கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்

சிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி! பெரிய குடும்பத்தின் கதைகளை, காது விரிய விரிய… கண்கள் எரிய எரிய… சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை…. சுகமான தாலாட்டு!

ஐந்து அக்காள்கள்… ஒரே ஒரு தம்பி என்று ஆனந்த பவனி வரும் கார்த்தி, அக்கா மகள்களில் ஒருவரை கட்டிக் கொள்வார் என்பதுதான் நம்பிக்கை. அதில் குறுக்கே வருகிறது காதல். அந்த இன்னொருத்தியின் காதலுக்கு அப்பா சத்யராஜ் சம்மதிக்கும் போதே, “குடும்பம் பிரிஞ்சுராம பார்த்துக்கப்பா” என்று சொல்ல, கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. இனி குடும்பங்கள் பிரியும். குண்டான் குண்டானாய் கண்ணீர் வடிப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது.

யூகித்த அதேதான் நடக்கிறது என்றாலும், கதையோடு கரைந்து… உணர்வோடு மயங்கி… திரையோடு புதைந்து போக வைக்கிறார் பாண்டிராஜ். குடும்ப கதைகளின் ராஜாவான பீம்சிங்தான் மறுபிறவி எடுத்து வந்தாரோ? மார்வலஸ் டைரக்டரே!

படத்தில் வருகிற ஒவ்வொருவரின் பெயரையும் ஒரே மூச்சில் தவறில்லாமல் சொல்லிவிட்டால், இந்த படத்தின் நெகட்டிவ் ரைட்சையே கூட அந்தாளுக்கு எழுதி வைத்துவிடலாம். அவ்வளவு கஷ்டம். ‘காமெடி கங்குலி’யான சூரிக்கே சிவகாமியின் செல்வன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், சிங்க பேமிலியின் துணிச்சலை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

சகல தரப்பும் ரசிக்கிற மாதிரியான கேரக்டர்களை மட்டுமே செய்து வரும் கார்த்தி, இந்தப்படத்திற்கு பின் கிராமத்து அக்காள்களின் சுவீகார தம்பியாக மாறினால் ஆச்சர்யமில்லை. கிழவிக்கு பஸ்சை நிறுத்தாத டிரைவரை விரட்டிப் பிடித்து அட்வைசிப்பதில் துவங்கி, நீங்க வேணும்னா என்னை அடிங்க. திட்டுங்க. ஆனா வராம மட்டும் இருந்திராதீங்க என்று தழுதழுக்கிற வரைக்கும் மனுஷன் எங்க வீட்டுப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.

கண்களில் குறும்பு வழிய காதலிக்கும் கார்த்தி, அதே காதலுக்கு குறுக்கே வரும் வில்லனை நையப்புடைக்கும்போது அதே கண்களில் தெறிக்குது நெருப்பு.

ஒரு பெரிய தோள் கிடைத்தால் அத்தனையையும் அள்ளி அதன் மேல் சாத்து என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். தாங்கோ தாங்கென தாங்கியிருக்கிறார் சத்யராஜ். அவரது நக்கல் நையாண்டியெல்லாம் தாண்டி நிற்கிறது அந்த கேரக்டரின் கனம்.

வெகு நாட்களுக்குப்பின் சூரியின் நாக்கு சூரத் தேங்காய் உடைக்கிறது. மனுஷன் முணுக்குன்னு வாய் திறக்கும் போதெல்லாம் தியேட்டரே பளிச்சுன்னு சிரிக்குது. அதிலும் விவசாயம் பற்றி கார்த்தி மேடையில் பேச பேச கீழே உட்கார்ந்திருக்கும் சூரி கொடுக்கும் கவுன்ட்டர் டயலாக்ஸ், கவர்மென்ட்டின் அன்ட்ராயரை உருவிக் காயப் போட்டுவிடுகிறது. (துணிச்சல்…துணிச்சல்)

அர்த்தனாவின் கண்கள் அநியாயத்துக்கு பேசுகிறது. பொல்லாத துக்கம் பொங்கி வரும் நேரத்தில் கூட, அவர் டயலாக்கை விட கண்களையே நம்பியிருக்கிறார். அழகு.

ப்ரியா பவானி சங்கருக்கு செல்பி ஸ்டிக்குடன் திரிவதே பெரும் பணி. நடுநடுவே டிராக்டர் ஓட்டுகிறார். புல்லட் ஒட்டுகிறார். நடிக்கணுமே? ஒரு காட்சியில் அதற்கும் வழியேற்படுத்திக் கொடுத்து குலுங்கி குலுங்கி அழ விட்டிருக்கிறார் டைரக்டர்.

படத்தின் ஆகப்பெரிய மைனஸ்சே சாயிஷாதான். (வனமகனில் பார்த்த அந்த பிரஷ்னஸ்சை எவன்மா திருடுனது?) ஒங்க ஜீரோ சைஸ் கொள்கையில தீ வைக்க! நல்லவேளை… இவருக்கும் கார்த்திக்குமான காட்சிகளில் அநியாயத்துக்கு பசுமை. நினைத்து நினைத்து ரசிக்க முடிகிறது.

இளவரசு, மாரிமுத்து, சரவணன் என்று ஒரு டஜன் நடிகர் நடிகைகள். அவ்வளவு பேரும் அப்படி அப்படியே கேரக்டருக்குள் கரைந்து போய்விடுகிறார்கள். குட்!

ஒரு கதைக்குள் காதல், வீரம், சென்ட்டிமென்ட் மட்டுமல்ல… மக்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய அட்வைசும் முக்கியம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இவர் எழுதிய விவசாயம் பற்றிய டயலாக்குக்கு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று கைதட்டுகிறது.

எல்லாம் சரி. பின் பாதி கதையில் நாம் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவின் அத்தனை பாசப் பிணைப்பு பரவசங்களும் வரிசை கட்டி அடிக்கிறதே…? கொஞ்சம் குறைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ? சமயங்களில் அகன்ற திரையில் சீரியல் பார்க்குறோமோ என்கிற உணர்வும் தட்டிவிட்டு மறைகிறது.

பின்னணி முன்னணி என்று இரண்டு தளங்களிலும் வளம் சேர்த்திருக்கிறார் டி.இமான். அட…வெள்ளக்கார வேலாயி பாடலை முழுசாகவே எடுத்து விருந்து படைத்திருக்கலாம். வேல்ராஜின் ஒளிப்பதிவில் திருவிழா களேபரம்.

இவ்ளோ பெரிய சிங்கத்தை வளர்க்க எவ்ளோ மெனக்கெட்டிருப்பாரு பாண்டிராஜு? நினைச்சாலே பிரமிப்பா இருக்கு!

கடைக்குட்டி தங்கம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காயத்ரி… பின்னே மடோனா! வாய் பிளக்கும் விஜய் சேதுபதி!

Close