முகநூல் டூ சினிமா! முன்னணிக்கு வரப்போகும் முதல் குரல்!

காக்கைக்கும் தன் குஞ்சு தமன்னாதானே? என் மகள் வளரிசைக்கு சுமாருக்கு மேலேயும், சூப்பருக்கு கீழேயும் அமைந்த குரல் வளம். அது போதாதா? சாதாரணமாக தும்மினால் கூட, ‘ஆஹா பாட்டு பிரமாதம்’ என்று குடும்பமே கூடி நின்று கொண்டாட ஆரம்பித்தோம். கடினமான பாடல்கள் கூட சட்டென்று மகள் வசமானது. சினிமா பாடல்களை தாண்டி, வீட்டுக்கு மேலேயே சரஸ்வதியை அனுப்பி வைத்தான் இறைவன். ஒரு திறமையான பாட்டு டீச்சர் வீட்டுக்கு மேலேயே குடிவர, அப்புறமென்ன? முறைப்படி சங்கீத கிளாசுக்கும் அனுப்பி வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கலைமகள் கைப்பொருள் ஆகிக் கொண்டிருக்கிறாள் என் மகள்!

ஒரு நாள் மகள் பாடிய பாடல் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டேன். அவ்வளவுதான்… முதல் குரல் பூ மற்றும் களவாணி புகழ் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனிடமிருந்து வந்தது. “சார் சொல்லவேயில்ல. யார் யாரையோ வளர்த்து விடுறோம். உங்க மகளுக்கு வாய்ப்பு தர மாட்டோமா?” என்றார் உரிமையாக. அப்புறம் இசையமைப்பாளர் தாஜ்நூர், “சார்… பிரமாதம். நான் சீக்கிரம் சொல்றேன். மகளோட ஸ்டூடியோவுக்கு வாங்க” என்றார். “நல்ல பாடல் ஒன்று காத்திருக்கு. அழைக்கிறேன்” என்றார் இசையமைப்பாளர் உதயன் விக்டர்.

“அண்ணே… பாப்பா நம்ம படத்துக்காக ஒரு பாட்டு பாடுது. ரெடியா இருக்கச் சொல்லுங்க”. முதல் ஸ்வீட்டை நேரடியாக தொண்டைக்கு பார்சல் அனுப்பினார் அன்பு அண்ணன் சுரேஷ் காமாட்சி.

இவர்களையெல்லாம் நண்பர்களாக பெற்றதுதான் இந்த சினிமாவில் நான் செய்த முதலீடு.

அண்ணன் சுரேஷ் காமாட்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, இசையமைப்பாளர் இஷான் தேவ் என் அன்புக்கு ஆட்பட்டவர்தான். “வாங்க வாங்க வளரிசை…” என்று அன்பொழுக அழைத்து, என் மகளுக்கு முதல் வாய்ப்பை வழங்கினார். அது ஒரு அற்புதமான தருணம். அவர் சொல்லித்தர சொல்லித்தர சட்டென உள்வாங்கிக் கொண்ட மகள், அப்படியே திரும்ப பாட, “சார்… உங்க பொண்ணு பெரிய இடத்தை பிடிப்பா…, முறையா ட்ரெய்னிங் கொடுங்க” என்றார் மனதார!

சமீப காலங்களாக என் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் நின்று உதவும் கவிஞர் முருகன் மந்திரம், அந்த தருணத்தில் உடனிருந்தது அன்பின் நிமித்தமே!

இதோ- ‘மிக மிக அவசரம்’ படத்திற்காக சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் இயக்குனர் சேரனின் வரிகளில், இஷான் தேவின் அருமையான இசையில், வளரிசை பாடிய உணர்ச்சிமிகுந்த அந்தப் பாடல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

penn enbaval

Read previous post:
பளபளன்னு ஒரு பவர் கட் ஸ்டார்! படத்துல மூணு ஜோடி தெரியுமா?

Close