சுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்?
பொழுதுபோக்கோ, பிரச்சாரமோ? நினைத்ததை எடுத்தோம்… நிம்மதியாக ரிலீஸ் பண்ணினோம் என்கிற வழக்கமெல்லாம் இப்போது இல்லவே இல்லை. படத்துல ஹீரோ நீல சட்டை ஏன் போட்டார்? அது எங்க கட்சி நிறமாச்சே… என்பதில் ஆரம்பித்து ஓரமாக போகிற ஓணான் பூரானுக்கெல்லாம் பஞ்சாயத்தை கூட்டிவிடுகிறார்கள். நிஜம் அப்படியிருக்க… ஒரு கொலையின் நிஜம் பற்றி அலசி ஆராய்ந்து படம் எடுக்க வந்த எஸ்.டி.ரமேஷ் செல்வனுக்கு தொண்டைக்குழியில் தொரப்பணம் போட்டுவிட்டது விதி.
நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட மென் பொறியாளர் சுவாதியின் கொலை சம்பவத்தையும், அதை தொடர்ந்து நடந்த பரபரப்பான விஷயங்களையும் படமாக்க நினைத்தார் ரமேஷ் செல்வன். ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே படம் எடுத்த அவரை, போலீசில் புகார் கொடுத்து ஓட விட்டுவிட்டார்கள். எங்கெங்கோ ஒளிந்து டெல்லி வரைக்கும் போய் படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றி சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கி வந்துவிட்டார் அவர்.
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த விஷால், இயக்குனர் எஸ்.ஏ.சி., சினேகன் உள்ளிட்ட பலரும், ஏன் தலைப்பை மாத்துனீங்க? நம்ம கருத்தை சொல்ல உரிமையில்லையா? என்றெல்லாம் ரமேஷ் செல்வனை உசுப்பினார்கள். (அவர் பட்ட அடி அவருக்குதானே தெரியும்?)
“காவல் துறை அதிகாரிகளின் வழி காட்டுதலுடன் மீண்டும் பதினாறு நாட்கள் ரீ ஷுட்டிங் செய்து பல காட்சிகளை மாற்றி இந்த படத்தை முடித்திருக்கிறேன். இந்த படத்தை வெளிக்கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல” என்று தன்னிலை விளக்கம் அளித்தார் ரமேஷ் செல்வன்.
இந்த உண்மையை புரியாம ஆளாளுக்கு பேசுன பேச்சு இருக்கே… யப்பா!
பின்குறிப்பு- இப்போது படத்திற்கு நுங்கம்பாக்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.