தமிழ்நாடே ரஜினியின் ‘பேட்ட’தான்! -ஆர்.எஸ்.அந்தணன்

ரஜினிகாந்த் என்றால் ‘இரவின் நிறம்’ என்று பொருள்! இருட்டில்லாமல் சினிமாவே இல்லை. தெரிந்தேதான் இப்படியொரு பெயர் வைத்தார் போலிருக்கிறது இயக்குனர் சிகரம் பாலசந்தர். ஒரு பவுர்ணமி நாளில், வண்ணங்களின் வடிவமான ஹோலி தினத்தன்றுதான் இந்த பெயரை சிவாஜிராவுக்கு வைத்தார் பாலசந்தர்.

சிவாஜிராவ் கண்டக்டராக இருந்தபோது மக்களுக்காக அடித்த விசிலை ரஜினிகாந்த் ஆனபின் அவருக்காக திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே மக்கள்! இதுதான் கடவுளின் ஸ்கிரீன் ப்ளே!

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக அங்கும் ஒருவர் அலைபாய்வதை பார்க்க முடிகிறது. கபாலி ஷுட்டிங்குக்காக மலேசியாவுக்கு போயிருந்தார் ரஜினி. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இரு புறமும் குழந்தைகள் அணிவகுக்க… அவர் அந்த அணிவகுப்பை கடந்துதான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே போக முடிந்தது. மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்ல, சீனா, ஜப்பான் என்று தமிழ் தெரியாத நாடுகளுக்கும் ரஜினிகாந்த் தெரிவார்.

இருபது ஆண்டுகளாக ஒரு முடிவை நுனி நாக்கில் வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவரது நுனி நாக்கின் அசைவுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது மீடியா! யாருக்குமே அலுத்துப் போகாத இன்னொரு ஸ்கிரீன் ப்ளே இது.

உலகத்தில் வேறெந்த நடிகருக்கும் வாய்க்காத இந்த பெருமை, ரஜினிக்கு ஒரே நாளில் கிடைத்துவிட்டதா? இந்த கரிஷ்மாவின் ஜாகதம் என்ன?

உழைப்பு, பொறுமை, எச்சரிக்கை, திட்டமிடல், தனக்கு முன் பயணித்தவர்களை மதித்தல்… இவையெல்லாம்தான். இவற்றுடன் ஆன்மீகமும் சேர்ந்து கொண்டால் ரஜினிகாந்தின் ‘ரத்ன கம்பள’ வரலாறும், வயசும் புரிந்துவிடும்.

‘கபாலி’ ஷுட்டிங். முதல் காட்சியின் வசனமே ‘கன்னத்துல மரு வச்சுகிட்டு ஏய்ன்னு கூப்பிட்டதும் ஓடிவந்து கைகட்டி நின்னு ‘எஜமான் கூப்பிட்டிங்களா?’ னு கேட்கிற நம்பியார்னு நினைச்சியா? கபாலிடா….’ என்பதுதான்.

படித்துவிட்டு சற்று நேரம் தன் தாவங்கட்டையை சொறிந்து கொண்ட ரஜினி, ‘இதை வேற ஒரு நாள்ல எடுத்துக்கலாம். இப்ப வேற டயலாக் கொடுங்க’ என்று வாங்கிக் கொண்டார். எல்லாருக்கும் படு குழப்பம். சாதாரண ஒரு டயலாக். இதுக்கு ஏன் ரெண்டு நாள் டைம் கேட்கணும்? இருந்தாலும் கேட்பது ரஜினியாச்சே… அடுத்த டயலாக்குக்கு போய்விட்டார்கள்.

சொன்னது போலவே இரண்டு நாட்கள் கழித்து அதே டயலாக். அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசி முடிக்க… இன்னும் ஐம்பது வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாத டயலாக்காக மாறிப்போனது அது. நடுவில் அந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது?

அங்குதான் உயரத்தில் நிற்கிறார் ரஜினி. நம்பியார் குடும்பத்தை தொடர்பு கொண்டு, ‘இப்படியொரு டயலாக் நான் பேசணும். அதுக்கு உங்க அனுமதி வேணும்’ என்று கேட்டுக் கொண்டார். நம்பியார் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் யாரும் திரைத்துறையில் முக்கிய இடத்தில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாது. அவர்களை தேடிப் பிடித்து, அனுமதி வாங்குகிறார் என்றால் அதுதான் ரஜினியின் மனசு. பெரியோரை மதித்தல்!

