இளையராஜாவின் வித்யா கர்வ கோபம்! டொரண்டோவிலிருந்து நாராயண மூர்த்தி

நேற்று இரவு.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். கடந்த 42 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் ஒரு தனித்துவம் மிக்க ராஜா..!!! “ராஜாதி ராஜன் இந்த ராஜா..” ஹங்கேரியில் இருந்து வந்த இசைக்கலைஞர்களும், ராஜாவின் ஆஸ்தான வித்துவான்கள் பலரும் மேடையை ஆக்கிரமிக்க.. சித்ரா, மனோ, ஹரிசரண், ரகுல் நம்பியார் போன்ற சில பிரபலங்களையும் வைத்து நேற்றையஇசை ராஜாங்கம் நடந்தது. (ஜேசு மரணிக்கவில்லை என்று சொன்னதால் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா, ஜேசு உயிர்த்தெழுந்தாக சொல்லப்பட்ட ஈஸ்ட்டர் தினத்தன்று தன் நிகழ்ச்சியை நமக்குத் தந்தது ஆண்டவன் அருள்.) மிகக் குறிப்பிட்ட சில பாடல்களையே மேடைக்கு கொண்டுவந்திருந்தார்.

ஒரு இசையமைப்பாளர் தானே தனது பாடல்களை வைத்து இசைநிகழ்ச்சி நடத்துவது தனித்துவமானது. ஒரு தாய் தன் குழந்தையை அழகுபடுத்தி மற்றவர்க்கு காட்டுவதுபோல பவித்திரமானது. தன் எந்தக் குழந்தையையும் பார்ப்பவர் யாரும் அவமதிப்பதுபோல தாய் நினைக்க பார்வையாளரான நாம் வைத்துவிடக் கூடாது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் – இளையராஜாவுக்கு பிடிக்காது எனத் தெரிந்தும் – ”நீ யார் எனக்கு சொல்லுறது?” என்ற கோட்பாடுக்கு அமைய சிலர் பொருத்தமற்ற இடங்களில் பலத்த விசில் அடித்ததும், கூக்குரல் இட்டதும் பார்வையாளராக எமக்கே எரிச்சலாக இருந்தது. ‘உனக்கு விசில் அடிச்சு அட்டகாசம் செய்யவேணுமெண்‌டா வேற இடத்துக்கு போடா..’ என்று சொல்ல வேண்டும்போலவும் இருந்தது. உன் சுதந்திரம் என்னை வருத்தக்கூடாது பிரதர்.. பாட்டு முடியும்போது விசில் அடி.. “பாடல்களை அவர்கள் சிரத்தையுடன் தர முயற்சிக்கும்போதும் ஏன் அநாகரீகமாய் வேண்டுமென்றே குழப்புவதுபோல அடிக்கிறாய்?? கூக்குரல் இடுகிறாய்???” (இந்த ‘விசிலடிச்சான் குஞ்சு’களில் பலரும் இந்தியாவிலிருந்து ராமபிரானோடு பாலம் போட்டு லங்காபுரி வந்து, பிறகு ஈழத்தமிழர்களுடன் தங்கிவிட்ட பரம்பரையினர் என்பது பலருக்குத் தெரியாது.) “காதலின் தீபம் ஒன்று..” என்ற பாடலை விசிலடித்து விசிலடித்துத்தான் ‌தான் கொம்போஸ் பண்ணித் தந்த அனுபவத்தை தானே தன் வாயால் விசிலடித்து இதே மேடையில் இளையராஜா விளக்கியது சுவாரஸ்யம். இந்த விசில் = ஆக்கம்..

மேடைக்கு கொணர்ந்திருந்த பாடல்களின் தெரிவில் ஒன்றை கவனித்தேன். எத்தனையோ பாடல்களிருக்க, பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் இருந்தும், கமல்ஹாசனின் படங்களில் இருந்துமே நிகழ்ச்சியின் பெரும்பான்மை பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக நம் ஈழத்தவரான பாலு ‌மகேந்திராவுக்காக உருவாக்கிய ஒரு பாடல் குறித்து மேடையில் இளையராஜா சொன்னபோது இயக்குனராகவும், இசையமைபாளராகவும் அவர்களுக்கிடையே இருந்த அந்நியேன்னியத்தை வேண்டுமென்றே குறிப்பிட்டுக் காட்டியதாக இருந்தது. (பாலுமகேந்திராவின் பொன்மேனி உருகுதே பாடலைப் பாடிய பாடகியின் குரல் சிலுக்கை விட செக்ஸியடாப்பா…) தன் இசை வல்லமையை மேன்மையை இசைக் கோர்வையாக காட்டும் குறிப்பிட்ட சில பாடல்களையே அவர் தெரிந்தெடுத்திருந்ததுபோல இருந்தது. (தென்றல் வந்து தீண்டும்போது.. என்ற நாஸரின் அவதாரம் படப்பாடல் கட்டாயம் வரும் நினைத்தேன்.. இருக்கவில்லை.)

அந்த ”ராக்கம்மா கையைத் தட்டு” பாடல்… (பிபிசியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு தமிழ் சினிமாப்பாடல்) நேற்றுக் கேட்டபோது… ஒரு வேகம் கலந்த பாடலாக காட்டாறு போல ஆரம்பித்து, இடையே தெளிந்த நீரோடை போல “குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்..” என மாணிக்கவாசரின் வரிகளை கலந்த இலாவகம்… இளையராஜா என்ற இசை ஆளுமைக்காக கை தட்டுவது மட்டும் போதாது.. அவரது காலில் விழுந்தாலும் சரியே என்றுதான் தோன்றியது. இது ஒரு ஆன்மீக அரசியல். மற்றொரு பாடலாக”இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…” அந்தப் பாடல் இசைஞானி இளையராஜாவின் தன்னிலை விளக்கம். (அல்லது சுயவிமர்சனம்!)

