காலா / விமர்சனம்

துவைக்கறதுக்கு துணி இல்லேன்னா கூட, ‘ரஜினி போட்டோ இருந்தா கொடேன். போட்டு புரட்டிட்டு தர்றேன்’ என்கிற அளவுக்கு ஃபுல் டென்ஷன் ஆகிக்கிடக்கிறது டமிளன்ஸ் நெஞ்சூ! இந்த பொல்லாத காலத்தில், ரஜினியை புரட்சி மைந்தனாக காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித்.

சமீபகாலமாக புரட்சிக்கே புரட்சி சொல்லித்தருகிற புது வாத்தியாராக கிளம்பியிருக்கும் ரஞ்சித்தின் கைக்குள் அடக்க ஒடுக்கமான ஒரு ஆயுதமாக உட்கார்ந்துவிட்டார் ரஜினியும். இந்த காம்பினேஷன் கலக்குச்சா, கலங்குச்சா?

நகரத்தை அழகு படுத்த நினைக்கிற எல்லா அரசும், முதலில் கை வைப்பது குடிசையில்தான். “நிலத்தை பிடுங்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் அவனை பணியாதே… துணி” என்கிற அழுத்தமான கருத்துக்குள் காலாவை பொருத்தி, கவுரமான கலகக்காரன் ஆகியிருக்கிறார் பா.ரஞ்சித்.

மும்பை தாராவி என்றாலே, சட்டென்று கண்முன் வரும் ‘நாயகன்’ படத்தை, இந்த ‘காலா’ ஒரு போதும் முந்திவிட முடியாது என்று புரிந்தாலும், வேறொரு குறுக்கு சந்தில் வண்டியை செலுத்தி, ‘அபாரம்’ என்கிற இலக்கை தொட்டிருக்கிறார் மனுஷன். பாராட்டுகள்.

பேரன் பேத்தி எடுத்தாலும், தனது ஏரியாவை தன் கன்ட்ரோலில் வைத்திருக்கும் ரஜினி, தாராவியின் குடிசைகளை காலிபண்ணிவிட்டு அங்கு பில்டிங் கட்ட வரும் பால்தாக்கரே மாதிரியான ஒரு கட்சித்தலைவரிடம் தன் பலம் காண்பிக்கிறார். காலா இருக்கும்வரை தாராவி நமக்கில்லை என்கிற முடிவுக்கு வரும் பொலிட்டீஷியன் நானா படேகர், ரஜினியை குளோஸ் பண்ண முடிவெடுக்கிறார். எண்ணம் நிறைவேறியதா? இதுதான் காலா ஃபுல் பிலிம்.

ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோக்களை கையாளும்போது வர வேண்டிய எச்சரிக்கை உணர்வும், துல்லியமான ஜாக்கிரதையும் பா.ரஞ்சித்திற்கு இல்லை என்றே படுகிறது. வழக்கமாக தன் படங்களின் அறிமுக காட்சியில் கால் கட்டை விரல், நெற்றி முடி என்று மெல்ல மெல்ல விடுகதை போல அவிழும் ரஜினி, இந்த படத்தில் ஒப்பனிங் காட்சியில் கிரிக்கெட் ஆடி ‘டக் அவுட்’ ஆகிறார். (என்ன கொடுமை சரவணன்?) அதற்கப்புறமும் பல காட்சிகளில் ரஜினியின் மாஸ், ‘லாஸ்’ என்ற கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளது. நல்லவேளை… நம்மையறியாமல் கைதட்ட வைக்கிற அந்த நாலைந்து காட்சிகளுக்காக பலே பலே. குறிப்பாக அந்த இன்டர்வெல் பிளாக்.

‘‘என் பர்மிஷன் இல்லாமல் நீங்க உள்ள வந்திருக்கலாம். ஆனா நான் பர்மிஷன் கொடுத்தால்தான் நீங்க இந்த தாராவியை விட்டே வெளியில் போக முடியும்” என்று ஸ்டைல் சிரிப்பு சிரிக்கும் ரஜினி, அதற்கப்புறம் நானா படேகரிடம் காட்டுகிற அந்த மறியல் யுக்தி இருக்கிறதே… வாவ். கலக்கலோ கலக்கல்.

