காஷ்மோரா விமர்சனம்
ஆவி, பில்லி, சூனியம், சரித்திரப் பின்னணி என ஒரு ஃபேண்டஸி லெவல் படமாக வந்திருக்கிறது இந்த காஷ்மோரா!
ஊரை ஏமாற்றி உலையில் போடுகிற அரசியல்வாதிகளைப் போல, காஷ்மோரா கார்த்தி, அவரது அப்பா விவேக் தங்கை மதுமிதா என ஒட்டு மொத்த குடும்பமே பில்லி சூனியம், ஆவி, பேய்களை விரட்டுகிறோம் என்று ஊர் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்.
குறிப்பாக காஷ்மோரா கார்த்தியின் ப்ராடுத்தனங்களை உண்மை என்று நம்பி அரசியல்வாதி சரத் லோகித்வாவும் கார்த்தியின் வலையில் விழுகிறார். அவரை நம்பி தன் வீட்டில் நடக்கப் போகும் திடீர் ஐடி ரெய்டுக்கு பயந்து சட்டத்துக்கு புறம்பாக சம்பாதித்த 500 கோடி ரூபாய் பணத்தை அவரது ஆஸ்ரமத்துக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தன் ஆட்கள் மூலமாக கொடுத்து விடுகிறார். அந்தப் பணத்தோடு எஸ்கேப் ஆகும் அப்பா விவேக் விஷயத்தை ஆந்திராவில் ஒரு பங்களாவில் இருக்கும் பேயை விரட்ட கிளம்பும் மகன் கார்த்தியிடம் சொல்கிறார்.
வழக்கம் போல ப்ராடுத்தனங்கள் செய்து பங்களாவில் பேயை விரட்டப் போகும் கார்த்தி அந்த பங்களாவில் மாட்டிக் கொள்கிறார். அவரைத் தேடி வரும் குடும்பமும் அங்கு மாட்டிக் கொள்கிறது. அதன் பிறகு தான் அந்த பங்களாவில் நிஜமாகவே பேய்கள் இருப்பது தெரிய வருகிறது.
யார் அந்தப் பேய்கள்? அவைகள் ஏன் காஷ்மோரா கார்த்தியை பங்களாவை விட்டு வெளியேற விடாமல் தடுக்கின்றன? என்பதே கிளைமாக்ஸ்.
காஷ்மோரா, ராஜ் நாயக் என இரட்டை வேடங்களில் சீனுக்கு சீன் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் கார்த்தி. அதிலும் அந்த ஆவி பங்களாவில் மாட்டிக் கொண்டு அவர் அடிக்கிற டைமிங் கவுண்டர்களால் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.
ப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் ராஜ் நாயக் என்கிற சரித்திர வீரன் கதாபாத்திரத்தில் அந்த அகன்ற திரையில் அகன்ற உடலமைப்போடு அவர் காட்டுகிற உடல்மொழி அட்டகாசத்தின் உச்சம்.
மெழுகை முகத்தில் தடவியது போல மேக்கப் போட்டுக்கொண்டு தலை தனியாக முண்டம் தனியாக வந்து அவர் செய்கிற சண்டைகளும், காட்டுகிற மாயாஜால வித்தைகளும் குழந்தைகளை குதூகலிக்க வைக்கும்.
கார்த்தியின் ப்ராடுத்தனங்களை வெளிக்கொண்டு வருவதற்காக அவரிடம் உதவியாளராகச் சேர்கிறார் ஸ்ரீ திவ்யா. கடைசி வரை அது முடியாமல் போவது ஆன்மீக அடிமைகளின் எதேச்சேதிகாரத்தை காட்டுகிறது. இதைத்தாண்டி ஸ்ரீதிவ்யாவுக்கு ஒன்றுமில்லை. ப்ளாஷ்பேக் காட்சிகளில் இளவரசியாக வரும் நயன்தாரா வாள் சண்டைகளில் மிரட்டல். விழிப் பார்வையில் அழகோ அழகு.
கார்த்தியின் அப்பாவாக விவேக். அவர் அடிக்கிற ஒவ்வொரு காமெடி பஞ்ச்சிலும் காமெடி களை கட்டுகிறது. போர்க்களக் காட்சிகள் உள்ளிட்ட படத்தில் வருகிற விஷுவல் எபெக்ட் காட்சிகள் அபாரம். ராஜூவனின் கலையில் பிரம்மாண்டமான செட்டுகள் பிரம்மிப்பைத் தருகிறது.
”ஓயா ஓயா” பாடலில் மெல்லிசையாக மனசை வருட வைத்த சந்தோஷ் நாராயணன் சரித்திரக் கால காட்சிகளின் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் புதுசாக மெனக்கிட்டிருக்கலாம்.
முதல் பாதியில் கார்த்தி – விவேக்கின் காமெடி அதகளத்தால் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு ஒரு பங்களாவுக்குள்ளேயே நகரும் காட்சிகளுக்கும், அதை ஒட்டி வரும் சரித்திர கால ப்ளாஷ்பேக்கு காட்சிகளுக்கும் எடிட்டர் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்!
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் அவருடைய உழைப்பு காட்சிக்கு காட்சி வெளிப்படுகிறது.
ப்ராடு சாமியார்களின் செழிப்பு, அவர்களின் அடிமைகளான அரசியல்வாதிகள், மக்களின் ஏமாளித்தனம் என சில சமூக அக்கறை சமாச்சாரங்களோடு சரித்திரப் பின்னனியில் இந்த காஷ்மோராவை பிரம்மாண்டப்படமாக ரசிக்க தந்திருக்கிறார் இயக்குநர் கோகுல்!
-சக்திவேல்