காதல் கண் கட்டுதே விமர்சனம்
காதல் இருக்கே… அது அவிக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரி. நுனி எது? அடி எது? என்றே புரியாது. அதுவும் அந்த பாழாய் போன காதல் வந்துவிட்டால் மேற்படி ஜோடி படுகிற பாடு? நைசாக நோட்டம் விடுகிற எவரையும் கிர்ரடிக்க வைக்கும். அப்படிப்பட்ட காதலை வைத்துக் கொண்டு அல்லாடுகிற ஒரு ஜோடியின் கதைதான் காதல் கண் கட்டுதே!
இந்தப்படம் கோடம்பாக்கத்திற்கு எந்தவித நன்மையளிக்குமோ தெரியாது. ஆனால் குண்டு குண்டு கண்களுடன், கோலி உருட்டும் பேச்சுகளுடன் ஒரு ஹீரோயினை வழங்கியிருக்கிறது. அதுல்யாவின் நடிப்பை அலசுவதற்கு முன் இந்தப்படத்தின் கதையை கொஞ்சம் நோட்டம் விடலாமா?
பத்திரிகை நிருபராக வேலை பார்க்கும் அதுல்யாவுக்கும், பைக் ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்க்கும் கே.ஜி க்கும் லவ்! சின்ன சின்ன லுக், அதை விட சின்னதான ஸ்பரிசங்கள் என்று பட்டாம்பூச்சியை பறக்கவிடும் அவர்களின் காதலில் குறுக்கே வருகிறது அதுல்யாவின் டிரான்ஸ்பர். அதிக தொலைவு இல்லை. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு போகிறார். அதுவரை புல் டைம் பைக் டிரைவராகவும், பார்ட் டைம் லவ்வராகவும் இருக்கும் கே.ஜி. அதற்கப்புறம் காதலியை அவ்வப்போது மட்டும் மீட் பண்ணுகிற சூழ்நிலை. நடுவில் புகுந்து நங்கூரம் போட வருகிறான் சக பத்திரிகையாளன் அனிருத். “என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என்று நேர் டூ நேர் கேட்கும் அவனது கூர் டூ கூர் கேள்விக்கு மவுனம் காக்கும் அதுல்யா, “ஆரம்பிச்சுட்டாளுகடா துரோகத்தை” என்று தியேட்டரையே புலம்ப வைக்கிறார்.
அதே சந்தேகம் கே.ஜிக்கும் வர, “போடி காதல் துரோகி” என்று கோபத்தில் முகம் சிவக்க, “போடா போடா. உன் காதலே வேணாம்” என்று அதுல்யாவும் மிளகாய் பொடி முகம் காட்ட… படம் இறுதிக்கட்டத்திற்கு நகர்கிறது. அப்புறம்? ஜோடி சேர்ந்திச்சா? அனிருத் லவ் என்னாச்சு? இதெல்லாம்தான் முடிவு.
இந்த உலகத்தையே மறந்துவிட்டு சுற்றமும் நட்பையும் மறந்துவிட்டு சதா சர்வ காலமும் காதல் நினைப்போடு திரியும் அக்மார்க் இளசுகளுக்கு ஆதார் கார்டு நம்பர் போல பொருத்தமான ஜோடியாக அமைந்திருக்கிறார்கள் கே.ஜியும் அதுல்யாவும். அவர்களின் ஊடல், கூடல் எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது. ஆனால் புது புது சம்பவங்களை கோர்க்க முடியாமல் திணறுகிற இயக்குனர் சிவராஜ், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கவுதம் மேனனின் காதல் படம் போல ருசி ஜாஸ்தியாக இருந்திருக்கும்.
இப்படத்தில் எல்லாரும் புதுமுகங்கள் என்பதுதான் துணிச்சலோ துணிச்சல். மற்றொரு ஹீரோவாக வரும் அனிருத்தும் கூட இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.
இந்தா ஒரு பாட்டு… அட இன்னொன்னு வச்சுருக்கேன்யா… இதோ மறந்துட்டேன். இதையும் வச்சுக்கோ என்று சட்டை பேன்ட் உள்ளிட்ட அத்தனை பாக்கெட்டிலிருந்தும் பாடல்களை எடுத்து நீட்டிக் கொண்டேயிருக்கிறார் இசையமைப்பாளர். ஒன்றே ஒன்று மட்டும் ஓ.கே லிஸ்ட்டில் சேர்கிறது. மற்றதெல்லாம் ஆர்மோனிய கட்டையில கரையான்.
அவ்வப்போது வரும் அந்த டாப் ஆங்கிள் ஷாட், ஒளிப்பதிவாளரின் திறமையை கொண்டாட வைக்கிறது.
ஹ்ம்… துள்ளலும் துடிப்புமாக வந்திருக்க வேண்டிய படம்..?
-ஆர்.எஸ்.அந்தணன்