ஃபுல் மப்பில் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்படுகிற ரஜினி, அங்கு வந்திருக்கிற மினிஸ்டரை, ‘ஆமா… இவரு யாரு’ என்று திரும்ப திரும்ப கேட்கிற காட்சியில் ரஜினிக்குள் இருக்கிற காமெடி சென்ஸ் உச்சம் பிடிக்கிறது. ஒரு ரஜினி… படம் முழுக்க அந்த ஒரே ரஜினிதான் என்கிற தத்துவத்தை தன் தன்னம்பிக்கையால் சற்றே ஆட்டிப்பார்க்கவும் செய்கிறார் ரஞ்சித். படத்தில் வரும் இன்னபிற கேரக்டர்களும் மனதில் பதிகிறதே… அதனால்!

குறிப்பாக நானா ‘பலே’கர்!

தாத்தா… ராவணனை கொன்னுடுவீங்களா? என்று கேட்கும் பேத்தியிடம், என்ன பண்றது… வால்மீகி அப்படி எழுதிட்டாரே… என்று சிரிக்கிற காட்சி ஒன்று போதும். இவரில்லாத காலாவை நினைத்தே பார்க்க முடியாது.

திடீர் என்ட்ரி கொடுத்து, ரஜினியின் இளமைக்கால காதலை கிளறிவிடும் ஹுமா குரோஷியும் சர்வ பொருத்தம். இவரை பார்த்து கண்கள் விரிய பொறாமைப்படும் ரஜினியின் மனைவி ஈஸ்வரிராவின் நடிப்பு கண்ணிலேயே நிற்கிறது. கண்ணுக்கு முன்னாலேயே முன்னாள் காதலியை சந்தித்துவிட்டு வரும் ரஜினியிடம், “நான் எட்டாவது படிக்கும் போது தப்படிக்கிற பெருமாள் என்னையே சுற்றி சுற்றி வந்தான். நான் போய் அவனை பார்க்குறேன்” என்று கிளம்புகிற காட்சியில் தியேட்டரே துவம்சமாகிறது.

சமுத்திரக்கனி ஃபுல் டைமும் ஃபுல் மப்புக்காரராக வருகிறார். அதனாலேயே அவர் சீரியசாக பேசினாலும், டேக் இட் ஈசியாகிறது தியேட்டர். சரியா யூஸ் பண்ணியிருக்கலாம்.

கடைசியில் ரஜினி இறந்தாரா, இல்லையா என்கிற காட்சிக் குழப்பம் ரசிகர்களின் திருப்திக்காக என்றாலும், தைரியமாக தெளிவுபடுத்தியிருக்கலாமோ? அந்த ஒரு நிமிஷ காட்சி, பிரபாகரன் உசிரோடதான் இருக்காரோ என்றும் யோசிக்க வைப்பதால், உலகத் தமிழர்கள் சந்தோஷப்படுவார்கள்.

தனியாக கேட்கிற போதும் கொடுமை, படமாக பார்க்கிற போதும் தண்டம் என்று எரிச்சலுற வைக்கிறது சந்தோஷ் நாராயணனின் பாடல்கள். நல்லவேளை… பின்னணி இசை மட்டும் ஆறுதல்.

அந்த மழை ஃபைட் அபாரம்.

தமிழ்சினிமாவில் அண்மைக்காலமாக வெளியான ரெண்டே முக்கால் மணி நேரப் படங்களின் கதி, அதோகதி என்ற உண்மை தெரிந்திருந்தும், அதையெல்லாம் மனதில் போட்டுக் கொள்ளாத எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ்.

ராமராஜ்யத்தை நம்புகிற மனுஷனை வைத்தே, ராமனின் கூட்டமே வில்லங்க கூட்டம் என்று சொல்லியிருக்கிற பா.ரஞ்சித்தையும், ‘ஆஹா… கொட்டாவி விடுற நேரத்துல உள் நாக்குல கிள்ளிட்டாரே’ என்று சலம்பாமல் அமைதிகாத்த ரஜினியையும் ஒருசேர வியக்க வேண்டியிருக்கிறது.

கடைசிக் காட்சியில் எல்லார் முகத்திலும் கரி! ரஜினியைக் கொண்டே ரஞ்சித் செஞ்சதுதான் சரி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
Kaala Movie Review Video

https://www.youtube.com/watch?v=6BrxqeTK92A&t=2s

Close