கீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு!   கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்

 

கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தாலும், குறுக்கு புத்தி இருந்தால் அசிங்கப்பட வேண்டியதுதான் என்பதை பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் நேற்று உணர்ந்திருப்பார். மத்திய குற்றப்பிரிவு போலீச்சார் மோசடி வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இந்த பூனையும் மீசை முறுக்குமா என்பதைப் போலவே இருப்பார் அம்ரீஷ். பால் வடியும் அந்த முகத்தை பார்த்தால், மேற்படி செய்தியை சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் நம்பவே தோன்றாது. இத்தனைக்கும் இவரது அம்மா ஜெயச்சித்ரா தன் ஒரே மகனுக்காக கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். மகனும் சும்மாயில்லை. இன்று டாப்பில் இருக்கிற பத்து இசையமைப்பாளர்களில் ஒருவர். அப்படியிருக்க, உழைத்தோமா? பிழைத்தோமா? என்றில்லாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டிருக்கிறார். விளைவு? சிறைவாசமும், குண நாசமும் பரிசாக வந்து சேர்ந்திருக்கிறது.

கோவில் கலசத்தை திருடி விற்கும் ஒரு கும்பலிடம் தொடர்பு வைத்துக் கொண்டு இரிடியம் விற்கிறேன் பேர்வழி என்று இறங்கியிருக்கிறார். 2013 ஆண்டு நெடுமாறன் என்பவரிடம் 26 கோடி பெற்றுக் கொண்டு இரிடியத்தை விற்றதாக கூறப்படுகிறது. இதை வெளிநாட்டில் விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினாராம். அதை நம்பி வாங்கிய நெடுமாறனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ஏனென்றால் இவரிடம் கைமாறிய அந்த பொருள், வெறும் டுபாக்கூர்.

தான் ஏமாந்த விஷயத்தை போலீசிடம் புகாராக தெரிவித்திருக்கிறார் அந்த நபர். பொதுவாக இதுபோன்ற மோசடி விஷயங்களில் பணத்தை பறி கொடுத்தவரும் குற்றத்தில் நமக்கும் பங்கு இருக்கே, லாடத்தை நமக்குமல்லவா சேர்த்து கட்டுவார்கள் என்று அமைதியாக இருந்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் க்ளைமாக்சே வேறு. போலீசுக்கு போய்விட்டார் அந்த நபர்.

தன் மகனை எதற்காக போலீசார் அழைத்துச் செல்கிறார்கள் என்பதே அறியாத அந்த தாய், காவல் ஆணையர் அலுவலகம் சென்று விசாரித்த பிறகே இப்படியொரு மோசடியில் தன் மகன் ஈடுபட்டது தெரிந்திருக்கிறது.

மகன் அம்பரீஷின் ஆசையை நிறைவேற்ற ’நானே எனக்குள் இருக்கிறேன்‘ என்ற சொந்தப்படம் எடுத்து பல கோடிகளை இழந்த ஜெயச்சித்ரா இப்போது திருட்டு மற்றும் மோசடி கேசில் மகனை தொலைத்துவிட்டு நிற்கிறார்.

கீ போர்டுல பாட்டு வர வச்ச அம்ரீஷுக்கு ஆன் போர்டுல பூட்டு தொங்குதே… அதுதான் சோகம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வலிமை அப்டேட் தேதி! மீண்டும் தவறு செய்கிறார்களா?

Close