முக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்!

‘பணக்காரன்’ படப்பிடிப்பின் அவுட்டோர் ஷுட்டிங். இரவு நேரம். கழுத்தில் போட்டிருந்த உத்திராட்சக் கொட்டை காணாமல் போன விஷயமே அறைக்கு வந்த பின்தான் தெரிந்தது ரஜினிக்கு. அப்புறம்? பதறிவிட்டார் பதறி. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ராட்சத விளக்குகளின் உதவியோடு விடிய விடிய தேடினார்கள். பல மணி நேர பரபரப்புக்குப் பின் உத்திராட்ச கொட்டை கிடைத்தது. கடவுளுக்கு நன்றி சொன்னார் ரஜினி.

உத்திராட்சக் கொட்டைக்கே அப்படியொரு அதிர்ச்சி என்றால், ‘பாபா’ படத்திற்குப் பின் ரஜினியின் சினிமா சரித்திரத்தில் படுதோல்வி படமாக வந்து நிற்கும் ‘காலா’ அவரை எப்படியெல்லாம் அதிர வைக்கப் போகிறதோ? இத்தனைக்கும் அவர் அரசியலில் நுழையவிருக்கிற முக்கியமான கால கட்டமாச்சே இது? ஒரு படம் ரசிகனால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியை தழுவ ஒரே காரணம்தான் இருக்க முடியும். “படம் நல்லாயில்ல. அதனால் புடிக்கல”. ஆனால் காலா விஷயம் அப்படியல்ல. பின் எப்படி?

திருப்பூரிலிருக்கும் திரையரங்க உரிமையாளர் ஒருவர் நம்மிடம், “நான் தலைவரோட ஃபேன்ங்க. தலைவரோட படம் எங்க தியேட்டர்ல போடலங்கறது வருத்தம்தான். ஆனால் அதைவிட எங்களுக்கு பா.ரஞ்சித் படம் போடக் கூடாதுங்கற கருத்து அதிகமாக இருந்திச்சு. அதனால் நானே என் வாயால தலைவர் படம் வேணாம்னு சொல்லிட்டேன்” என்றார் வருத்தமாக.

இப்படி காலாவின் தோல்விக்கு பா.ரஞ்சித்தின் சாதி அரசியலும் ஒரு காரணமாக இருந்ததுதான் அதிர்ச்சி. சென்னை தவிர தமிழகத்தின் பெரும்பகுதிகளில் நிலவிய கருத்தும் சாதி அரசியலை காரணம் சொல்லுவதாகவே இருக்கிறது.

படம் வெளியான அதே நாளில் பா.ரஞ்சித் கொடுத்த பேட்டியும் கூட அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் குறைவதற்கு பெரிய காரணம் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். “நீங்க இயக்குனரா, அரசியல்வாதியா?” என்று கேட்ட மீடியாவிடம், “நான் அரசியல்வாதி” என்றே பதில் அளித்தார் அவர். அதோடு விட்டாரா? “இந்த படத்தில் ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும் அவரது ஆலோசனை மற்றும் ஒப்புதல் இல்லாமல் வைத்தது அல்ல” என்றார்.

‘உங்க கருத்தை மக்கள்ட்ட திணிப்பதற்கு எங்க தலைவர்தான் கிடைச்சாரா?’ என்று இப்பவும் குமுறுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரசிகர்களின் கோபம் அதோடு முடியவில்லை. “படத்தை எதார்த்தமா எடுக்குறேன்னு எங்க தலைவரோட ஓப்பனிங் சீனையே டம்மியாக்கிட்டாரே” என்றும் வெடிக்கிறார்கள்.

