ஏலேய்… நாய்க்கு பேரு வச்சே, சோறு வச்சியா? விலங்குகள் நலவாரியத்தை திக்குமுக்காட வைத்த டைரக்டர்!
வாழும் வள்ளலார் ஆகிவிட்ட சிலரால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரே குழப்பம். ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒரு பீட்டா என்றால், அதே போலொரு இன்னொரு அமைப்பால் சினிமாவுக்குள்ளும் ஒரே கசமுசா. ஒரு காலத்தில் நாய், ஆடு, பாம்பு… அவ்வளவு ஏன்? கழுதையை கூட வைத்து படம் எடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் இப்போது தலையில் ஊறுகிற பேனை வைத்துக் கூட படம் எடுக்க முடியாதளவுக்கு பிரச்சனை.
ஏன்? விலங்குகள் நலவாரியம் என்ற அமைப்பு தரும் குடைச்சல்தான். ஒரு விலங்கை வைத்து நீங்கள் படம் எடுத்தால், அந்த விலங்கு நல்லா சாப்பிட்டுச்சா? நல்லா தூங்குச்சா? நல்லா உச்சா போச்சா? என்றெல்லாம் லட்சம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்துவிடுவார்கள். இந்த கெட்ட நேரத்தில் நாயை மையமாக வைத்து ஜுலியும் நாலு பேரும் என்றொரு படத்தை தயாரித்து இயக்கி நடித்தும் இருக்கிறார் சதீஷ்.ஆர்.வி.
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தவர், அவரே பத்து வருஷமாக சேமித்த பணத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் வரும் அந்த நாய், இவரது வீட்டு வளர்ப்பு. குட்டியிலிருந்தே இது குளிச்சதா? சாப்பிட்டுச்சா? கக்கா போச்சா? என்று கரிசனமாக பார்த்து வந்தாலும், நேரடியாக செக் பண்ணுவதற்காக விலங்குகள் நலவாரியத்திலிருந்தும் வந்துவிட்டார்களாம். நல்லவேளை… எவ்வித கெடுபிடியும் இல்லை.
அமெரிகாவிலிருக்கும் நாய் கடத்தல் சமாச்சாரத்தையும், இந்தியாவிலிருக்கும் நாய் அதிர்ஷ்ட சமாச்சாரத்தையும் முடிச்சுப் போட்டு ஒரு சிரிப்புப்படம் எடுத்திருக்கிறார் சதீஷ் ஆர்.வி. படத்தில் விஜய் டி.வி புகழ் அமுதவாணன் ஹீரோவாகவும், மானாட மயிலாட புகழ் மானசா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
நாய் ஜுலிக்கு முத்தமெல்லாம் கொடுக்கும் மானசா, பக்கத்திலேயே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கும் ஹீரோவை முத்தமிட்டாரா? இந்த முக்கியமான கேள்விக்கு மார்ச் மாதம் பதில் கிடைக்கும். ஏனென்றால் ஜூலியும் நாலு பேரும் படம் மார்ச்சில்தான் ரிலீஸ்.