கதை பேங்க் ஜெயம் ரவி! அடங்கமறு விழாவில் அல்டிமேட் பாராட்டு!
அரைச்ச மாவையே அரைச்சு… முறைச்ச பார்வையே முறைச்சு… நானும் நடிகன்தான் என்று ஜெராக்ஸ் கடை நடத்தும் ஹீரோக்களுக்கு மத்தியில் கோவில் கட்டி கும்பிட வேண்டியவர் ஜெயம் ரவி. படத்திற்கு படம் ஏதோவொரு வித்தியாசத்தை பிளான் பண்ணி அடிக்கும் அவருக்கு தொடர் வெற்றிகளும் தோள் கொடுத்து வருகின்றன.
டிக்டிக்டிக் படத்திற்கு பிறகு இவர் நடித்த அடங்க மறு ஹிட்! அதுவும் மாமியார் தயாரிப்பாளர். மருமகன் ஹீரோ. சந்தோஷம் டபுள் மடங்கு இருக்குமே?
இந்த சந்தோஷத்தை சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள். சில தினங்களுக்கு முன்னதாக இதே டீம் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் வைத்து தாறுமாறாக குதித்தாலும், பிரஸ்சுக்கு முன் அடக்கம் காட்டுவது இயல்பாச்சே? இது என் குடும்பம் என்று பிரஸ்சையும் சேர்த்துக் கொண்டார் ரவி.
அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஆதிபகவன் படத்தின் இறுதியில் வந்து உதவி இயக்குனராக சேர்ந்தவர். அன்று ஏற்பட்ட பழக்கம், மெல்ல மெல்ல நம்பிக்கையாக மாறி ஒரு முழு படத்தையும் அவரை நம்பி கொடுக்கிற அளவுக்கு தள்ளியது. நல்லவேளை… அந்த நம்பிக்கையை போட்டு உடைக்கவில்லை கார்த்திக். (எல்லா நடிகர்களுமே இவரை தம்பி தம்பி என்று பேசியது தனி அட்ராக்ஷன்)
ஜெயம் ரவியே நல்ல நல்ல கதைகள் வச்சுருக்கார். அவர்ட்டேயிருந்து ஒரு கதையை சுட்டு படமாக்கிவிட வேண்டியதுதான் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார் தினேஷ் கார்த்திக். இருந்தாலும் இதே மேடையில் வைத்து இயக்குனரை கவுரப்படுத்தினார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.
மீண்டும் ஒரு படம் அவரோட சேர்ந்து எடுக்கப் போறோம் என்கிற மாணிக்க வார்த்தைகள்தான் அது!
ரிலீசுக்குப் பிறகும் ஒரு இயக்குனர் மீது நம்பிக்கை வருகிறதென்றால் அட்ங்காதவராக இருக்க முடியாது. அடக்கமானவராகதான் இருக்க முடியும். நல்லா வருவீங்க தம்பி!