மீண்டும் ஒரு பிரபாகரன் கதை! இதுலயாவது கத்தரி போடாம இருப்பாங்களா?
ஈழ பிரச்சனை பற்றி படம் எடுப்பவர்களை, நிம்மதியாக ஒரு வாய் கார்ப்பரேஷன் வாட்டரை கூட குடிக்க முடியாதளவுக்கு மன உளைச்சல் தருகிற அமைப்புகளில் ஒன்று, சென்சார்! மதியம் புளிக்குழம்பு ஊற்றி சாப்பிட்டிருந்தால் கூட, ‘அதில் புலி இருக்கே பாஸ்…’ என்கிற அளவுக்கு அட்ராசிடி அதிகாரிஸ் நிறைந்த ஏரியா அது! எப்படியோ தப்பிப் பிழைத்து ‘ராவண தேசம்’ என்றொரு படத்தை கொடுத்தார் இயக்குனர் அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி.
இவருக்கு சொந்த மண் தமிழல்ல. தெலுங்கு! அதன் காரணமாகவும் அப்படம் சேதாரமின்றி வந்திருக்கக் கூடும். அதில் எவ்வளவு நேர்த்தியாக ஈழ மண்ணின் அவஸ்தைகள் சொல்லப்பட்டனவோ, அதைவிட அழுத்தமாக இன்னொரு படத்துடன் வந்திருக்கிறார் அவர். படத்தின் பெயர் ‘நான் திரும்ப வருவேன்’. இதில் மாவீரன் பிரபாகரனாக தெலுங்கு ஹீரோ மனோஜ் மஞ்சு நடித்திருக்கிறார்.
“நம்ம பக்கத்து நாடான இலங்கையில் இவ்வளவு கொடுமைகள் நடந்தது பற்றி கேள்விப்பட்டு மனம் வேதனைப்பட்டிருக்கேன். சுதந்திரத்திற்காகதானே இத்தனை வேதனையை அந்த மக்கள் அனுபவிச்சாங்க நினைப்பேன். அதே மாதிரி ஒரு கதையை அஜய் ஆன்ட்ரூஸ் எங்கிட்ட சொன்னதும் மனசு கலங்கிருச்சு. மிக நுணுக்கமா இந்த கதையை எழுதியிருக்கிறார் அஜய். அதுமட்டுமல்ல.. .. ஒரு மாவீரனின் கேரக்டர்ல நான் நடிக்கிறேன்னு நினைக்கும் போதே புல்லரிக்குது. இப்படியொரு கேரக்டர்ல நடிச்சுட்டு இருக்கும்போதே செத்தா கூட பெருமைதான்” என்றார் மனோஜ் உணர்ச்சிவசப்பட்டு.
போர், அதன் உச்சக்கட்ட ஆக்ஷன் எல்லாவற்றையும் அப்படியே தத்ரூபமாக எடுத்திருக்கிறாராம் அஜய் ஆன்ட்ரூஸ். செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இன்னும் சென்சார் சர்டிபிகேட் வாங்கவில்லை என்று நினைத்தால்தான் குலை நடுங்குகிறது.
இதுக்கு தனியா ஒரு போர் புரியணுமே, வீரனுங்களா?