கமல்ஹாசனை வியக்க வைத்த கூலித்தொழிலாளி! அட…இதுலேயுமா ஈகோ?
விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உனை காணாத…’ பாடலை அப்படியே சுருதி சுத்தமாக ஒரு கூலித் தொழிலாளி பாட… அதை செல்போனில் படம் பிடித்து உலவ விட்டார் அவர் நண்பர். திறமை எங்கிருந்தாலும் திமிறிகிட்டு வெளியே வரும் என்கிற உண்மையை அந்த ஒரு வீடியோ காட்டிவிட்டது. எப்படியோ தாவி தாவி கமல் பார்வைக்கே போனது அந்த பாட்டு.
நம் பாடலை யாரோ ஒரு கூலித் தொழிலாளி இவ்வளவு அம்சமாக பாடுகிறாரே. அவர் யாராக இருக்கும்? என்று வியந்த கமல், இந்த தம்பியை எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சு கொண்டாங்க என்று கூறி அதை அப்படியே பார்வேர்டு செய்தார் இருவருக்கு. ஒருவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இன்னொருவர் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன். இருவரும் தத்தமது ட்விட்டரில் இவரை பற்றி தகவல் கேட்டார்கள். எப்படியோ சிக்கினார் பாடகர். பெயர் ராகேஷ் உன்னி.
அவரை கண்டுபிடிக்க சொன்னதே கமல்தான் என்கிற விஷயத்தை ஏனோ இவ்விருவரும் சொல்ல மறுத்ததை உணர்ந்த கமல், தானே ராகேஷ் உன்னியை சென்னைக்கு வரவழைத்துவிட்டார். அந்த இனிய தருணத்தில் ஜிப்ரான் கூட அருகில் இல்லை. ராகேஷை பாடச் சொல்லி ரசித்த கமல், தன் அடுத்த படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்.
இதையெல்லாம் செய்தியாக படித்து சந்தோஷப்பட்டிருப்பார்கள் சங்கர் மகாதேவனும், ஜிப்ரானும்.