சி.வி.குமார் மீது கொலவெறி! ஏன்? எதற்கு?
‘மானாவாரி நிலத்தில் தானா முளைச்ச மரம்’ என்று சி.வி.குமாரை புகழ்ந்தால் யாரும் தப்பு சொல்லப் போவதில்லை. சினிமா பேக்ரவுண்ட் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து, சினிமாவுக்கு நல்ல பேக் போர்ன் ஆகியிருக்கிறார் அவர். இன்னும் சொல்லப் போனால் ‘நல்ல கதைகள் மட்டுமே செல்லுபடியாகும். மற்றதெல்லாம் அடிஷனல்தான்’ என்று நிருபித்து, தமிழ்சினிமாவில் கிளைவிட்டு நிற்பவர் அவர். அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் என்று வரிசை கட்டி அவரால் வளர்ந்த இயக்குனர்களும் நடிகர்களும் ஒரு டஜனுக்கும் மேல்! அப்படிப்பட்ட பெருமைக்குரிய தயாரிப்பாளர் சி.வி.குமார், இப்போது இயக்குனராகவும் ஒரு ஸ்டெப் மேலேறியிருக்கிறார். வார்ம் வெல்கம் சார்!
சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி வரும் மாயவன் படத்தில் சந்தீப் கிஷன், லாவன்யா திரிபாதி, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். மர்டர் மிஸ்ட்ரி டைப் கதை. சி.வி.குமாரின் கதை அறிவுக்கு அதிகம் உதாரணம் வேண்டாம். அதே நேரத்தில், “நீங்களே ஒரு படம் இயக்கலாமே?” என்று கூறிய நண்பர்களுக்கு, பார்க்கலாம் பார்க்கலாம் என்றே கூறிவந்திருக்கிறார் அவர். இனிமேலும் இந்த பதிலை கேட்கக் கூடாது என்று நினைத்த நலன் குமாரசாமி, சி.வி.குமார் இவரிடம் சொன்ன ஒரு கதைக்கு அவரே திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்து இயக்குனர் வேலை பார்க்க விட்டுவிட்டார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு குமாருக்கு நெருக்கமானவர்கள் பலர் வந்திருக்க, பாப்டா கல்வி நிறுவனத்தின் தலைவர் யுடிவி தனஞ்செயனும் வந்திருந்தார். “சி.வி.குமார் ஒரு கதையை கேட்டால், பிரிச்சு அக்கக்கா ஆராய்ஞ்சுடுவார். நாங்க தயாரிக்கவிருந்த நாலு படம் அவராலேயே நின்று போயிருக்கு. நல்லவேளை… இவர் பேச்சை கேட்டேன். தப்பிச்சேன்” என்று தனஞ்செயன் சொல்ல, அவசரமாக மைக்கை பிடுங்கிய சி.வி.குமார், “ஏற்கனவே பல அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எம்மேல கொல வெறியில் இருக்காங்க. இது வேறயா?” என்றார்.
இந்த விழாவுக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு யு ட்யூப் ‘வளவள’ ஆசாமிகளை மேடையேற்றியதால் சி.வி.குமார் மீது அங்கு வந்திருந்த பிரஸ்சும் கொல வெறியில் இருந்ததை அவர் அறிவாரோ? மாட்டாரோ?
தான் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணத்தை நுணுக்கி நுணுக்கி செலவு செய்து வரும் சி.வி.குமார், இந்த படத்திற்கு மட்டும் பேங்க் பாஸ்புக்குக்கு டி.பி வருகிற அளவுக்கு செலவு செய்திருக்கிறார். “நான் ஒரு விஷயம் வேணும்னு புரடக்ஷனுக்கு சொல்லுவேன். கடைசியா அது சுற்றி சுற்றி வந்து எங்கிட்டயே நிக்கும். என்ன பண்ணுறது. பெரிய செலவு பண்ணியிருக்கேன்” என்றார்.
சி.வி.குமாரின் கதையறிவும், பண பலமும் இணைந்து உருவாகிற படம் இது. இடைத் தேர்தலை விடவும் ஸ்பெஷலாகவே இருக்கும் என்று நம்புவோமாக!