கண்ணே கலைமானே / விமர்சனம்
மெதுவடைக்கு சைட் டிஷ் மெதுவடைதான். அதுவும் முந்தா நாள் போட்ட வடை என்றால், நாக்கு தூக்குல தொங்கிடும் அல்லவா? அப்படியொரு அனுபவத்தை(?) அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அரத பழசான மேக்கிங்! அந்த ஒரு காரணத்தாலேயே புரத சத்தில்லாத குழந்தை போல முக்குகிறது படம்! ‘கண்ணே…’ என்று காதலித்தவளை கொண்டாடுகிற ஹீரோ, அந்த கண்ணின் கண்ணுக்காக கண்ணீர் விடுவதுதான் படம்.
வங்கி அதிகாரியாக கிராமத்திற்கு வரும் தமன்னா, அந்த ஊர் விவசாயி உதயநிதியின் மீது லவ்வாகிறார். குடும்பமே இந்த லவ்வுக்கு ஓகே சொல்ல சங்கடப்படும் வேளையில், எப்படியோ லவ் நிறைவேறுகிறது. தானுண்டு… தன் காதலுண்டு என்று வாழ்கிற உதயநிதிக்கு ஒரு திடீர் ஷாக். அது என்ன? அதிலிருந்து மீண்டாரா? க்ளைமாக்ஸ்!
‘OKOK’ மாதிரியான படங்களை ஓக்கே செய்யும்போது இருந்த உதயநிதி, ரவா மூட்டை, கோதுமை மூட்டை போல வெயிட்டான ரோலுக்கு ஆசைப்பட்டதன் விளைவு… உடன்பிறப்புகளே தண்டவாளத்தில் தலை கொடுக்கிற அளவுக்கு ஃபீல் ஆகி வருகிறார்கள். அந்த வலியை ஏதும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை நம் மூன்றாம் தலைவர். உரத்தை பற்றி பேசுகிறார். விவசாயத்தை பற்றி பேசுகிறார். பேங்க் வட்டி பற்றி பேசுகிறார். அரசியலும் சினிமாவும்தான் நம் தண்டவாளம் என்று நினைப்பது வரைக்கும் சரி. ஆனால் அதற்குண்டான ஃபார்முலாவைதான் மனப்பாடம் செய்ய மறுக்கிறார்.
இருந்தாலும் உதயநிதியின் நடிப்பில் படத்திற்குப் படம் முன்னேற்றம்தான்! (மாற்றம்… முன்னேற்றம்… ஹிட்… என்கிற முழக்கம், இந்த முறை உங்களுக்கும் அன்புமணிக்கும் ஒரு சேர அவுட் குட்டித்தலைவரே!) கதைக்காக தன்னையும் குறைத்துக் கொள்ள முன் வந்தது பெரிய பண்புதான். ஒரு காட்சியில் நையப்புடைக்கப்படுகிறார் உதயநிதி. ஓ மை காட்!
தமன்னாவின் கலருக்காகவே இந்தப்படத்தை கூலிங் கிளாஸ் அணிந்து களிக்கலாம். அப்படியொரு ஜ்வாலை வீசுகிறது அதில். அடக்க ஓடுக்கமான நடிப்பு. ஒரு வங்கி அதிகாரியின் கம்பீரம், அதே நேரத்தில் குழைவான காதல், தோல்வி என்றாலும் அந்த வலியை மிக நாகரீகமாக இறக்கி வைக்கும் அழகு. பிரமாதப்படுத்தியிருக்கிறார் இந்த பெண் எம்.ஜி.ஆர். (நிறத்துல… நிறத்துல…)
வடிவுக்கரசிக்கு பொருத்தமான ரோல். கிராமத்து அப்பத்தாக்களின் முணுமுணுப்பு ஒரு பக்கத்திலும், தீராமல் வழியும் அன்பையும் அள்ளி வீசுகிறார். இப்படியொரு அப்பத்தா வீட்டுக்கொருவர் இருந்தால், நோயாவது, கவலையாவது?
உதயநிதியின் அப்பா கேரக்டரில் பூ ராமு. தன் வரைக்கும் தப்பித்துக் கொள்கிற மனுஷன். இந்தப்படத்திலும் நடிப்பில் ஆஹா போட வைக்கிறார்.
சொல்லிக் கொள்கிற அளவுக்கு வேறு யாரும் படத்தில் இல்லை. (படமே அப்படியில்லை என்பது வேறு விஷயம்)
இசை யுவன்சங்கர் ராஜா. ஒரு வில்லேஜ் படம் கிடைத்திருக்கிறது. வச்சு விளையாடணும் என்கிற அக்கறையோ, ஆசையோ துளியும் இல்லை. கடமைக்கு வாசித்து, கடனுக்கு ட்யூன் போட்டிருக்கிறார்.
மக்கள் செல்வனை உருவாக்கிய சீனு ராமசாமி ஏன் இப்படி மக்கு செல்வன் ஆனார்? பதினாலாவது ரீலில் கூட பிடிபடாத ரகசியமே அதுதான்!
-ஆர்.எஸ்.அந்தணன்