அருவி / விமர்சனம்

சாக்கு பையில் சுருட்டி சாக்கடையில் எறிய வேண்டிய கதைகளே ‘கவுரவ மைனர்களாக’ நடமாடுகிற கோடம்பாக்கத்தில், ஒரு மாற்று சினிமாவின் மகோன்னதம்தான் ‘அருவி’. தமிழ் சினிமாவின் அபத்தங்களை எதைக் கொண்டு அடிப்பது? எதைக் கொண்டு கழுவுவது? என்றெல்லாம் கவலைப்படுகிற அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கிளி, தன் அழகிய மூக்கால் சீட்டெடுத்தால், அடடா அழகே… இந்த ‘அருவி’யின் படமல்லவா வருகிறது?

இயல்பாக துவங்கி, பரபரப்பாக நகர்ந்து, படபடப்பாக முடியும் அந்த கடைசி நிமிஷங்களில் உடம்பெல்லாம் நடுங்காமல் ஒருவராவது இருந்துவிட்டால், அவருக்கு இந்தியாவின் ‘இரும்பு மனுஷன்’ பட்டமே கொடுத்துவிடலாம். அறிமுக இயக்குனர் அருண் பிரபுவின் வேர்கள் யார் யாரோ? அவர்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த நமஸ்காரம்.

இப்படியொரு அற்புதமான இயக்குனரும், ஹீரோயினும் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்கிற சந்தோஷத்தில், கதையை உளறித் தொலைத்தால் என்னாவது? ‘கட்டுப்படுத்திக்கோ’ என்கிறது மூளை. முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

நல்ல குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கிற ஒரு பெண் குழந்தை, இளஞி ஆன பின் என்னாவாகிறாள்? அவளது சேர்க்கையும் சின்ன சின்ன சந்தோஷமும் எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது அவளை? இதுதான் அருவியின் ஒன்லைன்.

ஒரு முழு படத்தையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டு அநாயசமாக நடக்கிறார் அறிமுக ஹீரோயின் அதிதி பாலன்! சுமக்கிற இந்த முதல் மூட்டையே, தமிழ்சினிமாவின் ‘உர மூட்டையாய்’ அமைந்தது அதிதியின் அதிர்ஷ்டம். சேது விக்ரம் போல, அழகி நந்திதா தாஸ் போல, அறம் நயன்தாரா போல, அருவி அதிதி என்று காலம் கொட்டை எழுத்தில் பதிவு செய்து கொள்ளும். பாராட்டுக்கள்மா….!

பல நாட்கள் பட்டினி கிடந்து நெஞ்செலும்பெல்லாம் வெளியே வருகிற அளவுக்கு அருவியில் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் இந்த அதிதி.

தோளில் தொங்குகிற சின்ன ஹேன்ட் பேக். அதை இறுக்கி மார்போடு அணைத்துக் கொள்ளும் மேனரிசம். அதுவே கோபமாக இருக்கும்போது, அப்படியே கூந்தலை வாரிக் கொண்டையாக முடிகிற ஸ்டைல், தன்னை விசாரித்துக் கொண்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரியை, ‘எழுந்து போடா…’ என்று அதட்டுகிற உறுதி… காட்சிக்கு காட்சி விஸ்வரூபித்துக் கொண்டே போகிறார் அதிதி. 500 நாயகிகளை வரச்சொல்லி, நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டவராம் இவர். கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை ஒதுக்கிவிட்டு, ஆழ்கடல் முத்து ஒன்றை தேர்ந்தெடுத்த இயக்குனர் அருண் பிரபுவுக்கு மறுபடியும் ஒருபாராட்டு.

படத்தில் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்றொரு நிகழ்ச்சி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக அடுத்தவனின் மூக்கு வரை மட்டுமல்ல… அதற்குள்ளேயும் விரலை விட்டு மூச்சையே நிறுத்தத் துணிகிற சேனல்களின் திமிரையும், சுதந்திரத்தையும் செருப்பால் அடித்திருக்கிறார் அருண் பிரபு. அந்த சேனலுக்குள் அதிதி நுழைந்த பின், டூ வீலருக்கு பிளைட் என்ஜினை பூட்டியது போல வேகமெடுக்கிறது படம்.

அதிதி மட்டுமா படம்? இல்லையில்லை… இந்த படத்தில் வரும் எல்லாருமேதான்!ஒருவர் இல்லையென்றாலும், தன் பொக்கைப் பல் தெரிய சிரித்திருப்பாள் இந்த கே.ஆர்.விஜயா.

