எம்.ஜி.ஆர் படவிழா! பாதியிலேயே ஓடிய கமல்! தர்மசங்கடத்தில் ரஜினி!

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எமது அடுத்த வெளியீடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்று அறிவிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு, அதற்கப்புறம் ஏதேதோ காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. அன்னாரின் கனவை, அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு ஐசரி கணேஷ் நிறைவேற்றி வைக்கப் போகிறார்.

எம்.அருள்மூர்த்தி என்ற சாஃப்ட்வேர் என்ஜினியரின் முயற்சியில் கிராபிக்ஸ் எம்.ஜி.ஆர் நடிக்க, வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ இப்படத்தின் துவக்கவிழா, எம்.ஜி.ஆரின் மூச்சுக்காற்றும் ஆன்மாவும் இப்போதும் குடிகொண்டிருக்கும் சத்யா ஸ்டூடியோவில் நடைபெற்றது. இங்குதான் விழாவை துவக்கி வைக்க வந்திருந்தார்கள் இப்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினியும், வருங்கால முதல்வர் கனவிலிருக்கும் கமலும்!

இந்த விழாவில் திடீர் அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர் வர… ரஜினி கமலுக்கு முன் அவர்களை யார் சீண்டப் போகிறார்கள்? கூட்டத்தோடு கூட்டமாக நெரிசலில் உட்கார்ந்திருந்தார்கள். (அம்மா காலத்திலிருந்தே பழகிப்போனதுதானே) முதலில் மேடைக்கு அழைக்கப்பட்ட ரஜினி, கமல் இருவருக்கும் தரப்பட்ட பொறுப்பு, எம்.ஜி.ஆர், ஐசரி கணேஷ் உருவப்படங்களுக்கு மலர் தூவுவது. அதற்கப்புறம் கிளாப் கட்டையை அடித்து முதல் காட்சியை துவங்கி வைத்தார் ரஜினி. லதா யாருடனோ போனில் பேசுவது போல காட்சி. ஒரே டேக்கில் காட்சி ஓகே ஆனது. லதா முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

அதற்கப்புறம் நடந்ததுதான் அனகோண்டா சூப்பை ஒரே சிப்பில் அடிக்க சொன்ன அலங்கோலம். சுமார் 100 பேர் திமுதிமுவென மேடையில் ஏற்றப்பட்டார்கள். எல்லாருக்கும் ரஜினி, கமல் கையால் ஷீல்டு. யார் இவர்கள்? எதற்காக வந்தார்கள்? ஏன் கொடுக்கிறோம்? என்று புரியாமலே சுண்டல் வழங்கிக் கொண்டிருந்தார் ரஜினி. நடுநடுவே இந்த அரும்பணியில் கமலும் இணைந்து கொண்டார். சிலர், ‘ரஜினி கையால கொடுங்க. ரஜினி கையால கொடுங்க’ என்று நச்சரித்து பெற்றுக் கொண்டது தனிக்கதை.

பொறுமை தாங்காத கமல், சொல்லாமல் கொள்ளாமல் மேடையை விட்டு கீழே இறங்கி அப்படியே ஓடிப்போனார். ஐயோ பாவம் ரஜினி. ஒருவர் மனசும் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்திருக்கலாம். கடைசி சொட்டு ஆசாமி வரைக்கும் தனது டிரேட் மார்க் சிரிப்பு நழுவாமல் கொடுத்து முடித்தார். மொத்த கூட்டமும் ரஜினி இரண்டு வார்த்தைகளாவது எம்.ஜி.ஆர் பற்றி பேசுவார் என்று காத்திருக்க… பேச கூப்பிடுறதுக்கு முன்னால ஓடிடணும் என்கிற அவசரத்துடனேயே எஸ்கேப் ஆனார்.

மேடையில் ரஜினி, கமல் இருவரது பிரசன்டேஷன் இருந்தும், முழுக்க நரைத்த பெருசுகள் திரையில் எம்.ஜி.ஆரை காண்பிக்கும் போது மட்டும், ‘தலைவா’ என்று கூக்குரலிட்டு விசிலடித்தது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளசுகளை சுண்டி இழுத்தது.

ஜெயமாலினி உட்பட, எம்.ஜி.ஆர் படங்களோடு சம்பந்தப்பட்ட கதாநாயகிகள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். அவரவர் முகத்தில் ஆயிரமாயிரம் எண்ண ரேகைகள்! அந்த ரேகையை ஆராய்கிற ஜோதிடன் மட்டும் பிறந்திருந்தால், எவ்வளவு எவ்வளவு சுவாரஸ்யங்கள் கிட்டியிருக்கும்?

எனி வே… ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில்,‘இவர்தான் எம்.ஜி.ஆர்’ என்று யாரையாவது காட்டி இம்சிக்காதீர்கள் மிஸ்டர் அருள்மூர்த்தி.

கோச்சடையான் தந்த காயத்திற்கே இன்னும் மருந்து தேடி அலைந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டைரக்டரின் சுதந்திரத்தில் தலையிட்டாரா விக்ரம்?

‘ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு!...

Close