அவ்ளோ நல்லவரா அரவிந்த்சாமி? பரவசப்படும் பாஸ்கர் அண் கோ!
நான் போட்ட பணமெல்லாம் வரியாவும் வட்டியாவும் போச்சே என்று கதறுகிற தயாரிப்பாளர்களுக்கெல்லாம், ஆறுதல் சூப் கொடுத்து அசர விடுகிறார் அரவிந்த்சாமி. ‘நடிப்பதற்கு மட்டுமல்ல, நான் குடிப்பதற்கும் நீதான் செலவு பண்ணணும். மொத்த சம்பளத்தையும் முன்னாடியே கட்டு’ என்கிற அட்ராசிட்டியெல்லாம் அவரிடம் இல்லலே இல்லை. ‘படம் வெளியாகிற நேரத்தில் கொடுத்தால் போதும்’ என்கிறார். அதுவும் ‘நான் குடிக்கிற வாட்டர் பாட்டில், காருக்கு பெட்ரோல் அலவன்ஸ், இதெல்லாம் வேணவே வேணாம்’ என்கிறார். இந்த உயரிய பண்புகளால் வியக்க வைக்கும் அரவிந்த்சாமி, விரைவில் வெளிவர இருக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரிலீசுக்கு பெரும் துணையாற்றினாராம்.
‘இப்படியொரு ஹீரோவை நான் பார்த்ததே இல்ல’ என்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் அடிதடி முருகன்.
மே 11 ந் தேதி திரைக்கு வருகிறது பாஸ்கர் தி ராஸ்கல். படத்தை பரதன் பிலிம்ஸ் வெளியிடுகிறது. சினிமா இப்ப இருக்கிற சுச்சுவேஷன்ல ஒரு படத்தை தயாரிக்கறதும், அதை பிரச்சனையில்லாம வெளியிடுறதும்தான் பெரிய கஷ்டம். நல்லவேளையாக பரதன் பிலிம்ஸ் அந்த கஷ்டத்தை தீர்த்து வச்சுருக்கு என்று நல்ல செய்தியாக வாசித்துக் கொண்டேயிருந்தார்கள் இப்படத்தின் பிரஸ்மீட்டில்.
கேள்விகளுக்கு பதில் சொன்ன அரவிந்த்சாமியிடம், உங்க ட்விட்டில் எல்லாம் ஒரு ஆக்ரோஷம் தெரியுதே. அவ்ளோ பெரிய கோபக்காரரா நீங்க? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. சிரித்துக் கொண்டே பதில் சொன்ன அ.சாமி, ‘நான் ஒரு சாமானியனாதான் அந்த ட்விட்டுகளை போடுறேன். அந்த நேரத்தில் நான் கோபமாக இருக்க மாட்டேன். சாதாரணமாதான் இருப்பேன்’ என்றார்.
படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடி அமலாபால். சூரி காமெடி பண்ணியிருக்கிறாராம். பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு விஜய் ஜோக் பார்த்திருப்போம். அதே இயக்குனர் சித்திக்கின் படம் இது. காமெடிக்கு உத்தரவாதம் உண்டு என்று நம்பலாம்.
எங்கே… சூரிய வடிவேலாக்கிக் காட்டுங்க பார்க்கலாம்!