தில்லுமுல்லு – விமர்சனம்

நன்றாக இருக்கிற கண்ணாடிகளையெல்லாம் துடைக்கிறேன் பேர்வழி என்று உடைக்கிற -ஆசாமிகள் கோடம்பாக்கத்தில் பெருத்துப் போய்விட்டார்கள். இந்த ரீமேக் ரிவிட்டுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என்று கூட்டமாக நின்று குமுறுகிற நேரத்தில் வந்திருக்கிறது தில்லுமுல்லு ரீமேக். ‘உங்க எண்ணத்துல இடி விழ…’ என்கிறார்கள் அசால்ட்டாக. பழைய தில்லுமுல்லுவை மேலும் பளிச் ஆக்கியிருக்கிறார்கள்.

முதலில் டைரக்டர் பத்ரி, சிவா, சூரி உள்ளிட்ட இந்த கூட்டணிக்கு சிரிப்பால் நெய்த சால்வையை போர்த்தி சந்தோஷப்படுகிறோமய்யா…!

‘ஆங்கிரி மூக்கா… (பிரகாஷ்ராஜைதான் இப்படி) ஒரு வாரத்துக்கு நாலு தடவ தில்லுமுல்லு படத்தை டி.வியில போடுறான். அதை பார்த்த பிறகும் இவன் சொல்றதை நம்பியிருக்கேன்னா?’ என்று சந்தானத்தின் வாயை வைத்து தன்னையே பிராண்டிக் கொள்கிற தைரியம் யாருக்கு வரும்? இவர்களுக்கு வந்திருக்கிறது.

இதற்கு பிறகும் இந்த படத்தின் கதையை நாம் சொன்னால் சந்தானமே வீடு தேடி அடிக்க வருவார் என்பதால் கோ டூ ஸ்ட்ரெயிட்!

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் தனுஷ் குள்ளமாக வந்தார். அதற்கப்புறம் சிவா. (இந்த டெக்னிக்கை நாட்டு மக்களுக்கு முன் நீங்களாவது அவிழுங்களேன் நண்பா) இந்த காட்சியில் இவருக்கு அதிகம் டயலாக் இல்லை. ஆனால் அவர் முகம் வைத்திருக்கும் ‘பிளேஸ்’ குறித்து எழுகிற சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிறது. இங்கு ஆரம்பிக்கிறது சிவாவின் சிவ தாண்டவம். அப்புறம் என்ட் கார்டு போடுகிற வரைக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

சிவாவின் அலட்டிக்கொள்ளாத டயலாக் மாடுலேஷன்தான் இந்த படத்தின் முதல் பலமே. மனுஷன் என்னமாய் சீண்டுகிறார்! இவரது சீண்டலில் அம்மாம் பெரிய பேஸ்புக் கம்யூனிடியே பேஸ்த் அடிக்கிறது. ‘நீங்க பேஸ்புக்ல இருக்கீங்களா?’ என்று பிரகாஷ்ராஜ் கேட்க, ‘இல்ல சார் மயிலாப்பூர்ல இருக்கேன்’ என்றெல்லாம் பதில் சொல்கிற திமிர் சிவாவுக்கே உரியது. இப்படி படம் முழுக்க அவர் கொளுத்திப் போடுகிற சின்ன சின்ன டயலாக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறோம். ‘இப்ப நீ என்ன வேலை செய்யுறேன்னா, மதியம் மூன்றரை மணிக்குள்ள என் வேலையெல்லாம் செய்யுற…’ இப்படி போகிற போக்கில் து£வப்படுகிற டயலாக்குகளை கூட புரிந்து கொண்டு சிரிக்க முடிகிறது.

பூனைக்கண் இருந்தால் தம்பி. இல்லையென்றால் அண்ணன். இந்த ஒரு வேற்றுமையை நம்பி ஏமாறுகிற பிரகாஷ்ராஜ் அவ்வப்போது சுதாரித்துக் கொண்டு தகவல் அறியும் திட்டத்தை அமல் படுத்த, அதையெல்லாம் முறியடிக்கிற சிவாவின் கூர்மை, லாஜிக் மீறாத நையாண்டி!

பழைய ‘தேங்காய்’க்கு புதிய குடுமியாக பொருந்தியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பசுபதிக்கு சிவா கொடுக்கிற விளக்கத்தை கேட்ட மாத்திரத்தில் இவர் முகத்தில் வழிகிற பக்தி ரசத்தை அவ்வப்போது -பிடித்து குடித்துக் கொண்டேயிருக்கிறார் சிவாவும்! சடன் ஷாக்காக இவர் சிவா வீட்டுக்குள் நுழைந்து ‘உங்க அம்மா எங்கேஏஏஏஏ…’ என்று கண்டிப்பு காட்டுகிற போது ‘மாட்னாண்டா மாப்ள’ என்று பதற விடுகிறார். பின்பு பிரகாஷ்ராஜ் மறுபடியும் மொக்கையாகி வழிகிறபோது இந்த விளையாட்டை அவ்வளவு சீக்கிரம் முடிச்சுராதீங்க சார் என்று டைரக்டரை கேட்க தோன்றுகிறது.