ஒரு ரசிகர் நம்மிடம், “தலைவர் டக் அவுட் ஆகுற மாதிரி ஓப்பனிங் சீன் வச்சிருந்தாரு. இதுவே கமர்ஷியல் இயக்குனர்கள்னா இப்படி வச்சுருப்பாங்களா? கடைசி ஓவர். ஒரு பந்தில் 12 ரன் எடுக்கணும்னு சீன் இருந்திருக்கணும். ஒரு பந்தில் எப்படி 12 ரன் அடிக்க முடியும்னு கூட்டத்துல ஒருத்தன் கேட்பான். ‘எடுப்பேன்டா’ என்று தலைவர் சிரிப்பார். பந்து விழும். தலைவர் ஓங்கி அடிப்பார். அது ரெண்டா கிழிஞ்சு மைதானத்தின் இரண்டு பக்கங்களுக்கு வெளியே போய் விழும். ‘ஆறும் ஆறும் பனிரெண்டு. சரியாப் போச்சா?’ என்று தலைவர் மறுபடியும் ஸ்டைலா சிரிப்பார். தியேட்டர்ல கிளாப்சை யோசிச்சு பாருங்க. ஆனால் இந்தப்படத்தில் அப்படியா அந்த சீன் இருந்திச்சு?” என்றார் உணர்ச்சி மேலிட! “தலைவரோட மாஸ்சை சரியா யூஸ் பண்ற இயக்குனர்தான் எங்க தலைவருகிட்ட வரணும். பா.ரஞ்சித் மாதிரி ஆட்களல்ல” என்பதும் அவரது கருத்தாக இருக்கிறது.

படத்தில் ரஜினியின் மேஜிக் என்று சொல்லும்படியாக ஒரு காட்சியும் இல்லை என்பதுதான் ரசிகர்களின் ஏகோபித்த வருத்தமாகவும் இருக்கிறது.

ரிலீசுக்கு முன்பு வரை ரஜினி படமாக இருந்த காலா, ரிலீசுக்குப்பின் ‘இது ரஜினி படமா, ரஞ்சித் படமா?’ என்கிற சர்ச்சை வளையத்திற்குள் வந்தது. இதுதான் இத்தனை வருஷங்களாக கட்டிக் காத்து வந்த ‘ரஜினி’ என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு விழுந்த முதல் அடி.

மாஸ் ஹீரோவாக அறியப்பட்ட பின், இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். எல்லாமே ரஜினி படம்தான். எதுவும் டைரக்டர் படமாக இருந்ததில்லை. அது ஷங்கர் படமாகவே இருந்தபோதிலும்.

ரசிகர்களின் கருத்து இப்படியிருக்க, ரஜினி படம் வந்தால் மட்டும் தியேட்டர் பக்கம் ஒதுங்கும் பொதுமக்கள் பலரது கருத்து வேறொரு மைனஸ்சை முன் வைக்கிறது. “காலா வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேசிய பேச்சு எங்களுக்கு பிடிக்கலை” என்கிறார்கள். ‘சமூக விரோதிகள்’னு அவர் சொன்ன வார்த்தையை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்கள் அவர்கள். அநேகமாக தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழ்கிற சினிமா ரசிகர்களும் இதே கருத்துடன்தான் ஒத்துப்போகிறார்கள்.

அதை கண்கூடாக கலெக்ஷன் விஷயத்தில் பார்க்க முடிந்தது. கபாலி வெளியான நேரத்தில் ‘படம் சுமார்’ என்கிற கருத்து பரவலாக வந்தாலும், கலெக்ஷன் மட்டும் இளைக்கவில்லை. அதற்கு தயாரிப்பாளர் தாணுவின் விளம்பர யுக்தி பெரும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கபாலியின் வெளிநாட்டு வசூல் 87 கோடி. அதுவே காலாவின் வசூல் 47 கோடி. இப்படி பாதிக்கு பாதியாக குறைந்தது அங்கு மட்டும்தானா? ‘இல்லை’ என்று அழுத்தமாக சொல்கிறது வசூல் வட்டாரம்.

தெலுங்கு, கன்னடம், கேரளா என்று மற்ற மூன்று இடங்களிலும் இதே நிலைதான். ரஜினியின் முந்தைய படமான கபாலி வசூலில் பாதியைதான் தொட முடிந்தது காலாவால். தமிழகத்தை பொறுத்தவரை சேலம், திருச்சி இரண்டு ஏரியாவை தவிர மீதி எல்லா ஏரியாவிலும் படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் அடிப்படையில்தான் கொடுத்திருக்கிறார் தனுஷ். ஏன்?