எந்தவொரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் ஆயிரம் முறை யோசிப்பது அவரது ஸ்டைல். அரசியலில் குதிப்பது மட்டுமல்ல… அக்கம் பக்கம் பேசுகிறவர்களுக்கு மரியாதை கொடுக்கிற விஷயத்திலும்.

பாபா படத்தில் ஒரு பாட்டு.

அதிசயம் அதிசயம் பெரியார்தான்…
ஆனதென்ன ராஜாஜி

என்று ஒரு வரி வருகிறது அந்த பாடலில். பாடல் வெளியான சில மணி நேரங்களில் தி.க.தலைவர் வீரமணியிடமிருந்து அந்த வரிகளுக்கு எதிர்ப்பு. பிரச்சனையை இழுத்துக் கொண்டிருக்கவில்லை ரஜினி. சம்பந்தப்பட்ட வரிகளை படத்திலிருந்து நீக்கவே உத்தரவிடுகிறார்.

அதே பாபாவில் இன்னொரு சம்பவம். ரஹ்மானும் வைரமுத்துவும் சில கால இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைகிறார்கள். ரஜினிக்கு ஓப்பனிங் ஸாங் என்றதும் வீட்டிலேயே எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார் வைரமுத்து.

பாபா… பாபா…
பறந்து வந்தேன் பாபா.
மண்ணைத் தேடும் மழையை போல

என்று செதுக்கி செதுக்கி எழுதிய வரிகள் அத்தனையும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. நாட்டை ஆள்வதும் உறுதி என்பது போல அமைந்த வரிகள் அத்தனையும். சுற்றியிருந்த அத்தனை பேரும் இந்த வரிகளை கொண்டாடி விட்டார்கள். ஏன்… ரஹ்மான் கூட! ரஜினிக்கு நிறைய யோசனை. மறுநாள் ‘இந்த பாடல் வேண்டாம்’ என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிற ரஜினி, ‘பாட்டு பொதுவான தத்துவத்தை சொல்லட்டும். தனி மனித புகழ்ச்சி வேண்டாம்’ என்று கூறிவிடுகிறார். அதற்கப்புறம் எழுதப்பட்ட பாடல்தான் ‘டிப்பு டிப்பு டிப்பு குமாரு’

பாபா படத்தில் நிறைய எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டே இருந்தார் ரஜினி.

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
எந்தப்பக்கமும் சாயாத பாபா

இப்படியொரு டயலாக் கூட அந்தப்படத்தில் இருந்தது. சாய்பாபா பக்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதையும் மறு பேச்சின்றி நீக்கிய பெருந்தன்மை அவருக்கு இருந்தது.

தனக்கான பாடல்கள் இப்படியிருக்க வேண்டும். கதை இப்படியிருக்க வேண்டும். வசனங்கள் இப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் பேசத் துவங்கியது எப்போது? ஏன்?

‘அண்ணாமலை’க்குப் பின்தான். முதலில் அந்தப்படத்தை இயக்கவிருந்தது இயக்குனர் வசந்த். அப்போது ரஜினிக்கு இருந்த மாஸ், ரசிகர்களின் வெறித்தனமான அன்பு இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்த வசந்த், ‘நான் இந்தப்படத்தை இயக்குகிற அளவுக்கு மன ரீதியாக தயாராகல’ என்று ஒதுங்கிக் கொண்டார். படப்பிடிப்புக்கு போவதற்கு இன்னும் 48 மணி நேரமே இருக்கிற நிலையில் இப்படியொரு சிக்கல்.

அப்படியென்றால் ‘அண்ணாமலை’ படத்தை யார் இயக்குவது? இயக்குனர் பாலசந்தர் நான்கு பெயர் கொண்ட ஒரு பட்டியலை கொடுக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா, அமீர் ஜான், எஸ்.பி.முத்துராமன், கடைசி பெயராக கே.பாலசந்தர்(?!) ஷுட்டிங் சமயங்களில் சுரேஷ்கிருஷ்ணாவை நுணுக்கமாக கவனித்து வந்த ரஜினி, அவரையே டிக் அடித்தார். ஆனாலும் ஒரு அச்சம். நமது நம்பிக்கை வீண் போய்விட்டால்?

