மெஹந்தி சர்கஸ்! என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா?

அரசியல் பைத்தியம் முற்றிப்போனால், ஒரே வீட்டிலிருந்து குமரி அனந்தனும் தமிழிசையும் கிடைப்பார்கள். அப்படிதான் ஒரே வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள் ராஜு முருகனும், சரவண ராஜேந்திரனும். ஆனால் ஒன்று… இருவரும் மனமொத்த அண்ணன் தம்பிகள்.

சினிமா எடுக்கணும் என்று கிளம்பி வந்து சுமார் முப்பது வருஷங்களாவது இருக்கும். சரவண ராஜேந்திரனின் வண்டி முக்கி முக்கி நகர்ந்தாலும், தம்பி ராஜு முருகன் புயலென கிளம்பி பொசுக்கென முன்னேறிவிட்டார். நடுவில் ஒரு நேஷனல் அவார்டு வேறு. நிதான வேகத்தில் நடந்த சரவண ராஜேந்திரன் இப்போதுதான் ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். அண்ணனின் ஆக்கத்தில் தம்பியும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். குடும்ப உறவின் மகத்துவமே அதுதானே? வசனம்- ராஜு முருகன்!

பொதுவாக ராத்திரிகளின் போர்வை ஒவ்வொன்றும் ராஜாவால் நெய்யப்பட்டதுதான். இரவின் மடியில் இதமாக புரண்டு படுக்கும் போதெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் விசிறி விடுகிற வழக்கம் இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு பின்பும் நடக்கும். மெஹந்தி சர்கஸ் படத்தில் இளையராஜாவின் பாடல்களை ஆங்காங்கே இழையோட விட்டிருக்கிறார்கள். ராஜுமுருகனும், சரவண ராஜேந்திரனும் மட்டுமல்ல… இப்படத்தின் மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டனும் கூட இளையராஜா வெறியன்தான். அப்பறம் பாடல்களில் இளையராஜா நகல் இருக்குமா, இருக்காதா?

பாடல் வாங்குவதற்காக ஷான் ரோல்டன் ஸ்டூடியோவுக்கு போவேன். நாள் முழுக்க அரட்டையடிப்போம். போகும்போது ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணுவார். அந்த ஒரு ட்யூன்தான். யுகபாரதியிடம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாட்டு உருவாகிவிடும் என்று என்கிறார் சரவண ராஜேந்திரன்.

படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் ஈரோடு கோவை பகுதிகளின் கல்யாண வீடுகளின் கதாநாயகன். யெஸ்… கேட்டரிங் பிசினஸ் இவருக்கு. இவர் போடும் உணவுக்கு ஊர் நாக்கெல்லாம் அடிமை. ஒரு தொழிலில் வெற்றி பெற்றால் இன்னொரு தொழில் மீது காதல் வருமல்லவா? அப்படி வந்த சினிமா ஆசைதான் ரங்கராஜுக்கு. சினிமாவிலும் ருசி கூட்டுவார் என்று நம்பலாம்.

தலைப்புக்கு வருவோம். இப்படத்தின் ருசி ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இளையராஜா பாடல்களால் இன்னும் தூக்கும்! இருந்தாலும் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல். பண்ணைபுரம் ஆத்திரப்படுவதற்குள் வெண்ணை பொட்டலத்தை பார்சல் பண்ணிடுங்கப்பா…!

அது படம் பார்க்கிற எங்களுக்கும் நல்லது. பந்தி பரிமாறுகிற உங்களுக்கும் நல்லது!

Read previous post:
கட்சித் துவங்கிய கமலின் கதி? போட்டுத்தாக்கும் சொல்வாக்கு ஜோதிடர்

https://www.youtube.com/watch?v=d63EkhpiNDg

Close