பெரிய ஹீரோயின் வேணாம்… 80 வயசு கிழவி போதும்! கான்பிடன்ட் இயக்குனரின் கனக்கச்சித படம்!
ஒருபக்கம் நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, கீர்த்திசுரேஷ் என்று கோடிகளை வைத்துக் கொண்டு, ‘கன்னாபின்னான்னு பசிக்குது. கால்ஷீட் போடும்மா…’ என்று காத்திருக்கிறது தமிழ்சினிமா. இன்னொருபுறம், ‘முன்னணி நடிகைகளால் முடியாததை அறிமுக நடிகைகளை வைத்து அசத்திக் காட்டுவோம்ல?’ என்று அருவி அதிதி மாதிரி நடிகைகளிடம் சரணாகதியாகிறது அதே சினிமா. ஆச்சர்யம் என்னவென்றால், தங்கமும் அதே கலர்தான்… மஞ்சளும் அதே கலர்தான் என்று அதிதிகளை கொண்டாடுகிறார்கள் மக்கள்.
இந்த நிஜ வரைபடத்தை பக்காவாக பற்றிக் கொண்டுவிட்டார் அறிமுக இயக்குனர் ரஜ்னி. இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதம் படத்தில் 80 வயது பாட்டிதான் ஹீரோயின். சுமார் 100 பேரை தனது படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ரஜ்னி. அத்தனைபேரும் புதுமுகங்கள்தான்.
தூத்துக்குடி பின்னணியில் நடந்த ஒரு க்ரைம் கதைதான் மதம். நேரடியாக தூத்துக்குடிக்கு போய் இறங்கிய ரஜ்னி, அங்கு நடிக்க விருப்பமுள்ள ஆயிரம் பேரை வரவழைத்தாராம். ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த பின் முக்கிய கேரக்டர்களுக்கு மட்டும் ஒரு மாதம் பயிற்சி வகுப்பு கொடுத்திருக்கிறார். பீவி என்றொரு பாட்டிதான் அசத்திவிட்டாராம் அசத்தி. அழுன்னா அழுறார். சிரின்னா சிரிக்கிறார். கிளிசரனே தேவைப்படாத அந்த நடிப்பு என்னை பிரமிக்க வச்சுது என்கிறார் ரஜ்னி.
சினிமா மாறிகிட்டு இருக்கு. ஊர்ல… கிராமபுறங்கள்ல… பிரமாதமான நயன்தாராக்களும் அனுஷ்க்காக்களும் தமன்னாக்களும் இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு முடிவெடுத்திருக்கிறேன். இந்தப்படம் மட்டுமல்ல… நான் இயக்கப் போற எல்லா படத்திலும் இனி புதுமுகங்கள்தான் நடிப்பாங்க என்று கான்பிடன்ட் காட்டுகிறார் ரஜ்னி.
அருவியில் யார் சார் இருந்தாங்க? அந்தப்படம் ஹிட் இல்லையா? கதைதான் ஹீரோ, ஹீரோயின், காமெடியன். எனக்கு இது காப்பாத்தும்னு நம்பிக்கை இருக்கு என்கிற ரஜ்னியை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது.
சினிமாவுக்குள்ளிருக்கும் அரசியல் இவரை மாதிரியான நம்பிக்கையாளர்களை வாழ வைக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்.