கதை, காட்சியமைப்புகள், வசனங்கள், பாடல் வரிகள் என்று எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார். சில இடங்களை திருத்துகிறார். படம் வெற்றி பெற வேண்டும் என்றால் வெறும் ரஜினி மட்டும் போதாது என்று முடிவெடுக்கிறார். தமிழ்சினிமா கதாநாயகர்களின் மன ஓட்டத்தை முதன் முறையாக மாற்றி, தனக்கு இணையாக கதாநாயகி குஷ்புவின் கேரக்டரை இன்னும் வலுவாக்குகிறார்.

ஒரு ஹீரோவுக்கு இணையாக குஷ்புவை புகழ்ந்து பாடல் அமைக்க சொல்கிறார். அதுதான் கொண்டையில் தாழம் பூ… பாடல். தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய பாடல் அது. ரஜினியின் கால்குலேஷன் ஷியூட் ஷாட் அடித்தது!

குஷ்பு விஷயத்தில் மட்டுமல்ல… சாதாரண காமெடியன் கருணாசை ‘நந்தா’வுக்குப் பின் தன் படத்தில் நடிக்க அழைத்தது. வடிவேலுவை தன் வீட்டுக்கே வரவழைத்து கால்ஷீட் கேட்டது. அவரது டைட் ஷெட்யூல்களுக்கு நடுவில் காத்திருந்து அவருடன் நடித்தது என்று ரஜினி விட்டுக் கொடுத்துப் பெற்றது கொஞ்ச நஞ்ச வெற்றியல்ல!

பாபா தோல்விக்குப்பின் “அவ்வளவுதான் ரஜினி. முடிந்தார்… ரஜினியின் சகாப்தம் ஓய்ந்தது” என்றெல்லாம் கோடம்பாக்கமும் கொண்டாடியதுதான் வேதனை. அந்தப்படத்தின் போது பா.ம.க தலைமையினால் கொடுக்கப்பட்ட இம்சைகள் ரஜினியை சில வருடங்கள் அமைதிகாக்க வைத்தது.

இந்த முறை சந்திரமுகி.

அடித்தால் ஜாக்பாட். இல்லையென்றால் சும்மா கூட இருக்கலாம் என்று நினைத்த ரஜினி, தன் தேடல்களை மட்டும் விட்டுவிடவே இல்லை. தன் பெங்களூர் நண்பர்களுடன் மாறுவேடத்தில் சுற்றி வந்த ரஜினி, கன்னடத்தில் வெளிவந்த ‘ஆப்தமித்ரா’ படத்தை தியேட்டருக்குப் போய் மக்களோடு மக்களாக அமர்ந்து பார்க்கிறார். ரசிகர்களின் கைதட்டலும் விசிலும் இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால் என்ன என்று யோசிக்க வைக்கிறது. அப்படத்தின் இயக்குனர் பி.வாசுவை அழைத்து கால்ஷீட் கொடுக்கிறார். படத்தை யார் தயாரிப்பது?

மீண்டும் பா.ம.க குடைச்சல் கொடுத்தால் என்னாவது? பலமாக யோசித்த ரஜினி, யார் தயாரித்தால் உலகம் மூக்கை நுழைக்காதோ, அந்த குடும்பத்தை தேர்வு செய்கிறார். சிவாஜி புரடக்ஷன்ஸ் உள்ளே வருகிறது. சந்திரமுகி வளர்கிறது.

நிறைய செதுக்குகிறார் ரஜினி. இமயமலைக்கு போயிருந்த போது அங்கு மலைவாழ் மக்கள் இருட்டிய பின் ஏதோவொரு வார்த்தையை முணுமுணுத்துக் கொண்டே செல்வதை கேட்கிறார். என்ன வார்த்தை அது? ‘லகலகலகலக…’ அப்படியென்றால்? அவர்களின் பாஷையில் அது பேய் ஓட்டுகிற மந்திரம். கரெக்டாக அதை கொண்டு வந்து சந்திரமுகியில் பொருத்தினார்.

