அதர்வாவுக்கு யாராவது புத்தி சொல்லக் கூடாதா?
தொழுவத்திலேயே தவழ்ந்த குதிரையை, தோட்டத்துல கொண்டு போய் விட்ட மாதிரியாகிருச்சு அதர்வாவின் நிலைமை. சினிமா குறித்த எந்த புரிதலும் இல்லாமல் திடுக் திடுக்கென அதிர வைக்கிறாராம் தயாரிப்பாளர்களை. அதன் விளைவாக அறிமுகம் ஆன நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே கொடுத்து வருகிறது குழந்தை.
ஏனிந்த படுதோல்விகள்? தானும் உணராமல், சொல்ல வருகிறவர்களையும் சொல்ல விடாமல் அநியாயத்துக்கு ஆட்டம் போடுவதாக அலறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். யார் வந்து கதை சொன்னாலும், “பட்ஜெட் ரொம்ப கம்மியா இருக்கே. நல்லா 12 கோடி, 15 கோடியில் எடுப்பது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சொல்லுங்க” என்கிறாராம். அதோடு விட்டாரா? வழி தவறிய ஆடு போல வந்து சிக்கும் தயாரிப்பாளர்களிடம், “நானே இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி பேஸ்ல பண்ணித் தர்றேன்” என்று ஆஃபர் வைப்பதால், எடுக்கிறார்கள் ஓட்டம்.
அதர்வா என்கிற பெயருக்கு சீட்டு எடுக்கும் கிளி கூட, ‘திருவோடு’ படத்தை தேடி தேடி எடுக்கும் காலத்தில், “உங்களை வச்சு யாருங்க 15 கோடிக்கு படம் எடுப்பா?” என்று கேட்கிற ஒருவரையும் பக்கத்தில் நெருங்க விடுவதில்லையாம்.
விஷயம் அதோடு முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. “அஜீத் போல நானும் இனிமேல் என் பட பிரமோஷன்களுக்கு வரப்போவதில்லை” என்று கூறி வருகிறாராம். சமீபத்தில் ‘இமைக்கா நொடிகள்’ பட நிகழ்ச்சிக்கு அவர் வராமல் போனதற்கும் இதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணம்… பட டைட்டிலில் நயன்தாரா பெயரை முதலில் போட்டு, பிறகுதான் அதர்வா பெயரை போடுகிறார்களாம். அந்த எரிச்சலும்தான்…
ஸ்…சுத்தம்!