என் ஆளோட செருப்பை காணோம்! இந்த டைட்டிலுக்கு பின்னால் இப்படியொரு கதையா?
படத்தின் தலைப்பு ஒரு ரசிகனையோ, வழிப்போக்கனையோ, கண்ணடித்து “உள்ள வா… உள்ள வா” என்று தியேட்டருக்குள் அழைத்தால், அதுதான் அந்த டைரக்டருக்கு கிடைக்கப் பெற்ற வரம்! சட்டென்று மனசுக்குள் பொறி விழுகிற டைட்டிலை அப்படியே பத்திரப்படுத்தி அதற்கு ஒரு உருவமும் கொடுக்கிற இயக்குனர், அதை பலரும் ரசிக்கும்படி செய்துவிட்டால் பாதி வெற்றி அங்கேயே கன்பார்ம்!
‘என் ஆளோட செருப்பை காணோம்’ அப்படியொரு படமாக இருக்கும் போலிருக்கிறது. கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை போன்ற நல்ல படங்களை இயக்கிய ஜெகன்நாத் மண்டையில் உருவான இந்த தலைப்பு, இன்னும் ஒரு மாத கால அவகாசத்தில் தியேட்டர்களை தெறிக்கவிடப் போகிறது.
கயல் ஆனந்தி ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பசங்க பாண்டி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்தப்படத்திற்காக அவருக்கு தமிழ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதென்னங்க இப்படியொரு தலைப்பு? நமது கேள்விக்கு ஒரு சிரிப்பையே பதிலாக தந்துவிட்டு பேச ஆரம்பிக்கிறார் ஜெகன்நாத்.
“ஒரு மழைக்காலத்தில் நடக்கிற கதை இது. தன் காதலியின் செருப்பு தொலைந்து போய்விட, அதைத் தேடிக் கிளம்புகிறான் ஹீரோ. அவன் சந்திக்கும் சம்பவங்களும், மனிதர்களும்தான் இந்தப்படம். 100 இடத்திலாவது கை தட்டி சிரிப்பீர்கள். பத்து இடங்களில் கண் கலங்குவீர்கள். அதற்கு நான் பொறுப்பு” என்றவர், இந்த கதை பிறந்த கதையை விவரித்தார்.
“ஒரு நாள் ஒரு புரட்யூசருக்கு கதை சொல்வதற்காக ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு கிளம்பினேன். காலையில் ஏழு மணிக்கு அப்பாயின்ட்மென்ட். பஸ்சில்தான் போனேன். இறங்கி ஓட்டலுக்குள் போவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்தான் அந்த கொடுமை. என் ஷு வின் அடிப்பகுதி பிய்ந்து போய்விட்டது. அருகில் தைத்துக் கொடுக்கிற ஆள் ஒருவர் கூட இல்லை. அப்படியே அந்த செருப்பை இழுத்துக் கொண்டே ஸ்டார் ஓட்டலுக்குள் நுழைய அவமானமாக இருந்தது. அந்த இடத்திலிருந்தே அவருக்கு போன் செய்தேன். சார்… திடீர்னு வர முடியல. நம்ம மீட்டிங்கை ஈவினிங் வச்சுக்கலாமா?” என்று.
“அவரும் சரி என்று கூறிவிட்டார். ஒருவேளை அந்த சந்திப்பு நடந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம். ஒரு செருப்பு ஒருத்தனோட வாழ்க்கையையே மாற்றுகிறது என்றால், இப்படி நான் யோசிக்க ஆரம்பித்த நொடியில் உருவான கதைதான் இது. நம் வாழ்வில் நாம் பார்க்கிற ஏதோ ஒரு குப்பை பொருள் நமக்குள் ஆயிரம் எண்ணங்களை விதைத்துவிட்டு போகும். அப்படி வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு புதிய லேடீஸ் செருப்பும் என் கதைக்கு இன்னும் கற்பனையை சேர்த்தது. இதோ- இன்று ஒரு படமாகவே உருவாகிவிட்டது” என்றார்.
தலைப்பை கேட்டுவிட்டு சற்றே தயங்கிய கயல் ஆனந்தி, கதையை கேட்டதும் அப்படியே கரைந்து உருகிவிட்டாராம். “இந்த கதையில் நான் நடிக்கிறேன். சம்பளமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார்.
எங்கப்பா அந்த செருப்பு? நமக்கே பார்க்கணும் போலிருக்கே!
https://youtu.be/uCeav7blq88