படத்தில் வடிவேலுவும் ரஜினியும் பேய் பங்களாவில் பேசுகிற அந்த டயலாக் அவ்வளவு பேமஸ். நான் கேட்டேனா…? என்கிற அந்த டயலாக், அமிதாப்பச்சன் ஒரு விளம்பரத்தில் பேசகிற டயலாக். அதை சமர்த்தாக கொண்டு வந்து இங்கு வைத்தார் ரஜினி.

ஜோதிகாவுக்கு முன் அந்த ‘சந்திரமுகி’ கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் சிம்ரன்தான். சொந்தக்காரணங்களால் அவர் கழன்று கொள்ள, தன்னம்பிக்கையோடு ஜோதிகாவை டிக் அடித்தவர் ரஜினிதான். மாஸ் ஹீரோவாக ஆனபின் தன் படத்திற்கு ஒரு ஹீரோயின் கேரக்டர் பெயரை வைக்க சொன்ன விதத்திலும் ரஜினியின் பெருந்தன்மையை விட, ஹிட் அடித்துவிட வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி நின்றது!

‘படையப்பா’ வில் ரஜினி ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்த ஸ்பேஸ், கிட்டதட்ட இந்த தந்திரம்தான். கடைசியில் நீலாம்பரி திருந்தி படையப்பாவிடம் மன்னிப்பு கேட்பதுதான் க்ளைமாக்ஸ். ஆனால் ரஜினி சரியான திருத்தம் வைத்தார். இவ்வளவு ஃபோர்சான பொண்ணு ஏன் கடைசியில் மன்னிப்பு கேட்கணும்?

‘நீ உயிர் பிச்சை போட்டு நான் வாழ விரும்பல’ என்று கடைசி வரை மிடுக்காகவே சாக விட்டார் நீலாம்பரியை. ‘மரணத்திலாவது உனக்கு நிம்மதி கிடைக்கட்டும்’ என்று ரஜினி பேசுகிற டயலாக், அவரே எழுதியதுதான்!

ரஜினிக்கு பல கோடிகள் வியாபாரம் இருக்கிறது. வெறும் பாக்கெட்டோடு திரிபவர்களை கூட ரஜினி நினைத்தால் படத் தயாரிப்பாளர் ஆக்கிவிடலாம். ஆனால் ஏன் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வந்தார்? அங்கும் ஒரு கால்குலேஷன் இருந்தது அவருக்கு. அப்படி செய்யத் தூண்டியதே ஏ.வி.எம் சரவணன் அவர்களின் ஒரு செயல்தான்.

‘எஜமான்’ படத்தை பார்த்த ஏ.வி.எம் உதட்டை பிதுக்கிவிட்டது. அந்த படம் ஓடாது என்று ஒரே காட்சியிலேயே முடிவு செய்துவிட்டார்கள் ரஜினியும் ஏ.வி.எம்.சரவணனும். ஆனால் தலையெழுத்து என்று விட்டுவிடவில்லை திரு.சரவணன். ‘குழந்தையில்லாத பெண்கள் இந்த படம் குறித்து தங்கள் கருத்துக்களை கடிதமாக எழுதலாம்’ என்று அறிவித்தார். தேர்ந்தெடுக்கும் பெண்மணிகளின் கடிதங்களுக்கு எழுத்தாளர் சிவசங்கரி பதிலளித்தார். அது தினந்தோறும் பத்திரிகை விளம்பரங்களில் இடம் பெற்றது.

இதையடுத்து தியேட்டரில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு தோல்வி படத்தையும் முயற்சி செய்தால் ஒட வைக்கலாம் என்கிற வித்தையை ரஜினிக்கு உணர வைத்தார் ஏ.வி.எம்.சரவணன். அதற்கப்புறம்தான் சின்ன பேனர் படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தராமலிருந்தார் ரஜினி.

