கொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராசா’ என்று ஓடுகிற ஒரு இளைஞனுக்கு இந்த சமுதாயம் தருகிற கஷ்டம் ‘கொஞ்சம் கொஞ்சம்’ அல்ல. குருவி தலையில் குன்றத்தூர் மலையையே தூக்கி வைக்கிற அளவுக்கு ரொம்ப ரொம்ப பெருசு! இதைதான் இந்தப்படத்தில் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் உதய சங்கரன். அதை பிடிவாதமாகச் சொல்லி, கண்ணில் வழிகிற கண்ணீரை ரசித்திருக்கிறார் மனுஷன். (அட… நீங்க நல்லாயிருக்க)

ஹீரோ கோகுல் கிருஷ்ணா குடும்ப வறுமைக்காக கேரளாவுக்கு போய் பழைய இரும்பு கடையில் வேலை பார்க்கிறார். போன இடத்தில் சும்மாயில்லாமல் ஹீரோயின் பிரியா மோகனுடன் லவ் ஆகிறார். கடுமையான வேலைக்கு நடுவில் தன் மூளையை பயன்படுத்தி விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் அவரை, ஒரு லட்ச ரூபாய்க்காக ஓட விடுகிறது விதி… வொய்?

அவரது ஆசை ஆசையான அக்காவுக்கு இவர் ஒரு செல்போன் வாங்கித்தர, இடி மின்னலுடன் கூடிய ஒரு நாளில் அந்த செல்போனில் மின்சாரம் தாக்கி இரண்டு காதுகளையும் பறி கொடுக்கிறார் அக்கா. காது கேட்கும் கருவிக்குதான் இந்த ஒரு லட்சம் தேவை. க்ளைமாக்ஸ் வரைக்கும் அந்த ஒரு லட்சத்தை புரட்ட அவர் படும் பாடுதான் கொஞ்சம் கொஞ்சம்.

ஒரு நல்ல பையனுக்கு அடுத்தடுத்த நிகழும் சோகங்கள்தான் காட்சிகளாக விரிகிறது. விட்டால் அடுத்த காட்சியில் பாம்பு கொத்துமோ? பல்லி புடுங்குமோ? ஒட்டகம் கடிக்குமோ? ஓநாய் விரட்டுமோ? என்று ரசிகர்கள் தவிக்கிற அளவுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வருகிறது ஹீரோவுக்கு. அதிலிருந்து அவன் மீண்டானா, இல்லையா? வலிக்கும் முடிவுடன் படம் முடிகிறது.

கோகுல் கிருஷ்ணாவின் பக்கத்து வீட்டுப் பையன் முகமே அவரது அவ்வளவு கஷ்டத்திற்காகவும் நம்மை பதைபதைக்க விடுகிறது. இவர்தான் இப்படி என்றால், இவரது அக்காவாக நடித்திருக்கும் அந்த பெண்ணின் முகமும் அவ்வளவு பரிச்சயமாகி விடுகிறது நமக்கு. காது கேளாத பெண்ணாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அவரும்.

ஹீரோயின் ராத்திரி நேரத்தில் ஒரு காரில் ஏறி எங்கோ போகிறார்… வருகிறார்… தப்பாச்சே? என்று தவிக்க விட்டு நிதானமாக்குகிறார் இயக்குனர். இப்படி சில சில திருப்பங்கள் மட்டும் அட….!

அப்புக்குட்டியின் முகத்திற்கு பொருந்தாத ஒரு வலுவான மீசையை வைத்து புல்லட்டில் உலாவ விடுவதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும். பட்… அப்புக்குட்டி சமாளிக்கிறார்.

படத்தில் இன்ப அதிர்ச்சியாக மன்சூரலிகானும் இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும், சிரிக்க விடுகிறார் மனுஷன்.

கேரள தமிழ்நாட்டு பார்டர் என்பதால், இருவேறு பகுதிகளுக்கான அழகை கேமிராவில் அள்ளியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசை படு சுமார்.

ஒரு இளம் விஞ்ஞானி வாழ்வில் எப்படியெல்லாம் போராடி வென்றான் என்ற கோணத்தில்தான் இந்த கதை நகரும் என்று நம்பி ஏமாந்த ரசிகர்கள், ‘கொஞ்சம் கொஞ்சும்’ நிம்மதியடைவது ஒரே ஒரு விஷயத்திற்குதான்!

அது? கோகுல் கிருஷ்ணாவின் பரிதாபமான நடிப்புக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
வல்லதேசம் – விமர்சனம்

Close