள்! பட் பிடிச்சுருக்கே, என்ன செய்ய?

பறையடித்து பேக் பண்ணப்பட்ட சசிகுமாரின் மார்க்கெட்டை, வேல் நுனியால் உசுப்பி உயிர் பிழைக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வசந்தமணி! வெற்றி வேல்…. வீர வேல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

dimandirevctorBalailavarasumiageorgeprabusasikumarSlideThaaraithappattaiThambiramaiyaVarshaVasanthamaniVetrivel ReviewVijiChandrasekar
Comments (0)
Add Comment