இப்படியெல்லாம் நடக்குமா? முறுக்கு மீசை ஆதி வியப்பு!
‘தியேட்டருக்கு போனா சொத்தை எழுதிக் கேட்பானுங்கடா…’ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு பேராசை கொண்டவர்களுக்கு செம பிளேடு போட்டு வருகிறார்கள் மக்கள். இந்த ஒரு மாதமாகவே தியேட்டர் பக்கம் ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்து போனது. இனிமேலாவது திருந்தலேன்னா இஞ்சி மரபா விற்க போக வேண்டியதுதான் என்று உஷாரானவர்கள் ‘அதிரடி விலை குறைப்பு’ என்ற போஸ்டர் ஒட்டி ஆட்களை வரவழைக்க திட்டமிட்டிருந்தார்கள். இந்த நேரத்தில்தான் அந்த இனிப்பு செய்தி.
ஒரே நாளில் திரைக்கு வந்த மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய இரு படங்களுக்குமே பெரும் கூட்டம் தியேட்டர்களில். அதிலும் இந்திய திருநாட்டில் நடந்தேயில்லாத ஒரு இன்ப அதிர்ச்சி நடந்தது. மீசைய முறுக்கு படத்தின் தமிழக விநியோகஸ்தரான முருகானந்தம், முதல் ஷோ ஓப்பன் ஆன கையோடு சுந்தர்சி ஆபிசுக்கு வந்துவிட்டார். தமிழ்நாடு முழுக்க நம்ம படம் ஓட்ற தியேட்டர்கள் புல் என்ற நல்ல செய்தியை சொல்லி, சுந்தர்சிக்கும் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் ஆதிக்கும் பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்து கவுரவித்தார்.
பொதுவாக விநியோகஸ்தர்கள் படம் ஓடினால் கூட, அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது வழக்கமில்லை. அதையும் மீறி முருகானந்தத்தை பேச வைத்தது படத்தின் வெற்றிதானே?
“என் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு நானே ஆச்சர்யப்பட்டேன். இனிமே இதே அளவுக்கு சின்ன பட்ஜெட்லதான் படம் எடுப்பேன். எல்லாருக்கும் லாபம் வர்ற மாதிரி அது இருக்கும்” என்று சூளுரைத்தார் ஆதி.
புத்தி மாறாம இருந்தா, சுத்தியிருக்கிறவங்களுக்கும் சந்தோஷம்!