படம் சரியாக கலெக்ஷன் ஆகவில்லை என்றால், ரஜினியின் வீட்டுக்கு முன் கூடி ‘பணத்தை திருப்பிக் கொடுங்க’ என்று கோஷமிடும் போக்கை தடுப்பதற்காகதான் இப்படியொரு ஐடியா. இந்த முறையில் ரிஸ்க் அதிகம். பப்ளிசிடி மற்றும் இன்னபிற செலவுகளை கழித்துக் கொள்வார்கள். அட்வான்சாக கொடுத்த பணம் வசூல் ஆகாவிட்டால் தயாரிப்பாளர்தான் மீதி பணத்தை வட்டியோடு திருப்பித்தர வேண்டும். இந்த வகை வியாபாரத்திற்கு ஒப்புக் கொண்டு சுமார் 62 கோடி வரை தமிழக விநியோகஸ்தர்களிடம் பெற்றுக் கொண்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இப்போது சுமார் 22 கோடியை திருப்பித்தர வேண்டிய நிலையில் இருக்கிறாராம் தனுஷ். இந்த தமிழ்நாடு தியேட்டர்கள் சைடில் மட்டும். வேறு ஏரியாவிலும் இதே நிலை இருக்கிறது.

இந்த படம் உருவான கதைக்கும், இந்த படத்தின் முடிவுக்கும் நடுவே பெரிய சோகக் கதை ஒன்றும் இருக்கிறது.

மகள் ஐஸ்வர்யாவின் வற்புறுத்தலுக்கு இணங்கதான் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்தார் ரஜினி. “தனுஷுக்கு 40 கோடி கடன் இருக்கிறது. உங்கள் கால்ஷீட் இருந்தால் கடனை ஒரே தவணையில் அடைத்துவிடுவார்” என்று மகள் கேட்டால், ஒரு தந்தை என்ன செய்வார்? அதைதான் செய்தார் ரஜினி. ஆனால் தனக்காக சுமார் 50 கோடி சம்பளத்தை நிர்ணயித்தார். அதற்கு வரியாக 9 கோடியை தனுஷே கட்டிவிட வேண்டும். இதுதான் நிபந்தனை. எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொண்டார் மருமகன். இப்போது கடன் அடையவில்லை. ஆனால் மேலும் பல கோடி கடன் சுமை ஏறிவிட்டதாம் தனுஷுக்கு.

கலெக்ஷன் விஷயத்தில் தனுஷ் அப்செட் என்றால், தனுஷ் விஷயத்தில் ரஜினியே அப்செட் என்கிறது தகவல்கள். தாணுவைப் போல இப்படத்திற்கு விளம்பரம் செய்யவில்லை என்பதை பெரும் குறையாக கருதுகிறாராம் ரஜினி. அப்புறம் இன்னொரு வருத்தம் அவருக்கு. டைட்டிலில் ‘இணைத் தயாரிப்பு ஐஸ்வர்யா’ என்று பெயர் வரவில்லையே?

ரஜினி பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ‘காலா’ வெளியான ஒரு வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடர்வதில் எல்லா இடங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. சில தியேட்டர்களில் ஆட்கள் போதுமான அளவுக்கு வரவில்லை என்று ஷோ கேன்சல் ஆன கொடுமை. இன்னும் சில தியேட்டர்களில் எப்பவோ ஓடி முடிந்த ‘இரும்புத்திரை’, மற்றும் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ படங்களை திரையிட்டார்கள்.

ரஜினி தனது மருமகனை காப்பாற்ற இறங்கியது ஒருபுறம். காப்பாற்றிவிடுவார் என்று பா.ரஞ்சித்தை தனுஷ் நம்பியது மறுபுறம். இந்த இருவரையும் ஒதுக்கிவிட்டு தனது அரசியல் பாதைக்கு அடிபோட்டது ரஞ்சித்தின் மூன்றாவது புறம்.

ஆக மூவரும் இப்போது முக்கோண சிக்கலில் சிக்கிக் கொண்டதுதான் கோடம்பாக்க களேபரம். ரஜினிக்கு இந்தப்படம் படுதோல்வி. தனுஷ் மேலும் கடனாளி. அடுத்த படம் இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு இனி கிடைக்குமா என்பதும் முக்கிய கேள்வி.

இவ்வளவு கொடூரங்களுக்கு தானும் ஒரு காரணமான பா.ரஞ்சித் மட்டும் புதிதாக வாங்கிய ஒரு கோடியே ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ரக சொகுசு காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த பணத்தில் அடிப்படை வசதியே இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் 150 கிராமங்களில் டாய்லெட் கட்டிக் கொடுத்திருக்கலாம்! “என்னது… அதையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும். எனக்கெல்லாம் பேச மட்டும்தான் தெரியுமா?”

