ரஜினிக்கு ஒரு பத்திரிகையாளரின் கடிதம்!

அன்புள்ள ரஜினிகாந்த்…

உங்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் போர் வந்துவிட்டது…

ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது. காவிரித் தண்ணீரா… என்று கர்நாடக அரசு எள்ளி நகையாடியபோது… கூடங்குளத்தில் அணு உலை வைத்தால் உங்களுக்கு என்ன… என்று அந்த மாவட்டத்து மக்களையே பார்த்து அரசு கேட்டபோது… என்ன… பெரிதாக ஜல்லிக்கட்டு கலாசாரம் என்றெல்லாம் பேசுகிறீர்கள் என்று மக்களைப் பார்த்து அரசுகள் கேள்வி கேட்டபோது… நெடுவாசல் எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும் என்று ஒட்டுமொத்த மக்களே திரண்டு போராடியபோது… மீத்தேன், நியூட்ரினோ என்றெல்லாம் வரும் திட்டங்கள் எங்களை அழித்துவிடும் என்று மக்கள் பதறியபோது… நீட் என்று அரசு சொன்னால் அதற்கு மறுப்பு சொல்வீர்களா என்று அரசே மாணவர்களைப் பந்தாடியபோது… இயற்கைப் பேரழிவுதான் என்றாலும் எங்களைக் கவனிக்கக் கூட நாதியில்லை… தகப்பன் உடலைத் தேடி மகனே போனால்தான் உண்டு என்பது போல தன் இனத்தைத் தேடி தானே அலையும் நிலைக்கு மீனவன் தள்ளப்பட்ட போது…

வராத போர் இப்போது வந்துவிட்டது..!

உங்களைப் பொறுத்த அளவில் அரசியல் என்பதே 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி அதில் வென்று ஆன்மீக அரசியல் வழி நாட்டைக் காப்பாற்றுவதுதான். பரவாயில்லை… எவ்வளவோ பார்த்துட்டோம்… இதையும் பார்த்திட மாட்டோமா…!

உங்கள் அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்… உங்கள் வேட்பாளர்களின் தகுதி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய என் சிறு யோசனையை உங்கள் முன் வைக்கிறேன்.

உங்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய என் தோழருக்கு நான் சொன்ன யோசனைகள்.. அவருக்கு உங்களைச் சந்திக்கும் அவகாசம் கிடைக்காமல் போகலாம்… இந்த பொது ஊடகத்தின் மூலம் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வரும் முயற்சியாகவே இதை இங்கு சொல்கிறேன்.

முதலில் உங்களுக்கு ஒரு கருத்து…

நீங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சொந்த ஊரில் விலை போகாத மாடு நிச்சயம் கள்ள மாடாகத்தான் இருக்கும் என்று எங்கள் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்.. உன்னால் சொந்த ஊரில் வெல்ல முடியவில்லை என்றால் வெளியூரில் மட்டும் எப்படி வெல்ல முடியும் என்று உங்கள் காவலர்களைக் கேளுங்கள்.

நீங்கள் உட்பட அனைவருமே உங்களுக்கு எங்கு வாக்கு இருக்கிறதோ அந்தத் தொகுதியில் போட்டியிடுங்கள். இதிலேயே சாதிய பலம்,. பணபலம் எல்லாம் அடிபட்டுப் போய்விடும்.

இனி உங்கள் தேர்வுக்கு சில கருத்துகள்… (இவை உங்களுக்கும் பொருந்தும்)

சமூக அறிவு…

சாதி பற்றி, மதம் பற்றிய கருத்துகளை எல்லாம் அறிய வைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களைச் சுற்றி இருக்கும் சமூகம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய அறிவு எந்த அளவுக்கு உங்கள் காவலர்களுக்கு இருக்கிறது என்று சோதித்துப் பாருங்கள்.

எங்கெல்லாம் சாதிய வன்கொடுமைகள் இருக்கின்றன… எங்கெல்லாம் மதவாதம் இருக்கிறது… எந்த ஊரிலெல்லாம் வகுப்புக் கலவரங்களுக்கு வாய்ப்பிருக்கிறது என்பது பற்றியெல்லாம் பரவலாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பகுதி காவலர் வாய்ப்பு கேட்டு வரும்போது அதுபற்றிய கேள்விகளைக் கேட்டு அவர் அறிவைச் சோதித்துப் பாருங்கள். உறுப்பினர்களைச் சேர்க்கும்போதே இதைச் செய்துவிட்டால் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது வேலை எளிதாக இருக்கும்.

இது தவிர, உள்ளூரில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறாரா என்று பாருங்கள். தடுப்பணைகள் கட்டப்படாமல் நதி வெள்ளம் கடலில் கலக்கிறதா… விவசாயம் எந்த வகையில் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது… மீனவர்களின் வாழ்வாதாரம் எத்தகையதாக இருக்கிறது, அந்த ஊர் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதெல்லாம் உங்கள் காவலர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்.

