நோட்டா – சினிமா விமர்சனம்

பொருள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் பொட்டலம்! ‘நோட்டா’ என்ற தலைப்புதான் இப்படத்தின் பொட்டலம்! கடைசியில் பொருளை தின்றுவிட்டு பொட்டலத்தை தேடினால் ‘அது எதுக்குய்யா இப்போ?’ என்கிறது படம். மாநிலமும், மக்களும் மயங்கிக் கிடப்பதே இரண்டே இரண்டில்தான். ஒன்று சினிமா. இன்னொன்று அரசியல். அப்படி சினிமாவுக்குள் அரசியலையும், அரசியலுக்குள் சினிமாவையும் சொன்ன படங்கள் பல இருந்தாலும், ‘நோட்டா’வில் என்ன புதுசு? இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பு மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் நாம் கேட்டு கேட்டு ஆறிப் பழசான அதிரடி நியூஸ்கள்தான்.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கூவத்தூர் சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. சற்றே மிகை படுத்தியிருந்தால் ‘ஸ்பூப்’ வகை படமாக மாறியிருக்கும். ஆனால் வண்டியை நிதானமாக ஓட்டியதால் பிழைத்தார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

ஜாலிக்கு தண்ணி, சைட் டிஷ்ஷுக்குப் பெண்கள் என்று எந்நேரமும் ‘நித்தி’யமூர்த்தியாக இருக்கும் விஜய் தேவரகொன்டா, முதல்வர் நாசரின் மகன். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் நாசர், இடைக்கால முதல்வராக இவரை நியமிக்கிறார். இரண்டு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் நாசருக்கு சோதனை. சிறைக்குள் தள்ளுகிறது சட்டம். வெளியே இருக்கும் விஜய், அமைச்சர்கள் நீட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு நாட்களை நகர்த்த… அவரை உசுப்பிவிடுகிறது ஒரு சம்பவம். சட்டென ரவுடி முதல்வராகி நல்ல பெயரெடுக்கிறார் நாட்டு மக்களிடம்.

‘திருத்த வேண்டியது இன்னும் நிறைய இருக்கே’ என்று உணரும் அவர் அதிரடியாக ஆக்ஷனில் இறங்க, சொந்த அப்பாவே மகனுக்கு எதிராகிறார். அப்புறம் என்ன? என்பதுதான் இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

முழங்காலுக்கு கீழே குனிந்து கும்பிடுவதில் ஆரம்பித்து… அப்போலோ அலப்பறைகள்.. கன்டெயினரில் கடத்தப்படும் கரன்ஸி வரைக்கும் நாம் பார்த்த அமைச்சர்களின் அல்ப சொல்பம்தான். அதே வாசல், அதே எட்டுப்புள்ளி கோலம் என்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிடப் போகிறது? நல்லவேளை… சில காட்சிகளில் (மட்டும்) மண்டையை கசக்கி கை தட்டல்கள் வாங்கிவிடுகிறார் ஆனந்த் ஷங்கர். குறிப்பாக, குடித்துவிட்டு இங்கிலாந்து அழகிக்கு முத்தமிடும் இந்த ‘யங்’ முதல்வரின் கிளிப்பிங்ஸ் வெளியாகி நாடே அல்லோலப்பட.., அதை சாதுர்யமான டிராமாவாக மாற்றுகிற அந்த யுக்தி… தெறி மாஸ்! இப்படி படம் முழுக்க காட்சிகள் இருந்திருக்க வேண்டாமோ டைரக்டரே?

விஜய் தேவரகொன்டா. நமக்கு நன்கு பரிச்சயமில்லாத தெலுங்கு ஹீரோ. நம்மால் ரசிக்க முடியுமா? என்கிற டவுட்டோடு உள்ளே நுழைகிற அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தி அனுப்பி வைக்கிறார் மனுஷன். தானே தமிழ் பேசி நடித்தாலும், அவ்வளவு மெனக்கடல்கள். ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனை பார்த்துவிட்டு, அதே போலொரு முதல்வர் இருந்தால் எப்படியிருக்கும் என்று ஏங்கிய உள்ளங்களுக்கு மீண்டும் அதே ஏக்கத்தை தருகிறது அவரது சில ஆக்ஷன்கள். பட்… பின்வாசல் சுவரை எகிறிக் குதிக்கவும் அது பயன்படுகிற போதுதான் ‘ஞே’ என்று விழிக்கிறோம்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். நல்லவேளை டூயட் வைத்து இம்சிக்காமல் விட்டார்கள். இவர்களில் சஞ்சனா நடராஜனுக்கு மட்டும் சற்றே கூடுதல் பொறுப்பு. தன்னுடன் படித்த தோழன்தான் முதல்வர் என்றாலும், அரசியல் என்று வந்துவிட்டால் சகுனி வேலை முக்கியம் என்று உணர்த்துகிறார். ‘உனக்கு என் வீட்டில் இடம் கொடுத்ததற்கு காரணம், உன் அரசியல் சாதுர்யத்தை பாடமா படிக்கவும்தான்’ என்று சஞ்சனா சொல்கிற காட்சி… ‘அட’!

முதல்வருக்கு ஃபிரன்ட், மற்றும் அரசியல் ஆலோசகராக சத்யராஜ். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரை நினைவு படுத்துகிறார். படம் முழுக்க இவரை ரசிக்க போகிறோம் என்று நினைத்தால், நம் நினைப்பிற்குள் வந்து ‘நினைப்பியா? நினைப்பியா?’ என்று அடிக்கிறார் இயக்குனர். ‘ஏங்க… இவரையெல்லாம் முப்பது வயசு இளைஞனா பார்க்கறது எவ்வளவு பெரிய துன்பம்? அப்படியிருந்தும் எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?’ நாசருக்கும் அதே போலொரு பிளாஷ்பேக் காட்சி. இவிங்க மேக்கப்பை நினைத்தாலே கதி கலங்குகிறது.

எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல பெஸ்ட்டோ பெஸ்ட்! இவர்களை தவிர படத்தில் வரும் பாதி முகங்கள் யாரோ, யார் யாரோ? ஒருவேளை ஆந்திரா பக்கம் போனால் அடையாளம் தெரியக்கூடும்.

‘நோட்டா’ என்ற தலைப்பில் அரசியல் படம் எடுக்கப் போகிறோம் என்றால், அதில் எவ்வளவு திருப்பங்களும் திகைப்புகளும் இருக்க வேண்டும்? வெறுமனே கடந்திருக்கிறார் ஆனந்த்ஷங்கர்.

சாம்.சி.எஸ் ன் பின்னணி இசை அபாரம். இரண்டு பாடல்கள். உள்ளே உட்கார்ந்தும் கேட்கலாம். வெளியே போனாலும் வில்லங்கம் இல்லை ரகம்தான்!

நிறைய செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். அதற்கேற்ப தன் மூளையையும் செலவு செய்திருக்க வேண்டும் இயக்குனர். ‘வெட்டாட்டம்’ என்கிற நாவலை தழுவியிருக்கலாம். அதற்காக நல்ல நல்ல காட்சிகளை உருவாக்காமல் நழுவியது இயக்குனரின் தவறே!

நோட்டா… டேஸ்ட்டா? வேஸ்ட்டா? அதை சொல்லுய்யா முதல்ல.

தெரியலையே! வேணும்னா ‘நோட்டா’வுல குத்தவா?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கண்டுக்காத விஜய்! கவலைப்படாத கருணா!

Close