அங்க வச்சு இங்க வச்சு ரஜினி மேலேயே கைய வச்சா விட்ருவமா? லாரன்சை எகிறும் நெட்டிசன்கள்!

அதகளம் ஆகிக் கிடக்கிறது சோஷியல் மீடியா! “கிழவி மேல கைய வச்சாலே கிரைண்டரை தூக்கி அடிப்பாய்ங்க. ரஜினி மேல கைய வச்சா விட்ருவாய்ங்களா? விட்டு பிராண்டிட்டாய்ங்க…” என்று இது பற்றி விழிகள் விரிய வர்ணிக்கிறது கோடம்பாக்கம்.

அப்படி வசமாக சிக்கியவர் லாரன்ஸ்சேதான்! நடை, உடை, பாவனை, பேச்சு, மூச்சு எல்லாமே ரஜினிதான் என்று அவரை பின்பற்றி வருகிறவர் லாரன்ஸ். காலம், இவரை கொண்டுபோய் உச்சாணிக் கொம்பில் வைத்தது. அதற்கு காரணம் லாரன்சின் ஓயாத உழைப்பு. முனி, காஞ்சனா என்று உயர உயர பறந்த லாரன்சின் இன்றைய சந்தை மதிப்பு 100 கோடிக்கும் மேல். முதல் வரிசை ஹீரோக்களில் ஒருவராகிவிட்டதாலோ என்னவோ, தண்ணீர் ஊற்றி வளர்த்துவிட்ட பூவாளி மீதே கிளையால் இடிக்கும் விபரீதம்.

நதிநீர் இணைப்புக்காக ரஜினி 1 கோடி கொடுப்பதாக அறிவித்தால், இவர் நிஜமாகவே ஒரு கோடியை எடுத்து நீட்டுகிறார். 100 கோடி வியாபாரத்தை தொட்ட ஒரே ஹீரோ ரஜினி என்றால், நானும் நானும்… என்று அந்த உயரத்தை தொடுகிறார். அது வரைக்கும் கூட மன்னிச்சு விட்ட மக்கள் படை, ரஜினிக்கே உரிய மரியாதையான சூப்பர் ஸ்டார் பட்டத்தில் கை வைத்தால் சும்மாயிருக்குமா?

நேற்று திரைக்கு வந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் முதல் ஷோ துவங்கும்போதே காட்டுத் தீயாய் விஷயத்தை பரப்பி விட்டார்கள். டைட்டிலில் லாரன்ஸ்சுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்று. அவ்வளவுதான்… வெளியே பட்டாசு வெடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த லாரன்ஸ் மீது பட்டாசை வீசி கொளுத்திவிட்டது சோஷியல் மீடியா. வச்சு செஞ்சுட்டாங்க என்று கதறுகிற அளவுக்கு போனது நிலைமை.

பதறிப் போன லாரன்ஸ் உடனடியாக விளக்கம் கொடுத்தார். எனக்கு தெரியாமல் டைரக்டர் சாய் ரமணி அப்படியொரு பட்டத்தை போட்டுட்டார். உலகத்தில் ஒரே சூப்பர் ஸ்டார்தான். அது என் தலைவர் ரஜினிதான் என்றார்.

ஒரு வெற்றிப்பட ஹீரோ, திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் தாண்டிய நிலையில் அப்படத்தை பார்க்காமலிருந்திருப்பாரா? பார்த்தவர் கண்களுக்கு அந்த பட்டம் மட்டும் எப்படி விடுபட்டது. இப்படி நிறைய கேள்விகள்.

துண்டுன்னு  நினைச்சு தோள்ல போட்றதெல்லாம், சமயத்துல வெடிகுண்டா மாறுனா ஆச்சர்யம் இல்ல. லாரன்ஸ் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. இனியாவது உஷாரா இருங்க மாஸ்டர்!

https://youtu.be/rZriMcAwmec

1 Comment
  1. எஸ்.பி.சேகர் says

    அன்றும் இன்றும் என்றும் உலக சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது ரஜினி ரஜினி ரஜினி தான். வேறு எவனும் கிடையாது

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“Why I Put Makkal Superstar For Lawrence”-Director Explanation.

https://www.youtube.com/watch?v=H3N1XFYOwXM

Close