சக்சஸ் மீட்! தயாரிப்பாளர் பெயரை மறந்த இயக்குனர்!
பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், டிக்டிக்டிக் ஹிட்!
கண்ணுக்கு தெரிந்த பிளாப் என்றாலே, ‘வசூலில் வெற்றி வெற்றி’ என்று விளம்பரம் கொடுத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளும் ஏரியாவில், நிஜமாகவே கலெக்ஷன் சிறப்பு என்றால் சும்மாயிருப்பார்களா? பிரஸ்சை கூட்டி, ‘ஜெயிச்சுட்டோம்… ஜெயிச்சுட்டோம்’ என்று சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்கள். இந்த சந்தோஷத்தை மேலும் சந்தோஷமாக்கியது ரவியின் மகன் ஆரவ் பர்த் டே! இதே நிகழ்ச்சியில் வைத்து கேக் வெட்டியது குழந்தை. ஆஹா… ஹேப்பி. (அவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் தைரியமாக மைக் பிடித்து பேசியது இன்னும் அழகு)
“எங்கிட்ட எப்ப டைரக்டர் ஆகப்போறீங்க என்று எல்லாரும் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. இப்ப சொல்றேன். என் மகன் ஆரவ் நடிக்கிற படத்தை நானே இயக்கப் போறேன்” என்கிற சந்தோஷ செய்தியை நாட்டுக்கு அறிவித்தார் ஜெயம் ரவி.
“இந்தப்படத்தின் கதையை நாங்க பிரண்ட்ஸ்கள்ட்ட சொன்னப்போ, ‘உங்களுக்கு பைத்தியமா பிடிச்சுருக்கு?’ என்று முகத்திற்கு நேரயே விமர்சனம் செஞ்சுருக்காங்க. இருந்தாலும், இந்தப்படத்தை எடுக்கிறோம். கண்டிப்பா ஹிட் ஆகும்னு நான்தான் டைரக்டர் சக்தி சவுந்தர்ராஜனுக்கு நம்பிக்கை கொடுத்தேன். எங்க நம்பிக்கை வீண் போகல. மக்கள் புதுமையான படங்களுக்கு எப்பவும் வரவேற்பு கொடுப்பாங்க என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கு” என்றார் ரவி.
சுமார் ஒரு டஜன் பேர் மேடையேறினார்கள். டைரக்டர் உட்பட யாருமே இந்த படைப்பு உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் பெயரை ஒரு மரியாதைக்காக கூட உச்சரிக்கவில்லை. நல்லவேளை… பெரிய மனசு பண்ணி, தன் மிக நீண்ட உரையின் ஒரு ஓரத்தில் தயாரிப்பாளரின் பெயரை சொல்லிவிட்டு அமர்ந்தார் ஜெயம் ரவி.
ஒங்களுக்கெல்லாம் ‘ஸ்பேஸ்ல’ சிலை வச்சு மகிழணும்யா…!