குற்றம் 23 /விமர்சனம்
‘பொறுக்கீஸ் Vs போலீஸ்’ படங்கள் கோடம்பாக்கத்தில் கொட்டிக் கிடந்தாலும், யதார்த்தத்தின் பக்கத்தில் நின்று இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகிற படங்கள் ஒன்றோ… இரண்டோதான்! ‘குற்றம் 23’ அதில் ஒன்று! புல்லட் வேகத்தை விடவும் ஸ்பீடான திரைக்கதை. அதற்குண்டான ‘தட தட’ பிரசன்ட்டேஷன் என்று சூடு பறக்க விட்டிருக்கிறார் டைரக்டர் அறிவழகன்!
COP படங்கள் என்றாலே காட்டுக் கூச்சல் இருக்கணும் என்கிற முரட்டு பிடிவாதத்தை முதல் முதலாக அடித்து நொறுக்கிய விதத்திலும் இந்த குற்றம் 23, சுற்றம் சூழ பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறது.
ஒரு பாதிரியாரின் மர்டர் கேஸை விசாரிக்கக் கிளம்பும் அசிஸ்டென்ட் கமிஷனர் அருண்விஜய், அடுத்தடுத்து தன் விசாரணை வளையத்தை இறுக்குகிறார். அப்போது செயற்கை கருத்தரிப்பின் உதவியோடு குழந்தையை சுமக்கும் கர்பிணி பெண்கள் வரிசையாக இறப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. அந்த நேரத்தில்தான் அவரது சொந்த அண்ணியும் அப்படியொரு தற்கொலைக்கு ஆளாக… முன்னிலும் வேகமாக கொலைக்கான காரணத்தை தேட ஆரம்பிக்கிறார் அருண். நிஜம் தெரிய வரும்போது திரைக்குள்ளிருக்கும் அவருக்கும், திரையை விட்டு விலகாமல் படபடப்பிலிருக்கும் ரசிகனுக்கும் ஒரு சேர ஷாக்!
கொடுமை… நாட்ல இப்படியெல்லாமாவா நடக்குது?
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும், அதுபாட்டுக்கு இயல்பாக ஒரு காதல் எட்டிப் பார்ப்பதும், முயல் குட்டி போல கதைக்குள் துள்ளி துள்ளி ஓடுவதும் கூட தனி அழகுதான்!
இந்த கேரக்டருக்காகதான் இத்தனை காலம் உடல் வளர்த்தேன் என்பது போல அவ்வளவு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அருண் விஜய். மப்டியில் இருக்கும் போது சரி. யூனிபார்மில் மிரட்டும் போதும் சரி. கம்பீரத்தில் துளி ‘ஸ்கிராட்ச்’ இல்லை. குறிப்பாக எல்லா பைட் சீன்களிலும் ஒரு மினி டைனோசர் போல பிரித்து மேய்ந்திருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு காதல் வந்தால் எப்படியிருக்கும்? மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் சிரித்து, சென்ட்டிமீட்டர் அளவோடு காதல் பண்ணி… கண்ணியம் காக்கிறார். இந்தப்படம் அருண் விஜய்யை முதல் ஐந்து ஹீரோக்கள் வரிசைக்குள் கொண்டு வரும் வாய்ப்பு பிரகாசம்… பிரகாசம்.
மகிமா நம்பியார் புதுசு இல்லைதான். ஆனால் இந்தப்படத்திற்கு பின் அவரும் சரி. அவரது அந்தஸ்தும் சரி. வேறொரு புது இடத்திற்கு ஷிப்ட் ஆகலாம். என்னவொரு அழகு! நடிப்பு!! அடிக்கடி விசாரிக்க வரும் ஏ.சி யிடம் உண்மையை மறைப்பதுடன், “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்று ‘வள் வள்’ ஆகிற காட்சிகளில் அப்படியொரு லைவ்! “போலீஸ்ட்ட உண்மையை மறைக்கலாம். ஆனால் புடிச்சவங்ககிட்ட மறைக்கக் கூடாது” என்று பல்டி அடிக்கிறபோது, அவ்ளோ பெரிய முரட்டு காக்கி சட்டையே கதம் கதம் ஆகிவிடுகிறது.
ஆவேசப்பட்டு அருண் விஜய், குற்றவாளி அரவிந்த் ஆகாஷை சுட்டுவிட, அந்த நேரத்தில் தம்பி ராமய்யா பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் உற்சாக ரீயாக்ட் ஆகிறது தியேட்டர்.
அண்ணியாக நடித்திருக்கும் அபிநயா, பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.
டாக்டராக வரும் கல்யாணி நடராஜன்தான் வில்லி என்று நினைத்தால், எங்கே படத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ என்று படு உஷாராக நழுவியிருக்கிறார் டைரக்டர் அறிவழகன். பழியை யார் யார் மீதோ சுமத்தி, தனிமனித பிரச்சனையாக இந்த படத்தின் மைய கருத்தையே மாற்றியதுதான் ஏனென்று புரியவில்லை?
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கவராவிட்டாலும் பின்னணி இசை கை விடவில்லை. இந்த விறுவிறுப்பான திரைக்கதைக்கும், படத்தின் வேகத்திற்கும் பாடல்கள் கூட அவசியமில்லைதான்!
படத்தின் ஹீரோ ஸ்கிரீன் ப்ளே என்றால், இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவு. மிக மிக ஸ்டைலிஷான பிரேம்களும், டோனும் அப்படியே கண்களை கட்டி இழுத்துக் கொள்கிறது.
‘தாய்மை என்பது பெற்றெடுப்பது மட்டுமல்ல, தத்தெடுப்பதும்தான்’ என்பது இப்படத்தின் மெசேஜ். எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடமிருந்து தத்தெடுத்த கதையை தனக்காக ஒரு முறை பெற்றெடுத்திருக்கிறார் அறிவழகன்.
வெல்டன் என்பதை தவிர வேறு வழியேயில்லை!
ஆர்.எஸ்.அந்தணன்
https://www.youtube.com/watch?v=Kn0WLTPUCdk&feature=youtu.be