இதை யார் சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கவர் ஸ்டோரி)

5 Comments
 1. Samsul says

  Pa.Ranjith 1.5 cr roopai kku car vaangurathu unga kanna uruthuthu…
  Chai..

 2. ரஞ்சித் says

  காலா படத்தின் வசூல் தமிழ் நாட்டில் திருப்திகரமாகவே உள்ளது. வார நாள்களில் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. முதல் பதினொரு தினங்களில் சென்னையில் காலாவின் வசூல் 13 கோடிகளை தாண்டியுள்ளது. இந்த வருடம் வெளியான எந்த திரைப்படத்தையும்விட காலாவின் வசூல் அதிகம்.

  அதே நேரம் கபாலி, மெர்சல், பாகுபலி 2, விவேகம் படங்களுடன் ஒப்பிடுகையில் காலாவின் இரண்டாவது வார சென்னை வசூல் எப்படி உள்ளது?

  காலா, கபாலி, பாகுபலி 2, மெர்சல், விவேகம் படங்களின் முதல்வார இறுதி வசூல்…

  காலா – 765 காட்சிகளில் 4.26 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 8.70 கோடிகள்
  கபாலி – 942 காட்சிகள் – 6.49 கோடிகள்
  பாகுபலி 2 – 828 காட்சிகள் – 3.24 கோடிகள்
  விவேகம் – 870 காட்சிகள் – 3.98 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 5.22 கோடிகள்
  மெர்சல் – 678 காட்சிகள் – 3.90 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 6.86 கோடிகள்.

  முதல்வார ஓபனிங் வசூலை பொறுத்தவரை காலா பிற அனைத்துப் படங்களையும்விட மிக நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. வார நாள்களில் – அதாவது திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழனில் இந்தப் படங்களின் வசூலை பார்ப்போம்.

  காலா – 668 காட்சிகள் – 3.12 கோடிகள்
  கபாலி – 1056 காட்சிகள் – 2.88 கோடிகள்
  பாகுபலி 2 – 988 காட்சிகள் – 3.08 கோடிகள்
  விவேகம் – 608 காட்சிகள் – 1.82 கோடி
  மெர்சல் – 772 காட்சிகள் – 2.04 கோடிகள்

  வார நாள்களில் காலா வசூல் கணிசமாக உயர்ந்துள்ளன.

  காலா மற்றும் பிற படங்களின் இரண்டாவது வார இறுதி வசூல் (வெள்ளி, சனி, ஞாயிறு).

  காலா – 342 காட்சிகள் – 2.81 கோடி
  கபாலி – 609 காட்சிகள் – 2.21 கோடிகள்
  பாகுபலி 2 – 777 காட்சிகள் – 2.73 கோடிகள்
  விவேகம் – 225 காட்சிகள் – 0.96 கோடிகள்
  மெர்சல் – 453 காட்சிகள் – 2.15 கோடிகள்

  காலா – 12.16 கோடிகள்
  கபாலி – 9.26 கோடிகள்
  பாகுபலி 2 – 9.06 கோடிகள்
  விவேகம் – 8 கோடிகள்
  மெர்சல் – 8.98 கோடிகள்

  காலாவின் முதல்வார ஓபனிங் வசூல் மிக அதிகம் என்பதால் கபாலி, பாகுபலி 2 படங்களைவிட காலாவின் வசூல் அதிகம் உள்ளது.

  மேலே உள்ள புள்ளிவிவரங்களிலிருந்து, காலாவின் சென்னை வசூல் சிறப்பாக இருப்பதையும், சென்னை வசூலில் ஏற்பட்ட அதே மாற்றங்கள் தமிழக அளவிலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 3. Riyaz Khan says

  டார்ஜிலிங்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக டார்ஜிலிங் சென்றுள்ள ரஜினிகாந்த், கர்சியாங்கில் உள்ள அலிட்டா ஹோட்டல் & ரிசார்ட்ஸ்-ன் பங்களாவில் தங்கி இருந்தார்.

