குஷ்புவே நமஹ! -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்

0

அன்றைய பாம்பேயில் செப்டம்பர் 29, 1970ம் நாளன்று அந்த குழந்தை சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது, பின்னொரு நாளில் தமிழக பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும் என யாருக்கும் தெரியாது. மூன்று சகோதரர்களுடன் அது தவழ்ந்து வளர்ந்தது. நஜ்மா கான் எனும் தனித்து வாழ்ந்த தாய் அந்த 4 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்

நக்கத் கான் எனும் பெயரோடு வளர்ந்த அந்த குழந்தை படிப்பில் கெட்டிதான். அப்பொழுதே ஆங்கிலம் அதன் நுனிநாக்கில் விளையாடியது. நாக்கில் ஆங்கிலம் ஆடியதை விட அந்த குழந்தை முகத்திலே ஒரு வசீகரம் இருந்தது. வட்ட முகமும், குண்டு கன்னமும், ஓளிவீசும் கண்களுமாய் பார்ப்போரை கவர்ந்திழுந்த அந்த முகம், இந்தி திரையுலகத்தோரை அன்றே திரும்பி பார்க்க வைத்தது, ஒரு வித ஈர்ப்பு அன்றே அக்குழந்தையிடம் இருந்தது. விளைவு அது குழந்தை நட்சத்திரம் ஆனது

தர்மேந்திரா, வினோத் கண்ணா, ஹேமமாலினி நடித்த அந்த “பர்னிங் டிரெய்ன்” படத்தில் 10 வயது ஆன அந்த குழந்தை முதன் முதலாக ஒரு பாடலில் நடித்தது. “தெரி காய் சாமீன்” எனும் பாடலில் அன்றே “தெறி”க்க விட்டது அக்குழந்தை ஹேமா மாலினியியோடு நடித்தாலும், தமிழகத்திலிருந்து பாம்பே சென்று ஜெயித்த ஹேமா மாலினி போல பின்னாளில் தமிழகத்தில் தான் ஜொலிப்போம் என்பதெல்லாம் அதற்கு அன்று தெரிந்திருக்க நியாயமில்லை

அதன் பின் 5 வருடம் படிப்பில் கவனம் என இருந்த அந்த அழகு சிலை 15ம் வயதில் கதாநாயகி ஆனது. ஆம் அச்சிறுமி “ஜானு” எனும் படத்தில் துணை கதாநாயகி ஆனார். மிக இளம் வயது என்றாலும் அந்த வட்ட முகமும், குழந்தை சிரிப்பும் குமரி முகமுமாய், மலந்தும் மலராத மலர் போல இருந்த அவருக்கு வாய்ப்புகள் வரதொடங்கின‌. ஆயினும் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி போன்ற பெரும் ராணிகள் இருந்த இடத்தில் இந்த புதுமலர் பெரிய இடத்தை அடைய முடியவில்லை

சினிமா என்பது ஜென்ம சனி. பிடித்தால் விடாது. ஒருமுறை கேமரா முன் நடித்துவிட்டால் அந்த பாதையிலே இழுத்து செல்லும், அதன் தன்மை அப்படி. குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து போராடி வருவது அப்படித்தான், கமலஹாசன் அப்படித்தான் உருவானார். இன்னும் ஏராளம் உண்டு. விதி இவரை தெற்கு பக்கம் தள்ளிவிட்டது, தெலுங்கு பக்கம் வந்தார்

“கலியுக பண்டவுலு” எனும் தெலுங்கு படமே அவருக்கு தெற்கே முதல்படம், 16 வயது மங்கையாக, அதிகாலை பனிபோல மென்மையான முகமாக, 3ம்நாள் பிறையாக, தங்க சிலையாக தெலுங்கில்தான் அறிமுகமானார். அது ரிலாசான அன்றே சொன்னார்கள், மான் போல துள்ளிகொண்டும், மயக்கும் சிரிப்புடனும், கொழு கொழு கன்னத்துடனும், கண்களில் குறும்புடனும் அப்பெண் திரையில் ஜொலித்ததை பலர் கணித்து சொன்னார்கள்

“இப்பெண் தெற்கே ஒரு ரவுண்ட் நிச்சயம் ஜொலிக்கும்”.

