சினிமாவிலிருந்து விலகுகிறாரா அமலாபால்?

அமலாபால் கால்ஷீட் கிடைப்பதென்பது ஏதோ அகிரகுரோசோவா சமாதியிலிருந்து அல்லி பூ பறித்து வருவதற்கு ஒப்பானது என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தார் அவர். “யாருய்யா அவரு, எனக்கே அவரை பார்க்கணும் போலிருக்கே?” என்று தவியாய் தவிக்கும் மகா ஜனங்களே… அப்படியொரு பில்டப் கொடுத்தது வேறு யாருமல்ல, அதே அமலாபால்தான்!

‘ஆடை’ என்ற படத்தில் ஆடையை துறந்து நடித்திருக்கிறார் அவர். பெரிய ‘துணி’ச்சல்தான்! இந்தப்படத்தின் ஐகானே அதுதான். ‘இப்படியொரு படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டேன்’ என்பது பற்றியெல்லாம் அவரே தன் திருவாய் மலர்ந்தார்.

“படங்களில் நடிப்பதையே விட்டுவிடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்தான் என் மேனேஜர் மூலம் இந்த அழைப்பு வந்தது. முதலில் கதையை சொல்லச் சொல்லுங்க. பிடிச்சுருந்தா பார்க்கலாம் என்று கூறினேன். வெட்டப்படாத தலைமுடி, நீண்ட தாடியுடன் என்னை வந்து சந்தித்தார் இப்படத்தின் டைரக்டர் ரத்னகுமார். காதல் தோல்விக்கு பின் தன் காதலியிடம் ‘ஒரு படம் பண்ணி ஜெயிச்சுட்டு வர்றேன்’னு சபதம் போட்ருப்பார் போல என்று நினைத்தேன். ஒரு வித்யாசமான கதையை சொன்னதும் பிடிச்சுருந்தது. இதில் ஆடையில்லாமல் நான் நடிச்ச காட்சிகளை படமாக்கறது எப்படி? சுற்றியிருக்கும் ஆண்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? என்று ஒரு பக்கம் நினைத்தாலும், நான் அப்படி நடிப்பதற்கு என்னை முதலில் தயார் படுத்திகிட்டேன்”.

“செட்ல குறிப்பிட்ட பதினைஞ்சு பேரை தவிர மீதி அத்தனை பேரையும் வெளியே அனுப்பிட்டுதான் எடுத்தோம். முக்கியமா எல்லாருடைய செல்போனும் செட்டுக்கு வெளியே வைக்க சொல்லியிருந்தார்கள். ரொம்ப பாதுகாப்பா அந்த காட்சிகளை எடுத்தாங்க” என்றார் அமலாபால்.

ஆடை படத்தில் நடித்த அமலாபாலுக்கு சம்பளம் என்ன? அங்குதான் சிலிர்க்க வைக்கிறது அமலாவின் கால்குலேஷன். “எனக்கு சம்பளம்னு ஒரு பைசா வேணாம். இந்தப்படத்தின் வசூலில் 25 சதவீதத்தை கொடுத்துடுங்க” என்றாராம். இவரது ஆடையில்லா தோற்றத்தை ட்ரெய்லரில் பார்த்த நாளிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கும் ரசிகர்கள், தியேட்டருக்கு பக்கத்திலேயே ரூம் போட்டு தங்க ஆரம்பித்திருக்கிறார்கள். திரும்ப திரும்ப பார்த்து வைக்கிற வெறியோடு காத்திருக்கும் இவர்கள், படத்தை எந்தளவுக்கு கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை இப்பவே கணிக்க முடிகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம்.

பாண்டிச்சேரியிலிருக்கும் தியான பூமியான ஆரோவில் பகுதியில் தற்போது தங்கியிருக்கும் அமலா, தனிப்பட்ட முறையில் பேசும்போது தத்துவமாக பொழிகிறாராம். இளைத்து ஜீரோ சைசுக்கு வந்திருக்கும் அமலா, எதிர்காலத்தில் ஒரு சன்னியாசியாக போனாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள்.

ஆடையில்லாத அமலாபாலை திரையில் பார்த்துவிட்டு எத்தனை பேர் சன்னியாசியாக போகிறானோ… அதை நினைத்தால்தான் பெரும் கவலையாக இருக்கிறது!

Read previous post:
ராட்சசி / விமர்சனம்

Close