எங்க வேணா எடுக்கலாம்! ஆனா காஷ்மீருக்கு போனோம்… வம்பை விலை கொடுத்து வாங்கிய டைரக்டர்?
‘சாலைகள்தான் நம் பயணத்தை தீர்மானிக்கின்றன’ என்கிறார் ‘சாலை’ படத்தின் இயக்குனர் சார்லஸ். ஒருவேளை சென்னையிலிருக்கும் குண்டும் குழியுமான சாலைகள் பற்றிதான் சொல்ல ஆரம்பிக்கிறாரோ என்று காது கொடுத்தால், அய்யே… அந்த பிரச்சனையெல்லாம் நமக்கெதுக்கு? நம்ம லெவலே வேற என்பது போல, காஷ்மீர் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். இவர் இயக்கி வரும் ‘சாலை’ என்ற இந்தப்படம் முழுக்க முழுக்க காஷ்மீரிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.
“கதைங்கறது எல்லா இடத்திலேயும் இருக்கு. ஆனால் அதை பிரமாண்டமாகவும் அழகாகவும் சொல்றதுக்கு ஒரு களம் கிடைக்கணும் அல்லவா? அப்படி நான் யோசித்தபோதுதான் காஷ்மீர் என் மனசுக்குள் வந்தது. கதைப்படி காஷ்மீருக்கு பயணமாகும் ஹீரோ அங்கு சந்திக்கும் சில விஷயங்கள்தான் இப்படத்தின் கதை” என்றார். இது த்ரில்லர் வகை படமாம். நாட்டுப்பற்று, தேசியக் கொடி என்று பல படங்களில் அரைத்த மாவுதான்… என்ற முடிவுக்கு நாம் வந்தால், “ஹலோ. இது வேற லெவல் படம்ங்க” என்றார் திரும்ப திரும்ப!
விஷ்வா க்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் சாலையில், முக்கிய ரோலில் ஆடுகளம் நரேனும் நடித்திருக்கிறார். “மைனஸ் 30 டிகிரியில் படமாக்குனோம். எலும்புக்குள்ளே போயிருச்சு குளிர். உயிரோடு திரும்புவமான்னு கூட சில நேரங்களில் நினைச்சிருக்கோம். அங்கிருக்கும் ராணுவ கெடுபிடியெல்லாம் தாண்டி, முழுக்க முழுக்க காஷ்மீர் மக்களின் ஒத்துழைப்போடுதான் இந்தப்படத்தை எடுத்துருக்கோம். விஷுவல் ட்ரிட்டாவும், மிரட்டலாவும் இருக்கும். பாருங்க… பார்த்துட்டு சொல்லுங்க…” என்று கான்பிடன்ட் கந்தசாமியானார் சார்லஸ்.
உலகப் புகழ் பெற்ற ‘தால்’ ஏரியில் ஷுட்டிங் நடக்கும் போது படகு கவிழ்ந்து நாங்களே போட்டோ ஆகிவிடப் பார்த்தோம் என்று சார்லஸ் சொல்லும் போது அவர் கண்களில் தெரிந்த திகில் படம் பார்க்கும் ரசிகனின் கண்களிலும் தெரிந்தால் சாலை ஹிட்! பார்க்கலாம்….