என் படத்தை கிழிங்க! இயக்குனர் ஆவேசம்!
நெகட்டிவ் விமர்சனம் செய்கிற நிருபர்களை, நறநறவென நோக்கும் படைப்பாளிகள் கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் இருக்கிறார்கள். “இவிய்ங்களுக்கெல்லாம் விமர்சனமே பண்ணத் தெரியல” என்று அண்மையில் ஒரு பெண் இயக்குனர் கொதித்ததை கூட நாடறியும். “அட எங்களை விடுங்க. எழுத தெரியல. ஆனால் படம் பார்க்கிற ரசிகன் பாதியிலேயே எழுந்து ஓடினானே… அது ஏன்ங்க?” என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.
இப்படி விமர்சனங்களின் மீதும், செய்தியாளர்களின் பார்வை மீதும் செம கோபத்திலிருக்கும் சினிமாக்காரர்கள் மத்தியில், “என் படத்தை கிழிங்க. கவலையில்ல” என்று சொல்கிற தைரியம் ஒருவருக்கு இருந்தால் அவரை எப்படி பார்ப்பீர்கள்? அப்படிதான் பார்க்க வைத்தார் மிஸ்டர் ஜெய். ‘ஆந்திரா மெஸ்’ பட இயக்குனர்.
அதுமட்டுமா? “இந்தப்படம் ஆரம்பிச்சு மூணு வருஷமாச்சு. பல்வேறு போராட்டங்கள். கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரியா வந்திருக்கோம்” என்றார். இதே கோடம்பாக்கத்தில்தான் ‘ஜஸ்ட் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி விழுந்த முட்டை’ என்று பாசமலர் காலத்து படத்தை அறிமுகப்படுத்துகிற சம்பவங்களும் நடந்ததுண்டு. இப்படி எடுத்த எடுப்பிலேயே உண்மையை பேசி நம்மை கவர்ந்த ‘ஆந்திரா மெஸ்’ படம் இன்னும் சில வாரங்களில் ரிலீஸ்.
“பொதுவா பெண்கள்தான் வீக்கர் செக்ஸ்சுன்னு சொல்வாங்க. ஆனால் நிஜம் அதுவல்ல. ஆண்கள்தான். ஒரு ஆணுக்கு தன் வீட்டிலிருக்கிற மனைவியிடம் பிரச்சனை. கோபத்தை அங்கு காட்ட முடியாமல் வெளியில் கிளம்பினால், அதை யார் மீது இறக்கி வைப்பான்? இப்படி துவங்குகிற கதை எங்கு போய் முடிகிறது? என்பதுதான் இந்தப்படம்” என்றார்.
நான்கு திருடர்கள். ஒரு ஜமீன்தார். அவரது இளம் மனைவி என்று சுற்றி வருகிற கதையை இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத புது கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் ஜெய்.
ராஜ் பரத், தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஆந்திரா மெஸ்ல அரிசி இருக்கோ இல்லையோ? மிளகாய் நிச்சயம்! எரியப் போறது மனசா, மவுத்தான்னுதான் பார்ப்போமே?