வாயை திறந்தால் கூவம் கெட்டது. அப்படிப்பட்ட கோவை சரளாவுக்கு நாக்குல ‘லாக்’ போட்ட பிறகும் அவர் கொடுக்கும் ‘ம்க்கும்…’ சவுண்ட் பயங்கரம். வேலைக்காரியான தனக்கு அம்மா கேரக்டர் கொடுக்க மாட்டாங்களா என்று முதலில் ஆர்வப்படுகிற அவரே, அடுத்தொரு முறை சிவா தயாராகும்போது தறிகெட்டு ஓடுகிறார். எல்லாம் இந்த ‘லாக்’ சிஸ்டம்தான். கோவை சரளா சும்மாவே ஜம்ப் பண்ணுவார். இதில் ஸ்பிரிங்கையும் கட்டி விட்டிருக்கிறார்களா…

இவ்வளவு நல்ல படத்தில் ஒரு திருஷ்டி வேண்டுமல்லவா? அதுதான் படத்தின் ஹீரோயின் இஷா தல்வார். ஒட்டவே ஒட்டாத ‘நான்- ஸ்டிக்’ முகம்! இந்த தல்வாருக்கு பதில் வேறு ஏதாவது பழைய சல்வாரையே கூட நடிக்க வைத்திருக்கலாம்.

சூரியின் எச்சில் தெறிக்கும் வாய்க்கு பல முறை குளோஸ் அப் வைத்திருக்கிறார்கள். கர்சீப்பால் மூடிக் கொண்டாவது ரசிக்க முடிகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் முறைகெட்ட காதலுக்கு முடிச்சவிழ்க்க நினைப்பதே இவரது வேலையாக இருக்கிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அழகிக்கு அடுத்த படத்தில் ஹீரோயின் சான்சே கொடுக்கலாம். அவ்வளவு அழகு.

மனோபாலா, இளவரசு என்று கடுகு பொறிகிற சப்தமும் ஆங்காங்கே! க்ளைமாக்சில் ஆச்சர்யமாக என்ட்ரி கொடுக்கிறார் சந்தானம். காமெடி ராஜ்ஜியத்தில் நான் எப்பவுமே எம்ப்பயராக்கும் என்கிறது அவரது துள்ளல். ‘ரொம்ப நேரமா தொரத்துறானுக. ஓட முடியல. அதான் எனக்கு பதிலா டூப் போட்டு ஒருத்தனை ஓட விட்ருக்கேன்’ என்கிறார். கட் பண்ணினால் சைனா ஃபேஸ் ஆசாமி ஒருவன் ஓடிக் கொண்டிருக்க, கடைசி நாலு நிமிடம் சந்தானராஜ்ஜியமாகிக் கிடக்கிறது.

தில்லுமுல்லு தில்லுமுல்லு… ரீமிக்ஸ் அதே பழைய துள்ளலோடு ஒலிப்பது ஆறுதல். இந்த வயதிலும் ஸ்கிரீனில் புத்துணர்ச்சியோடு தோற்றமளிக்கும் எம்.எஸ்.வியும் அவரது கால் தொட்டு வணங்கும் யுவனும் ரசிக்க வைக்கிறார்கள்.

நினைத்திருந்தால் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியிருக்கலாம். இதை துபாய் மற்றும் குளிரடிக்கிற அவுட்டோர்களில் அலைந்து திரிந்து படம் பிடித்திருக்கிற வேந்தர் மூவிசின் பணக்காரத்தனத்திற்கும் ஒரு பாராட்டு.

சிவா ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம்… இப்படி கிசுகிசு வந்தால் இனி அவருக்கே கோபம் வராது. ஏனென்றால் இப்படத்தின் வெற்றி செய்தி அதை நிஜமாக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குட்டிப்புலி – விமர்சனம்

குட்டிப்புலியை ஓபாமா பார்த்திருந்தால் தன் நாட்டு சுற்றுலா பயணிகளை மதுரை பக்கம் எட்டிப்பார்க்கவே வேண்டாம் என்று எச்சரித்திருருப்பார். மதுரைக்காரய்ங்க எல்லாரும் அருவா முனையிலதான் பேஸ்ட் வச்சு பல்...

Close