சொல்வதெல்லாம் சத்தியம் ஆங்க்கர் லட்சுமி கோபால்சாமி (சரியாதான் எழுதியிருக்கேன்), சீரியல் டைரக்டர் கவிதா பாரதி, அந்த யூனிட்டில் பணியாற்றும் உதவி இயக்குனர் பிரதீப் ஆன்ட்டனி, அசிஸ்டென்ட் சுபாஷ், ‘ரோல்ல்ல்ல்ல்ல்லீங் சார்…’ என்று முழங்கும் அந்த கேமிராமேன், தொகுப்பாளினி மேடமே இனிமே நம்ம செட்டப்புதான் என்ற சந்தோஷத்தில் பொங்கும் அந்த வாட்ச்மேன் தாத்தா. இப்படியாகப்பட்ட எல்லாரும்.

ஃபுல் மேக்கப். டைரக்டர் என்ன சொன்னாலும் தன் நோக்கம் ஒன்றே குறியாக அலட்டும் லட்சுமி பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவ்வளவு பதற்றமான சூழ்நிலையிலும், ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று கிளம்புவதெல்லாம் என்ன ஒரு கான்பிடன்ட்?

தமிழ்சினிமாவுக்கு திருநங்கைகள் என்றால் அவ்வளவு கேவலம். முதன் முறையாக அப்படியொரு அவலம் நிகழாமல், அஞ்சலி வரதன் என்கிற எமிலிக்கு அழகு சேர்த்திருக்கிறார் அருண் பிரபு. ‘என் பச்சை ஜட்டிய பார்த்தியா?’ என்றபடியே என்ட்ரி கொடுக்கும் எமிலி, ஆரம்பத்தில் திடுக்கிட வைத்தாலும் போக போக நம் சகோதரிகளில் ஒருவராகிறார்.

நாம் பார்க்கிற ஒவ்வொரு சீரியலுக்கு பின்னாலும் செத்து சுண்ணாம்பாகிற இயக்குனர்களின் அவஸ்தையை கண் முன் நிறுத்துகிறார் கவிதா பாரதி. நிஜத்தில் அவரும் ஒரு சீரியல் இயக்குனர் என்பதால், காட்சியோடு ஜெல் ஆகிவிட்டார் மனுஷன்.

‘கடைசியா எப்ப அழுதேன்?’ என்று சொல்லும் அந்த வட்டிக்காரன், ‘ஊர்ல பணியாரக்கிழவி செத்துப்போச்சு’ என்றொரு நீண்ட கதை சொல்ல ஆரம்பிக்க… தியேட்டர் ‘பின் டிராப்’ ஆகிறது. மேலே ஒரு தோசை, கீழே ஒரு தோசை. நடுவுல… என்று சொல்ல முடியாமல் தேம்பி அழும் அவர், ‘கடைசியா அந்த கிழவி மேல கொஞ்சம் விறகு, கீழே கொஞ்சம் விறகு. நடுவுல கிழவி’ என்று அந்த தோசையை போலவே கிழவியையும் ஒப்பிட்டு முடிக்கையில் பொசுக்கென எட்டிப்பார்க்கிறது கண்ணீர்.

படு மொக்கையான நாட்டாமை கதையை சொல்லி முடிக்கும் அந்த உதவி இயக்குனர், அதையே கிளைமாக்ஸ் யுக்தியாக பயன்படுத்துவது நுட்பமான திரைக்கதையின் உச்சம்!

‘அருவி’ என்று படத்திற்கு பெயர் வைத்துவிட்டு அருவிக் காட்சிகள் இல்லாமலா? ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் நம் மீதும் அருவியின் துளிகளை தெளிக்க விட்டிருக்கிறார். படத்தில் பயன்படுத்தப்பட்ட லைட் மூட், அப்படியே படத்திற்குள் இழுத்துக் கொள்கிறது நம்மை.

அருவியின் முன் கதை சொல்லும் காட்சிகளை பரபரவென நகர்த்தி, அதே அருவியின் பின் கதையை நிறுத்தி நிதானமாக சொல்லியிருக்கும் யுக்தியில் தெறிக்க விடுகிறார் எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா.

பின்னணி ஒலி, இதமான ஒத்தடத்திற்கு நிகரான பாடல்கள் என்று பிந்து மாலினி, வேதாந்த் இசை அப்படியே கரைந்து போக வைக்கிறது.

‘வாட்டர் பாக்கெட்’ உலகமிது! இங்குதான் அருவியையும் கை பிடித்து அழைத்து வந்திருக்கிறார் அருண்பிரபு. அள்ளிப் பருகுவதும், ஆனந்தமாய் கூத்தாடுவதும் அவரவர் அதிர்ஷ்டம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உங்க ரசிகரா இருக்கறது தப்பா? சொல்லுங்க ரஜினி சார்?

https://www.youtube.com/watch?v=AgjNAt8iSFA&t=3s

Close