பிரச்னையை அறிந்திருந்தால் மட்டும் போதாது… அதற்கு அவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது என்றும் கேளுங்கள். நல்லவிதமான தீர்வு இருந்தால் தேர்தல் வாக்குறுதியாக அதைச் சொல்ல முடியும்… வாக்காளர் மனதை வெல்ல முடியும்.

கூடவே அந்தப் பகுதியில் உள்ள வளங்கள் என்னென்ன என்று கேளுங்கள்… வளங்கள் என்றால் கனிம வளங்கள், மனித வளங்கள். பொதுவாக எல்லாத் தலைவர்களுமே கேட்பார்கள், தங்கள் பையை நிரப்பிக் கொள்ள என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. நீங்கள் அதை எப்படி மக்களுக்குப் பயனுள்ளதாக மாற்றலாம் என்பதையும் கேளுங்கள்!

அடுத்ததாக சுய ஒழுக்கம்… நீங்கள் குடும்பங்களைப் பாருங்கள் என்று உங்கள் ரசிகர்களுக்குச் சொல்லும் மந்திரம் போன்ற வார்த்தைகள் முக்கியமானதுதான். அதுபோன்ற மந்திரமாக இதையும் சொல்லுங்கள். சுய ஒழுக்கம் என்று நான் குறிப்பிடுவது புகை பிடிக்காமல் இருப்பதையோ மது அருந்தாமல் இருப்பதையோ அல்ல… அது தனிநபர் ஒழுக்கம்… அது முக்கியம்தான்… நான் சொல்ல வருவது பொதுவில் வைக்க வேண்டிய சுய ஒழுக்கத்தை… ஊழல் செய்யாமல் இருப்பதை… அதை எப்படி ஊரறியச் செய்வது..?

உங்கள் உறுப்பினர்கள் எல்லோரும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று சொல்லுங்கள்… அதோடு சேர்த்து ஆண்டுதோறும் உறுப்பினர்கள் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள். வரிக் கட்ட வேண்டிய அளவுக்கு வருமானம் இல்லை என்றாலும் கூட வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அந்த ரிட்டர்ன் ஃபைல் செய்த விவரத்தை உங்கள் இணைய தளத்தில் பதிவேற்றுங்கள். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று வழி செய்யுங்கள். அப்படியானால் அவருடைய வருமானம் எவ்வளவு வரி செலுத்தும் திறன் எவ்வளவு என்பது ஆண்டுதோறும் கணக்கில் வந்துவிடும். வெளிப்படைத் தன்மையும் இருக்கும்.

நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வதில் தப்பில்லையே… கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இயக்கமே முழுநேர பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும். அரசுப் பணிகளுக்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இயக்கத்துக்கு போய்விடும். நீங்களும் அப்படிச் செய்யுங்கள். எம்.எல்.ஏவாக இருப்பவருக்கு வழங்கப்படும் சம்பளம் இயக்கத்துக்கு… இயக்க உழைப்பின் அடிப்படையில் ஊழியருக்கு நீங்கள் சம்பளம் நிர்ணயம் செய்யுங்கள்…

அவர் வெறும் பிரஜையாக இருந்தாலும் தலைமைக் காவலராக இருந்தாலும்… உங்கள் எளிமைக்கு அது இலக்கணமாக இருக்கும்!

இந்த சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களே… அந்த சிஸ்டத்தை உருவாக்கிய தமிழக அரசியல் வரலாற்றை உறுப்பினர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள். அதற்கான பயிற்சிப் பட்டறைகளை நாடு முழுக்க நடத்துங்கள். உங்கள் உறுப்பினர்களுக்கு அதில் இருந்து கேள்வி கேட்டு தேர்வு நடத்துங்கள்.

திராவிட அரசியலையும் தலித் அரசியலையும் முக்கிய பாடங்களாக கற்றுக் கொடுங்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது… அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள் எத்தகையவையாக இருந்தன என்பதைப் பற்றி சொல்லிக் கொடுங்கள். ஒருவேளை இந்த சிஸ்டம் எப்படி கெட்டுப் போனது என்பதற்கான தரவுகள் அதில் இருக்கலாம்.

கட்சி பேதமில்லாமல் எல்லாத் தலைவர்களைப் பற்றியும் பாடம் நடத்துங்கள். அவர்கள் உங்கள் உறுப்பினர்களை இன்ஸ்பையர் ஆக்கலாம். உங்கள் உறுப்பினர்களும் காவலர்களும் அரசியல் அறிவைப் பெற அவை உதவலாம்…

உங்களுக்கும் காலம் இருக்கிறது… எனக்கும் இருக்கிறது… இன்னொரு சிட்டிங் கூட நாம் பேசலாம்.

இப்போதைக்கு விடைபெறுகிறேன்…

இப்படிக்கு,
உங்கள் அரசியல் பணியைப் பார்க்க ஆர்வமாக காத்திருக்கும்
ஒரு தமிழ் குடிமகன்

நன்றி- பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா சி.முருகேஷ்பாபு அவர்களின் முக நூலில் இருந்து

Read previous post:
புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்.

எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த...

Close