படத்தில் வரும் டயலாக்குகளை ஒரு குழந்தை போல ரசித்துக் கேட்பார் ரஜினி. ‘இந்த இடத்துல கிளாப்ஸ் அள்ளும்’ என்று குதூகலிப்பார். கொடுக்கிற டயலாக்குகளுடன் மேலும் சில வார்த்தைகளை அவர் சேர்த்துக் கொள்ளும்போது அந்த டயலாக்குக்கே தனி சிறகுகள் முளைத்துக் கொள்ளும்.

சிவாஜி படத்தில் ஒரு டயலாக். நீ யாரு? என்று கேட்பான் வில்லன். அதற்கு ‘சிவாஜி…’ என்றுதான் ஸ்கிரிப்டில் பதில் எழுதியிருந்தார்கள். ரஜினி அந்த இடத்தில் இந்த வார்த்தையை நுழைத்தார்.

‘பராசக்தி ஹீரோடா…’

இந்த காட்சியை தியேட்டரில் இப்போது பார்த்தாலும், ஏன் இவ்வளவு கைதட்டல்கள் விழுகிறது என்று புரியும். ‘பேரக் கேட்டா ச்சும்மா அதிருதில்ல..’ என்பதெல்லாம் ரஜினியே நுழைத்த டயலாக்குகள்தான்!

‘பொம்பள பொம்பளையா இருக்கணும்’ என்று ரஜினி பேசுகிற டயலாக், நாடெங்கிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த எதிர்பாளர்களுக்குத் தெரியாது, கெட்டுப் போன பெண்ணை ஏற்றுக் கொள்கிற காட்சியை தன் ‘வள்ளி’ படத்தில் துணிச்சலாக வைத்தவரும் ரஜினிதான் என்று!

‘நான் போட்ட சவால்’ படத்தில்தான் அவருக்கு முதன் முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையை டைட்டில் கார்டில் கொடுத்தார் தயாரிப்பாளர் தாணு. அதற்கப்புறம் எத்தனையோ முறை ரஜினியை வைத்து படம் தயாரிக்க முயன்ற தாணுவுக்கு, பல வருடங்கள் கழித்துதான் ‘கபாலி’ கொடுத்தார் ரஜினி. நடுவில் எத்தனை காலம் அவர் காத்திருந்தார். அவரை எத்தனை வருடம் இவர் காக்க வைத்திருந்தார் என்பதெல்லாம் ரஜினியின் ஆற அமர யோசிக்கும் முடிவின் ஒரு சிறிய உதாரணம்தான்.

ரஜினி பிறந்தது வருடத்தின் இறுதி மாதத்தில். ஆனால் வருஷம் முழுக்க தன்னைப் பற்றிய பேச வைக்கிற சக்தி அவருக்கு இருக்கிறது. தமிழ்சினிமா மட்டுமல்ல, தமிழ்நாடே ரஜினியின் ‘பேட்ட’தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்
(இந்தியா டுடே- ரஜினியின் பிறந்த நாள் ஸ்பெஷலுக்காக எழுதியது)

2point0babaIndia Today SpecialKabaaliKalaPettarajinirajini fans clubRajini SpecialRajini Super hit MoviesRajinikanth PoliticsSuccess Star in Tamilsuperstar rajinikanth
Comments (3)
Add Comment
  • VNK

    நீங்க தனியா இருந்தா ஒழுங்காதான் எழுதுறீங்க. வலைப்பேச்சுக்கு போய் விட்டால் ரஜினி-அஜித்-தனுஷுக்கு எதிராக பேசுகிறீர்கள்.

    • MGR

      MR. VNK, YOU ARE TELLING VERY CORRECT.
      LONG LIVE EVER GREEN SUPER STAR TAMIL GOD STYLE SAMRAT THALAIVAR RAJINI.

  • தமிழ்நேசன்

    பேட்ட இந்திய சினிமாவின் அனைவரும் எதிர்ப்பார்க்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. பேட்டயுடன் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது. அந்த படத்தால் பேட்டக்கு ஒரு ஆபத்தும் இல்லையாம். எப்படியும் பேட்ட முதல் நாள் 60 கோடி வரை வசூல் செய்யும் என கூறியுள்ளனர். பேட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில பொங்கல் விருந்தால திரைக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் அனைத்து திரையரங்கும் பேட்டக்கு தான் ஒதுக்கியுள்ளார்கள். விஸ்வாசத்திற்கு தியேட்டரே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.