கதாநாயகன் / விமர்சனம்

ஒரு சாதா நாயகன், சர்வ பலம் பொருந்திய தாதா நாயகன் ஆவதுதான் கதை. தொடை நடுங்கியான ஹீரோ திடீரென பொங்குவது ஏன்? அவன் போட்டுத் தாக்குகிற சுச்சுவேஷன் எது? இந்த கேள்விகளுக்குள் நாலு கிலோ காதல், ரெண்டு கிலோ சென்ட்டிமென்ட், மூணு கிலோ சிரிப்பு எல்லாவற்றையும் போட்டுக் குலுக்கினால், இரண்டு மணி நேரம் பத்து நிமிஷ சொச்சத்துடன் ஒரு சிரிப்புப்படம் தயார். (நடுநடுவே வரும் சோம்பல் முறிவுக்கு கம்பெனியே முழு பொறுப்பு)

டைரக்டர் முருகானந்தத்தின் இந்த ‘டேக் இட் ஈஸி’ திரைக்கதைக்கு ஆஞ்சநேய பலம் கொடுத்து அதிர விட்டிருக்கிறார் சூரி.

சாலையை கிராஸ் பண்ணுவதற்கு கூட கிழவியின் துணையை எதிர்பார்க்கிற பயந்தாங்கொள்ளி விஷ்ணுவிஷாலை பக்கத்து வீட்டுப் பெண் கேத்ரின் தெரசா விரும்புகிறார். ஒருவழியாக லவ்வுக்கு தயாராகும் விஷ்ணுவுக்கு வருங்கால மாமனாரே செக் வைக்கிறார். ‘அநியாயத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாத உனக்கு என் பெண்ணை கொடுக்க மாட்டேன்’ என்று அவமானப்படுத்துகிறார். என்னடா இப்படியாகிருச்சே என்று கவலைப்படும் விஷ்ணு, தமிழ்நாட்டையே குப்புற தள்ளிவரும் அந்த கொடூர அரக்கனை கையில் எடுத்து லபக் லபக்கென விழுங்கி வைக்க…. அதற்கப்புறம் நடக்கிற பைட், அதிரிபுதிரி! (அப்ப சரக்குதான் தைரிய மருந்தா?)

அடிவாங்கிய வில்லனும், விஷ்ணுவுக்கு 50 லட்சம் பணம் கொடுத்த ஷேக்கும் சேர்ந்து துரத்த… அவர்களை எப்படி சமாளித்தார்? விஷ்ணுவுக்கு கேத்ரீன் கிடைத்தாரா? விடை தெரிந்த கொஸ்டீனுடன் நகர்கிறது படம்.

பக்கத்து வீட்டில் அப்படியொரு லட்டு இருப்பதை கூட அறியாத விஷ்ணு, அந்த கேரக்டருக்கு நச் பொறுத்தம்! ஆக்ஷனுக்கு தோதான அந்த முகத்தில், அப்பாவித்தனத்தையும் எளிதாக கொண்டு வந்திருக்கிறார். ரொமான்சில் பின்னும் அவர், காதல் ஏக்கத்தை மட்டும் ஜஸ்ட் ஆவரேஜில் கடப்பதுதான் ஷாக். இவருக்கும் ஆனந்தராஜுக்குமான காமெடியை விட, இவருக்கும் அருள்தாசுக்குமான ஏரியா, அடி தூள்!

ஆட்டுப்பாலோ, மாட்டுப் பாலோ, ஒட்டகப் பாலோ… இதனுடன் சூரி என்கிற டிகாஷனை கலந்தால் சுட சுட காபி ரெடி! விஷ்ணுவின் காம்பினேஷனும் அப்படியே! “வாடா… அவ வீட்டு முன்னாடி பாய் போட்டு படுப்போம்” என்று யார் வீட்டுக்கு முன்போ இந்த அட்ராசிடி பெல்லோஸ் பாய் போட்டு அலப்பறை பண்ணுவது அதகள ரணகளம். அதற்கப்புறம் ஆனந்தராஜின் வீட்டில் சூரி மாட்டிக் கொள்வதெல்லாம் பேய்சிரிப்பு ரகம்!

அப்புறம் கெத்தாக ஆனந்தராஜ்! இவரது ஏரியாவை மட்டும் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் டைரக்டர் முருகானந்தம். சந்தோஷத்திலிருக்கும் ஆனந்தராஜ் அந்த பிரியாணி பாயின் உச்சி மண்டையில் முத்தம் கொடுப்பதும், கடுப்பிலிருக்கும் போது சியர்ஸ் கேர்ளின் பின்புறத்தில் அடித்து விரட்டுவதுமாக ஒரே அமர்க்களம்.

நட்புக்காக ஒரு காட்சியில் மட்டும் விஜய் சேதுபதி. ஓஷோவின் தத்துவங்களோடு அடுத்தவனின் கஷ்டத்தையும் பிசைந்து அடிக்கிறார் மனுஷன். அரை நாள் கால்ஷீட்டோ, ஒரு நாள் கால்ஷீட்டோ. சேதுபதி வருகிற சீன் மட்டும் ஃபுல் திருப்தி!

யு-வுக்கும் ஏ-வுக்கும் நடுவில் நின்று பதறடிக்கிறார் கேத்ரின் தெரேசா! (பேர்ல பின் பகுதிய வெட்டி எறிஞ்சுடும்மா. ரொம்ப தப்பாயிருக்கு) கண்டவுடன் காதல். ஒரு முறை லிப்ட் கொடுத்தாலே டூயட் என்கிற அரத பழசுதான் அலுப்பு.

முறைப்பு வில்லன் அருள்தாஸ், தன் முறைப்பை குறைத்துக் கொள்ளாமலே சிரிக்க வைத்திருக்கிறார். கிரேட்!

ஷான் ரோல்டனின் இசையில் ‘தினமும் உன் நினைப்பு’ பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே.

காமெடி பண்ணுகிற ‘கதாநாயகனை’ யாருக்குதான் பிடிக்காது?

-ஆர்.எஸ்.அந்தணன்

https://www.youtube.com/watch?v=XQWsOAXlHU0

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
GoliSoda – 2 (GST) | Audio Teaser

https://youtu.be/w3rRYe8Gp-Y

Close