ஜனங்களை நசுங்கவிட்ட பிரச்சனைதான் ரூபாய் படமா?
ஒரே நாள் இரவில் கழுதைகளின் உணவானது ஆயிரம் ஐநூறுகள்! இந்த பேரதிர்ச்சியிலிருந்தே இன்னும் ஜனங்கள் மீளவில்லை. நாளொரு நசுக்கலும், பொழுதொரு பொசுங்கலுக்கும் ஆளாகியிருக்கும் பொதுஜனம், பணத்தை எங்கு பார்த்தாலும். “இதுக்கு எத்தன நாளு ஆயுசு விதிச்சிருக்கானுங்களோ?” என்று புலம்புகிற அளவுக்கு அதிர்ச்சிகள் தொடர… ‘ரூபாய்’ என்ற பெயரிலேயே ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும்? அதுவும் யாரோ ஒரு காமா சோமா டைரக்டர் இயக்கியிருந்தால் கூட பரவாயில்லை. சாட்டை என்ற படத்தின் மூலம், ஆசிரியர்களின் மரியாதையை சமூகத்தில் உயர்த்திக் காட்டிய சென்சிடிவ் இயக்குனர் அன்பழகன் இயக்கியிருக்கும் படம் என்பதால், ஒரு ஆர்வம் ஜனங்களுக்கு.
வரும் 14 ந் தேதி திரைக்கு வரப்போகும் ‘ரூபாய்’ படத்தில் கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதே கயல் ஆனந்தி. (என்னப் பொருத்தம் இப்பொருத்தம்?)
கள்ளநோட்டு பற்றி பேசுவாரோ? நல்ல நோட்டு பற்றி பேசுவாரோ? கண்டெயினரில் போன 570 கோடி பற்றி பேசுவாரோ? சேகர் ரெட்டி நோட்டு பற்றி பேசுவாரோ? அல்லது மோடியின் மஸ்தான் வேலைக்கு பலியான நோட்டுகள் பற்றி பேசுவாரோ? என்று ஓராயிரம் டவுட் நமக்குள் இருக்கிறது.
ஆனால் சாட்டை அன்பழகன் பதற்றப்படாமல் சொல்கிறார் இப்படி.
“ரூபாய்” திரைப்படம் பணம் பற்றியதுதான். ஆனால், நேரடியாக மத்திய அரசைத் தாக்கி எடுத்த படமல்ல. தவறான வழியில் வில்லன் சம்பாதித்த பணம், நடுத்தர, ஏழை மக்களிடம் அதாவது சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மாதிரி ஆட்களிடம் சிக்கும்போது அவர்கள் படும்பாடு, இறுதியில் அந்தப் பணத்தை எப்படி ஒப்படைக்கிறார்கள், அந்தப் பணம் எப்படி அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறது என்பதை உச்சகட்ட சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறோம்.
சென்னை, தேனி வழியாக கேரளா என்று பயணப்படும் படம், காசு கொடுத்துத் தியேட்டரில் பார்ப்பவர்களூக்கும் பயன்படும்.“ என்றார்.