கார்த்திக் சுப்புராஜை கண்டிச்சு வைங்க! பாபி சிம்ஹாவால் ஒரு பஞ்சாயத்து?
ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் மண்டையில் பூரான் புகுந்து புள்ளக்குட்டி பெத்துரும் போலிருக்கே? என்று மனம் நொந்து கிடக்கிறாராம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ பட இயக்குனர் விஜய் தேசிங்கு. ஏன்? இந்த படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா என்பதுதான் முதல் பிரச்சனையே!
ஒரு டைரக்டரை நம்பி விட்டால், முழுசாக தன்னை ஒப்புக் கொடுக்கும் வழக்கம் ரஜினிக்கே இருக்கிறது. ஆனால் ‘நண்டு சுண்டு’ ஹீரோக்களுக்குதான் இல்லை. “இந்தாளு நமக்கு சங்கு ஊதிருவானோ” என்கிற அச்சத்துடனேயே ஒவ்வொரு காட்சியையும் கவனித்துப் பார்ப்பார்கள். அப்படியொரு சிக்கல்தான் பாபிசிம்ஹாவுக்கும். இத்தனைக்கும் இந்தப்படத்தில் ஒன்பது கெட்டப்புகளில் நடிக்கிறாராம் அவர்.
முழு படமும் முடிந்துவிட்டது. ஆரம்பத்தில் முழு கதையையும் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட பாபி சிம்ஹா, சொன்னபடி படம் எடுத்திருக்கிறாரா என்று பார்ப்பதுதானே சரி? ஆனால், இந்த படம் சரியா இருக்கா? ஓடுமா? என்றெல்லாம் தனது ஆஸ்தான இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜையும், நலன் குமாரசாமியும் அழைத்துக் கேட்க, அவர்கள் வெகுவாக குழப்பி விட்டுவிட்டார்களாம் பாபியை.
கடைசியில் டைரக்டர் விஜய் தேசிங்குக்கு தெரியாமலே இவர்கள் ஒரு கிளைமாக்ஸ் எடுத்து படத்தில் கோர்த்துவிட்டிருக்கிறார்களாம். இதில் பேரதிர்ச்சி அடைந்த டைரக்டர், “நான் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுப்பேன். கார்த்திக் சுப்புராஜையும், நலன் குமாரசாமியையும் சங்கம் கண்டிக்கணும்” என்றெல்லாம் விரக்தியோடு பேச ஆரம்பித்திருக்கிறாராம்.
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியா ‘ஒளியும் ஒலியும்’ பார்க்கறதை உடனே நிறுத்துங்க இயக்குனர்களே… இது ரொம்ப டூ மச்!
To listen audio click below :-