மேடையில் எஸ்பிபி இல்லாவிட்டாலும், ஜானகி இல்லாவிட்டாலும், ஜேசுதாஸ் இல்லாவிட்டாலும் என்ன நான்தான் சங்கீதம்… என்பது ராஜ நம்பிக்கை.. மேடையில் பாட வந்த அத்தனை பாடகர்களும் முதலில் ஆசி கோருவதுபோல குனிந்து இளையராஜாவின் பாதம் பணிந்து எழுந்த பின்னரே பாட ஆரம்பித்தார்கள். புல்லரித்தது. இந்தப் பண்பாடு கலைஞர்களுக்கு ஒரு அணி போன்றது. இது ஒரு மரபு கலந்த வழக்கம். கீழைத்தேயத்துப் பண்பாடு.. (ஒரு சமூகமாக அரசியல் தலைவர்களின் காலில் மானசீகமாக விழுந்து கிடப்பதைவிட, பணவரவு கருதி வியாபாரிகளின் காலில் மானசீகமாக விழுந்து கிடப்பதைவிட, சம்பளம் தரும் மேலதிகாரிக்கு மானசீகமாக காலில் விழுந்து பதவியை காப்பாற்றுவதைவிட ஒரு கலைஞனின் காலில் வெளிப்படையாக விழுந்து எழும்புவதால் மேன்மையே உருவாகும்.)

சினிமா இசையை கேட்கும்போதும், ரசிக்கும்போதும் பாடலுக்கான இசையையும் தாண்டி அப்பாடல்கள் இடம்பெற்ற படம், நடிகர்கள், பாடிய பாடகர்கள், பாடலை எழுதியவர் என வேறுபல ஐட்டம்களும் நமது ரசிப்பில் பங்கு கேட்டுக் கொண்டிருக்கும். சித்தர் போன்ற மனநிலையில் இசையமைப்பாளராக வாழும் இளையராஜா போன்ற ஞானக் கிறுக்கர்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பதால்தான் சாதாரண ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியாத கோபம் கொண்டவர்களாக தம்மை வெளிக்காட்டுகிறார்கள். அது ஒரு கோபம் கலந்த ஞானச்சித்தர் நிலை. (இலக்கிய உலகில் அப்படியானவராக ஜெயகாந்தன் இருந்தார். அதன்பின் ‌ஜெயமோகன் மட்டுமல்லாமல் அகிம்சாவாதியான எஸ்.ரா.கூட இன்று இருக்கிறார்.) நேற்றைய நிகழ்ச்சியிலும் இளையராஜா பல இடங்களில் தனது ‌‌வித்தியாகர்வகோபத்தை காட்டினார். தேங்கிக் கிடப்பவர்களை பார்த்தால் யாருக்குத்தான் கோபம் வராது? சில மேல்தட்டு வர்க்கத்தினரிடம் நாம் காணும் வித்தியாகர்வமும், சில அடித்தள மக்களுக்களிடம் நாம் காணும் அர்த்தமற்ற சில கோபமும் இணைந்தவனாக ஒரு படைப்பாளி இருப்பதில் மகிழ்ச்சியே.. தமிழ்ச் சினிமா உலகில் இளையராஜாவாவது அப்படி செருக்குடன் இருக்கிறாரே என்று மகிழத்தான் முடிகிறது.

நிகழ்ச்சி ஆரம்பித்தபோதே இளையராஜா பேசிய பேச்சில் ஒரு ‘சொல்லப்படாத சேதி’ தெரிந்தது. பிறகு நிகழ்ச்சியின் இடையே நிகழ்ச்சியின் அனுசரனையாளர்களை, ஸ்பொன்ஸர்களை திடீரென மேடைக்கு கொண்டுவந்து ஒரு சைட்-ட்ராக் ஆரம்பிக்கப்பட… அந்த சைட்ராக்கின் உச்ச கட்டமாக ‘பொன்’ மனம் கொண்ட ஒரு ஸ்பொன்ஸர் அம்மா பேச ஆரம்பித்துவிட… அமைப்பாளர் ஒருவரை இளையராஜா கோபமாக அதட்டிய பின்னர்தான் சைட்ட்ராக் முடிவுக்கு வந்தது.) போன முறை ‌இளையராஜாவிற்கு கனடாக் ‌கொடியை ஒரு தமிழ் எம்பி அம்மையார் போர்த்தி எழுதிய வரலாற்றின் மை இன்னும் காயவில்லை… அதற்குள்… இதுவேறு.. அட பேஈங்கப்பா.. மேடையில் வைத்து அசட்டுத்தனங்கள் அவ்வப்போது நம்மவர்கள் பலர் செய்வது வழக்கம்தான் என்பது நமக்குத்தான் தெரியுமே…

கடைசி இரண்டு பாடல்களும் மேடையில் ‘தான் இல்லாமலே பாடப் படட்டும்’ என்று சொல்வதுபோல – நிகழ்ச்சியை சம்பிரதாயப்படி முடித்து வைக்காமல் – மேடையை விட்டு விறுவிறுவென சென்றுவிட்டார் இளையராஜா! அதற்கான காரணம் என்ன என்று யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கோவன்.. காலில விழுகிறன்.

– நாராயண மூர்த்தி

Read previous post:
தேடிப்போன அட்லீ! திருப்பி அனுப்பிய விஜய்!

Close