அப்பெண் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்பு தேடினார். 17 வயதில் தன்னந்தனியாக தேடினார். மொழி தெரியாத ஊர், அந்நியமான ஊர். மொழி தெரியாவிட்டாலும், யாரும் தெரியாவிட்டாலும் அவரிடம் பெரும் தைரியம் அன்றே இருந்தது. அந்த தைரியம்தான் சென்னையில் அவரை போராட வைத்தது. தப்பும் தவறுமாக தமிழ்படித்து அவர் தமிழச்சியாக மாற தொடங்கியது அப்பொழுதுதான்.

கொஞ்சமும் அசராமல் போராடினார். அவரின் போராட்டம் ஒரு துணை நடிகைக்கான வாய்பினைதான் பெற்று தந்தது. ரஜினியும் பிரபுவும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலமாகதான் அவர் தமிழகத்திற்கு வந்தார். மெக்கானிக் ஷாப் முதலாளி வேடம். பாத்திரத்தின் பெயர் தேவி. தன் 18ம் பிறந்தநாளை கொண்டாட அவர் தயாராகிகொண்டிருந்த பொழுது செப்டம்பர் 24, 1988 அன்று திரைக்கு வந்தது அப்படம்

ரஜினி அன்றே மாஸ் ஹீரோ. சுஹாசினியும், பிரபுவும் பெரும் குடும்ப வாரிசுகள் எல்லோரும் அறிந்தது. நாசர் அப்பொழுதே நாயகனில் பிரபலமாகியிருந்தார். அவர்களை எல்லோரும் கொண்டாடியது ஆச்சரியமல்ல, மாறாக அவர்களை ஒதுக்கிவிட்டு இந்த புது முகத்தை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஒரு விதமான அழகு அவர். அதற்கு முன்பு அப்படி ஒரு அழகான பெண்ணை தமிழகம் கண்டதில்லை. அந்த முகம் அப்படி பிரகாசமாக ஜொலித்தது, கண்களும் கன்னமும் பல நூறு கதைகளை சொன்னது

ரோஜா நிறத்தில் வந்த தங்க சிலையாக அவர் ஜொலித்தார்

தமிழகம் மெல்ல அவர் பெயரை உச்சரித்தது. சிலர் குறும்பாக பார்த்தார்கள். சிலர் வியந்து பார்த்தார்கள். துறுதுறுவான வெண்ணை கட்டி சிலையாக இருந்த அப்பெண்ணின் பெயரை எல்லோரும் உச்சரித்தார்கள்.

“குஷ்பூ” எனும் பெயர் அன்றுதான் தமிழகத்தில் நுழைந்தது, எல்லோர் பார்வையும் அவர் மேல் பதிந்தது. இத்தனைக்கும் மிக சிறு பாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் கவனம் அவர் மேல் பதிந்தது. அவர் காட்டில் அடைமழை கொட்டுவதற்கான மேகங்கள் அப்பொழுது கூடின‌

எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர அவரும் தயாரானது அந்த தருணத்தில்தான்.

தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது

அந்த மிக சிறிய வரிசையிலும் குஷ்பூ பெரும் இடம் பெற வழி வகுத்தவர் பாசில். வருடம் 16 என படமெடுத்து அடுத்த வந்த 20 வருடங்களை அவர் நாயகியாக ஆள அவர்தான் அடித்தளமிட்டார். பெரும் திறமைசாலியும், மிக நுண்ணிய ரசனையும் கொண்ட பாசில் தன் படத்தில் குஷ்பூவினை அனுமதிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம், மிக சரியாக அந்த கதையில் மிக பொருத்தமாக குஷ்பூவினை பொருத்தினார் பாசில்

குஷ்பூவின் மிக சிறந்த படமான வருஷம் 16 தயாரானது. டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த பெண் பாத்திரத்தில் குஷ்பூ மிக அழகாக பொருந்தினார். அதுவரை மலையாள நடிகைகளை கண்டுகொண்டிருந்த தமிழகத்தில் ஒரு மாறுதலுக்காக பாசில் குஷ்பூவினை ஒப்பந்தம் செய்தார்

அது பிப்ரவரி 17, 1989 நிச்சயம் ஒரு சுபயோக தினமாக இருக்க வேண்டும், அன்றுதான் அப்படம் திரைக்கு வந்தது

பெருவெற்றி பெற்ற அப்படம், குஷ்பூவினை எப்படி தமிழகத்தின் சொத்தாக மாற்றியது? எப்படி எல்லாம் குஷ்பூ மங்கா அடையாளம் பெற்றார்?

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.