பார்ட் 2 பண்ணலாமா? மூக்குடைபட்ட முரட்டுக்குத்து இயக்குனர்!
பணத்தை மூட்டையில் கட்டி கோட்டையில் பதுக்கலாம் என்கிற அளவுக்கு கனவு கண்டார் ஞானவேல்ராஜா. ஆனால் முரட்டுக்குத்து கொடுத்த புத்திக் கொள்முதல் ரொம்பவே என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். ஏன்?
தமிழின் முதல் அடல்ட் காமெடி படம் என்ற அதகள அறிவிப்போடு திரைக்கு வந்த ஹரஹரமகாதேவகி நல்ல கலெக்ஷன். போட்ட அச்சு வெல்லம் போதாது என்று மேலும் சில உருண்டை வெல்லங்களை அள்ளிப் போட்டு இறக்கிய படம்தான் இருட்டறையில் முரட்டுக்குத்து. சென்னையில் மட்டும் காட்டு கூட்டம் கூடியது. ஆனால் வெளியூர்களில் பிளாட்டாக 300 வரைக்கும் விற்கப்பட்டு முதல் சில நாட்கள் மட்டும் கொட்டி அள்ளிய வசூல் மூன்றாம் நாளே நாசமாய் போனது.
சேட்டிலைட் ரைட்ஸ் இல்லை. வெளிநாட்டு வியாபாரம் இல்லை. உள்ளூர் தியேட்டர் கலெக்ஷனும் பெருத்த சப்போர்ட் இல்லை. இந்த லட்சணத்தில் கூட்டி கழித்து பார்த்ததில் சுமார் 5 கோடி மட்டும்தான் லாபமாம். ஆனால் பல நூறு கோடியை திருடி சேர்த்துவிட்டார் என்கிற அளவுக்கு கரையை சுமந்துவிட்டார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இந்த நேரத்தில் நாக்கில் ஜலம் சொட்ட மீண்டும் ஞானவேல்ராஜாவிடம் ஒரு ஐடியா சொன்னாராம் முரட்டுக்குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்தப்படத்தின் பார்ட் 2 பண்ணலாமா? என்பதுதான் அந்த ஐடியா. வெறுத்துப்போன ஞானவேல்ராஜா, போதும்யா… பட்ட அசிங்கம். கையில இருக்கிற இதே டைப் படங்களை ஒருவழியா ரிலீஸ் பண்ணிட்டு இந்த மாதிரி ஜானருக்கே முழுக்கு போடலாம்னு இருக்கேன். வேணும்னா நீ உன் பணத்துல பார்ட் 2, பார்ட் 3 ன்னு எத்தனை வேணும்னாலும் பண்ணிக்கோ என்றாராம்.
தவறை உணர்பவர்களை தங்கமே… என்கிறது உலகம்! என் ஞானத்தங்கமே… நீங்க நல்லாயிருப்பீங்க!