கனா / விமர்சனம்

‘நகச்சுத்தி’க் காரனின் மோதிர விரலுக்குள் நறுக்கென ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இந்த கனா எழுப்புகிற வினா ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரோ… அவர்களுக்குத் தெரியும், இது வெறும் படமல்ல…. அதையும் தாண்டிய கத்திக் குத்து என்று!

கிரிக்கெட் வெறியரான சத்யராஜின் மகள்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தியா தோற்றுவிட்டதே என்று கண்ணீர் விடும் அப்பாவுக்காக அதே இந்தியன் டீமில் விளையாடி ‘கப்’ வென்று அப்பா முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று நினைக்கிற மகள் தன் லட்சியத்தை நிறைவேற்றினாளா? இரண்டே வரி கதைதான். ஆனால் இதற்குள் இருக்கும் போராட்டத்தை சுளீர் சுளீரென சொல்லிக் கொண்டேயிருக்கிறார் அருண்ராஜா. விவசாயத்தையும் விளையாட்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த தருணம், இந்தியாவின் நிகழ்கால அரசியல் தலைகுனிய வேண்டிய தருணம்!

ஒரு பெண் தன்னை சுற்றியிருக்கிற வேலிகளை உடைத்துக் கொண்டு முளைப்பது சாதாரண விஷயமல்ல என்பதை உணர்வும் மூச்சுமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாவித்ரி, பானுமதிகளை தமிழ்சினிமா இழந்துவிட வில்லை என்பதை நிரூபித்திருக்கிற ஐஸ்வர்யாவுக்கே இப்படத்தின் பெரும்பாலான பெருமைகள் போய் சேர வேண்டும். அப்படியொரு பர்பாமென்ஸ். உழைப்பு. ஒரு நிஜமான கிரிக்கெட் வீராங்கனையாகவே உருமாறியிருக்கிறார். எங்கும் எதிலும் டூப் இல்லை. இந்த வெறித்தனமான உழைப்பு… வேறெந்த நடிகைகளுக்கும் சாத்தியமில்லாததும் கூட!

‘பாஸு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்க நினைக்கிறவங்களுக்குதான். சாதிக்க நினைக்கிறவங்களுக்கு இல்ல’ -பெற்ற மகளின் மேல் மொத்த நம்பிக்கையும் இறக்கி வைக்கிற அப்பாவாக சத்யராஜ். விவசாயக் கடனுக்காக வீட்டையே ‘ஜப்தி’ கொடுத்துவிட்டு மகள் இந்தியாவுக்காக விளையாடுவதை ரசிக்க உட்காருகிறாரே… அங்கு பொங்குகிறது தியேட்டர். இந்தப்படத்தின் கடைசி அரை மணித் துளிகளை ஆளுக்கு கொஞ்சமாய் பங்கு போட்டுக் கொண்டு அசர விடுகிறார்கள் அப்பனும் மகளும்!

கிரிக்கெட் கோச்சராக சிவகார்த்திகேயன். இந்த படத்தை தயாரித்து ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டுக்கும் சேர்ந்த கைதட்டல்கள் நிச்சயம். “ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்!” அழுத்தம் திருத்தமாக பேசும் சிவாகார்த்திகேயன், வெற்றி என்பது உடல் பலம் மட்டுமல்ல, உள்ளத்தின் பலமும் கூட என்று உணர்த்துகிறார்.

சத்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் என்னுயிர் தோழன் ரமாவுக்கு அழுத்தம் திருத்தமான ரோல். வயசுக்கு வந்த மகள் ஆம்பள பசங்க கூட கிரிக்கெட் விளையாடுகிறாளே என்கிற ஆத்திரத்தை விளக்குமாறு கொண்டு விளாசி விளாசி புரிய வைக்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் லட்சியத்தை அவரே புரிந்து கொள்கிற காட்சி சிலிர்ப்பு.

நண்பன் சத்யராஜ் வாழ்க்கையே வெறுத்து ஒரு விபரீத முடிவை எடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு, அதை சமயோஜிதமாக தடுக்கிற இளவரசு கேரக்டரில்தான் எவ்வளவு பக்குவம்!

கரணம் தப்பினால் டாகுமென்ட்ரி என்கிற அபாயத்தை தன் கலகலப்பால் கரையேற்றுகிறார்கள் தர்ஷன், முனிஸ்காந்த், பாக்யராஜ், சவரிமுத்து போன்ற நடிகர்கள்.

குறிப்பாக சின்ன வயசு ஐஸ்வர்யா ராஜேஷாக ஒரு யூனிபார்ம் சிறுமி நடித்திருக்கிறாள். என்னவொரு பர்பாமென்ஸ்!

நினன் தாமஸ் இசை அற்புதம். அதுவும் அந்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் சூப்பர் ஹிட் சுகம்!

வேல்டு கப் கிரிக்கெட் போட்டியை கண்முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு பாராட்டுகள்.

‘விளையாட்டை சீரியஸ்சா எடுத்துக்கிற இந்தியா, விவசாயத்தை விளையாட்டா கூட எடுத்துக்க மாட்டேங்குது!’ இப்படி படம் நெடுக சுளுக்கெடுக்கும் வசனங்களை தனி தொகுப்பாகவே வெளியிடலாம்!

வருட இறுதியில் அருளப்பட்டிருக்கும் மாபெரும் பிரசாதம் கனா! வழங்கிய உள்ளங்களுக்கு வணக்கமும் வந்தனமும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Thanigai says

    Padam aruvai. Anthanan Boss, yenna nutu kalanduruchaa? Padam bore. Honestly telling, this movie is not even 10% of iruthi sutru. Forgettable movie.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெ.வின் வரலாறு! இன்னும் எவ்ளோ பேர்தான்ப்பா வருவீங்க?

Close