கத்தி சண்டை விமர்சனம்
‘அள்ளிப் போட்டு கிண்டி, ஆறுவதற்குள் குடிச்சுரு’ என்பது போலவே வந்து கொண்டிருந்த விஷால் படங்கள், சொசைட்டியில் சோக ரசம் பிழிஞ்சது போதும். கொஞ்சம் ‘ஜாலி மச்சான் ஜாலி’யாக இருக்கட்டும் என வரிந்து கட்டிக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘கத்தி சண்டை’. முதல் பாதியில் சூரி. இரண்டாம் பாதியில் வடிவேலு. நடுநடுவே அடிச்சுப் பின்னும் ஆக்ஷன் மசாலா! தியேட்டரின் மூக்கே சிவக்கிற அளவுக்கு இடையில் வரும் தெலுங்கு வாடை மட்டும், அண்டை மாநில கலெக்ஷனை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பதால் ரசிகர்கள் ஒன்று கூடி மன்னிச்சூ…!
250 கோடி ரூபாயை கடத்திக் கொண்டு போகிற கண்டெயினரை தடுத்து நிறுத்தி, கடத்தல்காரனை கைது செய்கிறார் டெபுடி கமிஷனர் ஜெகபதிபாபு. ஆனால் அவர் ஒப்படைப்பது வெறும் 50 கோடி மட்டும். மிச்ச பணத்தை மீட்க வில்லன் கோஷ்டி ஜெகபதிபாபுவை கடத்த… கடத்தப்பட்ட பாபுவை விஷால் ஓடி வந்து மீட்க… அதற்கப்புறம் அந்த பணத்தை அடித்துக் கொண்டு கிளம்பும் விஷால் யார்? அதிகாரியா, அதிகாரி வேஷத்தில் வந்த டுபாக்கூரா? விஷாலிடம் போன பணம் கடைசியில் என்னாச்சு? நடுவில் விஷாலை காதலிக்கும் ஜெகபதிபாபுவின் தங்கை தமன்னாவின் காதல் நிறைவேறியதா? இப்படி ஒரு படத்தில் நாலாபுறமும் கதை கதையாக நுழைத்து கிறுகிறு கிளப்பியிருக்கிறார் டைரக்டர் சுராஜ். இவரது பலமே நகைச்சுவை என்பதால், அந்த ஏரியாவில் மட்டும் அடங்க மாட்டாமல் குதிக்கிறது தியேட்டருக்கு வந்த சனம்!
சூரியும் வடிவேலுவும் ஒரே படத்தில். ஆனால் தனித்தனியாக. இருவரில் யாருக்கு மார்க் அதிகம்? போட்டி வைத்தால், பொற்…றாமையாக இருக்கிறது…. சூரிதான் பெஸ்ட்! ஏரியா தாதா போல என்ட்ரி கொடுத்து, விஷாலிடம் சிக்கி நார் நாறாகிறார். முன் ஜென்ம கதை சொல்லி தமன்னாவை மகாபலிபுரத்திற்கு அழைத்து வரும் இவர், சூரி கோஷ்டியை விட்டு பாறைகளில் கவிதை எழுதச் சொன்னால், அதிலும் ஆயிரம் ஸ்பெல்லிங் மிஸ்டேக். “ஏண்டா… இதயத்தை வரையறதுக்கு பதிலா கிட்னிய வரைஞ்சா வைக்கிற?” என்று விஷாலிடம் அடி வேறு. “சார். அவனுக்கு எதிர்ல ஏன் பர்ஸ் வெளியில் தெரியற மாதிரி வச்சிங்க. அதான் அடிச்சுட்டான்” என்று கேஷுவலாக ஆரம்பிக்கும் சூரி, அடிக்கப்பட்ட தொகை 250 கோடி என்பதை அறிந்து மயங்கி விழும் சீனெல்லாம், சுராஜின் புகழை வகை தொகையில்லாமல் காப்பாற்றும்.
இதற்கு முன் பலமுறை விஷாலின் பரபர ஆக்ஷன் பார்த்து புல்லரித்த ரசிகர்கள், இந்த படத்தில் அந்த ஆக்ஷனின் ரிக்டர் வேகத்தை அளக்கவே முடியாமல் சந்தோஷப்படலாம். கனல் கண்ணன் தயவில் அவர் போட்டிருக்கும் இரண்டு பைட்டுகளும், ஒரு சேசிங்கும் ஆங்கில படத்தையே பிச்சை வாங்க வைக்கிறது. பிரம்…மாதம் கனல்!
தமன்னாவுக்கு கிட்ஸ் சேனல் காஸ்ட்யூமர் யாரோ டிசைன் செய்திருக்கிறார் போலும். அவ்வளவும் அபாய கட்டத்தை தாண்டி புரள்கின்றன. சோகத்திலும் ரசிக்க வைக்கிற இந்த வெள்ளை பாப்பாவை காணவே மேலும் ஒரு ரிப்பீட் அடிப்பான் ரசிகன். “காக்கா கலர்ல இருக்கிறவனுக்கு கூர்க்கா கலர்ல பொண்ணா?” என்று வாயை பிளக்கும் சூரிக்கு டயலாக் எழுதிய பசும்பொன் ஜோதிக்கு தனி அப்ளாஸ் உரித்தாகட்டும்.
வடிவேலு…? டாக்டர் பூத்ரியாக வருகிறார். அவரது முந்தைய பட ரிக்கார்டை அவரே முறியடிக்க முடியாமல் திணறுகிறார். சற்றே உடல் கனத்தை குறைப்பது எதிர்கால நகைச்சுவை காட்சிகளுக்கு வலு சேர்க்கும். முன் பாதியின் அழுத்தம் பின் பாதியில் இல்லாதது குறைதான். அந்த பள்ளத்தை அவ்வப்போது நிரவி பேலன்ஸ் பண்ணும் வடிவேலு, கடைசியில் விவசாயி… விவசாயி… என்ற பாடிக் கொண்டே நிறைவு செய்வதும், திடீரென விவசாயத்தை பற்றி விஷால் கிளாஸ் எடுப்பதும் சட்டென படத்தின் போக்கையே திசை மாற்றுகிறது. இது நல்லதா, கெட்டதா, ஜனங்களே…? அவ்வளவு பணமும் எங்க பணம்டா… என்று விஷால் அவிழ்க்கும் பிளாஷ்பேக்கும், அந்த கிராமமும், பலமுறை தேய்ந்த பழைய பிளேட் என்பதால் மனதில் துளி கூட ஒட்டவில்லை.
ஹிப் ஹாப் ஆதியின் இசையில் ‘நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடல், இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டில் இணையலாம். பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு கச்சிதம். எடிட்டர் மட்டும் படத்தின் நீளத்தில் கை வைத்திருக்கலாம்.
கத்தி படத்தில் வரும் பிளாஷ்பேக் எங்க படத்திலேயும் இருக்கு என்பதை சொல்லாமல் சொல்வதால்தான் ‘கத்தி சண்டை’ என்று பெயர் வைத்தார்களோ என்னவோ?
ஷார்ப்… ஆனால் நமது காதோரத்தை லேசாக பதம் பார்க்கிற அளவுக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன்
அது கூர்க்கா இல்லை. “காக்கா கலர்ல இருக்கிறவனுக்கு வோட்கா (Vodha) கலர்ல பொண்ணா?”