உள்ளே வராதே! விரட்டப்பட்ட விஜய் சேதுபதி!
ஆரம்பத்திலிருந்தே மிக மிக தெளிவாக இருக்கிறார்கள் மாணவர்கள். தமிழகம் முழுக்க பரவியிருக்கும் இந்த மாணவர் எழுச்சி, மக்களுக்கு சொல்வதற்கு ஓராயிரம் உள்ளடக்கங்களை கொண்டிருக்கிறது. அதில் மிக மிக முக்கியமானது இதுதான். “ எங்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைக்காதீர்கள்! ”
இந்த பதிலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் போராட்ட களத்திலிருந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் அவர்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வரும் ஹீரோக்களை கூட ‘யாருக்கு தகுதியிருக்கிறது, இல்லை’ என்று யோசித்து யோசித்துதான் உள்ளே விடுகிறார்கள். அப்படி வருகிற அவர்களிடம், விழுந்தடித்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொள்வதோ, ஆட்டோகிராப் வாங்குவதோ இல்லாமல் சக போராளி என்கிற கண்ணோட்டத்துடன் அனுமதிக்கும் மாணவர்களின் பக்குவம்… பலே பலே!
நடிகர்களிடம் மட்டுமல்ல… அரசியல்வாதிகளிடமும் இதே அணுகுமுறையைதான் கடைபிடிக்கிறார்கள் அவர்கள். சிம்பு, லாரன்ஸ் போன்ற ஒரு சிலருக்கு மட்டும்தான் அங்கு இடம் கிடைக்கிறது. மற்றவர்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை அவர்கள். இந்த நிலையில்தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டத்தில் நுழைந்தார் விஜய் சேதுபதி. முகப்பிலேயே அவரை தடுத்து நிறுத்திய மாணவர்கள், நீங்க யாரும் உள்ளே வர வேண்டாம். தயவு செய்து திரும்பி போயிருங்க என்று கட் அண்டு ரைட்டாக முறைப்பு காட்ட… வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டார் விஜய் சேதுபதி.
மாணவர் எழுச்சியை சுய விளம்பரத்திற்காக பயன்படுத்தும் எண்ணம் எந்த நடிகருக்கு இருந்தாலும்… ப்ளீஸ் அந்தப்பக்கம் போயிடாதீங்க!
முக்கிய குறிப்பு- அதே விஜய்சேதுபதி அதற்கப்புறம் திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். மாணவர்களும் அனுமதித்தார்கள். திருப்தி!
https://youtu.be/TDKKlw9QAyA