  ரிசார்ட்ஸ் இயக்குனர் தங்கும் அந்த பங்களாவை ரஜினிகாந்த் தங்குவதற்கு ஒதுக்கியிருந்தார்கள். அவர் அங்கு தங்கி 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

  ரஜினிகாந்த் தங்கி இருந்த பங்களாவுக்கு ‘ ரஜினிகாந்த் வில்லா # 3’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள். அந்த புதிய பெயர் பலகையை அவரிடம் கொடுத்து நிர்வாகத்தினர் ஆசி பெற்றுக் கொண்டார்கள்.

  ரஜினிக்கு மிகவும் பிடித்தமான டீ கிடைக்கும், அங்குள்ள சியா டீ பார் லவுஞ்சுக்கு ‘ ‘தலைவா ஸ்பெஷல்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

  அலிட்டா ஹோட்டல் & ரிசார்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் மெகுல் பரேக், ‘ரஜினிகாந்த் போல் ஒரு சிறந்த மனிதர் எங்கள் ரிசார்ட்ஸ்-ல் தங்குவதற்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இது ஒரு மாபெரும் சாதனை என்றே கருதுகிறோம். எங்கள் அன்பையும் மரியாதையையும் அவருக்கு காட்டுவதற்கு ஒரு சிறிய பங்களிப்பு தான் அவருடைய பெயர் சூட்டுதல் ஆகும்’ என்றார்.

  சான்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். மரியாதை தானா வருவது பாபாவுக்கு மட்டும் தான் என்று கவுண்டமணி சொன்னாலும் சொன்னார். அவர் மகான் தான் போலிருக்கு. சொன்ன சொல் அப்படியே பலித்து வருகிறதே!

  எங்கோ டார்ஜிலிங் அருகே உள்ள ஒரு ஹோட்டல் நிர்வாகம் ரஜினிகாந்த் பெயரை பங்களாவுக்கு சூட்டுவதோடு ‘தலைவா ஸ்பெஷல்’ என்றும் சூட்டியுள்ளார்கள் என்றால் அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேர்த்து தானே பெருமை.

  தமிழர்கள் உருவாக்கி பெயர் சூட்டிய ‘கட்டுமரம்’ தான் Catamaran என்று ஆங்கிலத்தில் பெயரானது என்று சொல்லப் படுகிறது. ரஜினிகாந்தால் தற்போது ‘தலைவா’ வட இந்தியாவிலும் சில நாடுகளிலும் பரவலாக அறியப்படுகிறது. கட்டுமரம் போல் உலகம் முழுவதும் ‘தலைவா’ என்ற தமிழ்ச் சொல் வருங்காலத்தில் ‘Leader’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக ஆனாலும் ஆச்சரியமில்லை.

 4. Kumar says

  தன் மருமகனின் கடனை அடைக்க கால்ஷீட் கொடுக்கும் ரஜினி, அதற்கான சம்பளமாக 50 கோடியை நிர்ணயிப்பாரா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும் சார்! நீங்களே ரஜினி வீட்டுக்குள்ள எட்டிப்பார்த்த மாதிரி எழுதியிருக்கீங்க? அது சரி…. பரபரப்புக்காக எழுதுற சினிமா நிருபர்கள் தானே நீங்க எல்லாம்? அன்னைக்கு கமல் பத்தின ஒரு கேள்விக்கு நீங்க சொன்ன பதில்லயே தெரிஞ்சுபோச்சு உங்க லட்சணம்! காட்சி சரியா வரணும்னு தான் கமல் சில விஷயங்கள்ல கண்டிப்பா இருப்பாரு… பண விஷயத்துல அவர் அப்படியெல்லாம் இல்லைன்னு அடிச்சு விட்டீங்களே!

 5. ஸ்டாலின் says

  காலா 50 நாள் முடிவற்ற நிலையில் உண்மையான வசூல் இதோ
  காலா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்ற படம்.

  இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது, ஆனால் அதையெல்லாம் முறியடித்து படம் வெற்றி பெற்றது.

  இந்த நிலையில் காலா 50 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுதும் 200 கோடி வசூல் செய்துள்ளது.

  மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் பிஸினஸ் 66 கோடிக்கு நடக்க ஆடியோ ரைட்ஸ் 2 கோடிக்கு நடந்துள்ளது.

  இதோடு டிஜிட்டர் ரைட்ஸ் அமேசான் போன்றவை 30 கோடி வரை நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உடம்பு சரியில்லேன்னு நினைச்சுட்டானே!

https://www.youtube.com/watch?v=4C-218ee7Fg&t=15s

Close