கனடா வரும் இசை ஞானிக்கு ஒரு திறந்த மடல்.

முதலில் கனடா தேசத்திற்கு மீண்டும் வருகை தரும் உங்களை மனதார வருக வருக என வரவேற்கிறோம். தமிழரின் பெருமை மிகு அடையாளங்களில் நீங்களும் ஒருவர்.

சென்ற முறை உங்கள் இசை நிகழ்ச்சிக்கு பெரும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஆனால் நிகழ்ச்சி முடிவில் மிஞ்சியது ஏமாற்றமும் கோபமும் மட்டுமே.

கொட்டும் பனியில், இரண்டு வேலை மூன்று வேலை செய்து சேமித்த காசில் டிக்கெட் வாங்கி வந்து தங்களின் ஆன்ம இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் அன்று கண்டது என்ன ?

1. மாலை 5 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி ரெண்டரை மணி நேர தாமதத்தின் பின் ஏழரை மணிக்கு ஒருவழியாக ஆரம்பித்தது. அதைப்பற்றி யாருமே அலட்டிக்கொள்ளவில்லை. ஏதோ இசை நிகழ்ச்சியை பார்க்க நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. முடிஞ்சா இருந்து கேட்டிட்டுப்போங்க இல்லேன்னா கிளம்புங்க என்ற பாணியில் இருந்ததது.

2. இந்த நீயா நானா கோபியின் அறுவை தாங்க முடியவில்லை . ரெண்டு மணி நேரமா ரசிகர்களை அவர் சோதிச்சிட்டார். கோபியின் நிகழ்ச்சியா அல்லது உங்கள் நிகழ்ச்சியா பார்க்கவந்தோம் ராஜா சார் ?

3. பார்த்திபன், விவேக், பிரசன்னா போன்றோர் தொகுத்து வழங்குகிறோம் என்ற போர்வையில் உளறி உங்களை திகட்ட திகட்ட போற்றி தள்ளிவிட்டார்கள். அதிலும் பார்த்திபனின் உளறகள் தாங்க முடியவில்லை. கனடா அமைச்சர் உங்களுக்கு அன்பு பரிசு வழங்கும் போது ” அன்று வெள்ளையனே வெளியேறு என்று சொன்னோம், இன்று வெள்ளையனே உங்களுக்கு பரிசு கொடுக்கிறான் ” என்று சொன்னது அபத்தத்தின் உச்சம். அதை நீங்களும் எப்படித்தான் ரசித்தீர்களோ. உங்கள் உயர்ந்த இசைக்கு நடுவில் இந்த சினிமா நடிகர்கள் தேவையா ? அறிமுகமே தேவையில்லாத எங்கள் உணர்வுகளோடு கலந்துவிட்ட உன்னத இசைக்கு தொகுப்பாளர்கள் எதற்கு ? தஞ்சை கோயிலுக்கு தங்க முலாம் எதற்கு ?

4. இசை நிகழ்ச்சி என்பதை விட ஒரு பாராட்டு விழாவிற்கு வந்த உணர்வு. இந்த பாராட்டுக்கள் சொன்ன நேரத்தில் இன்னுமொரு பத்து பாடல்களை இசைத்திருக்கலாமே.

5. மிக சிறந்த கலைஞர்கள் சித்ரா மற்றும் ஹரிஹரன். உங்கள் இசையில் சித்ரா அவர்கள் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியிருக்கிறார். ஆனால் அன்று அவர் பாடிய ஒரு பாடல் கூட மேடையிலே பாடவில்லை . மாறாக ஜானகி அவர்களின் பாடல்களை சித்ரா பாடினார். ஏன் ? அதே போலத்தான் ஹரிஹரனும். “நீ பார்த்த பார்வை” தவிர மற்ற பாடல்கள் எல்லாம் ஜெயச்சந்திரன் பாடல்கள்.

6. ரசிகன் இல்லாமல் கலைஞன் ஏது ? மறந்துவிட்டிர்களா ராஜா ? இசையில், பாடலில், மெய் மறந்து சிலர் கை தட்டுவர், சிலர் ஆனந்த கூச்சலிடுவர், சிலர் விசிலடிப்பர். இது தெரியாதவரா நீங்கள் ? அன்று ஏன் அவ்வாறு சொன்னீர்கள் ? அன்பாக சொல்லியிருந்தால் அடிபணிந்திருப்பான் ரசிகன் ஆனால் ஆணவமாக, விசில் அடிப்பதை நிறுத்தாவிட்டால் கச்சேரியை நிறுத்திவிடுவேன் என்று சொன்னீர்களே அதில்தான் சாதாரண ரசிகன் காயப்பட்டான், அவமானத்தில் குறுகிவிட்டான். ஏன் இவ்வளவு காட்டம். நாயகன் பாடல் காதில் ஒலிக்கின்றது ” துடிக்கிற ஆட்டத்தை திரையில பார்த்திருக்கேன், விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்”

அய்யா ! உங்களின் ரசிகன் என்ற உரிமையில் எழுதுகிறேன். இந்த முறையும் நிகழ்ச்சிக்கு வருகிறோம். நாங்கள் எழுந்து நின்று கைதட்டுவோம், ஆர்ப்பரிப்போம் பல சமயங்களில் விசிலும் அடிப்போம்.

உங்களுக்கு பிடிக்கவில்லையா ?

இப்போதே சொல்லிவிடுங்கள். வேறு வேலை பார்க்க போய்விடுகிறோம்.

நன்றி
பணிவுடன்
உங்கள் ரசிகன்
வரகுணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விளம்பரத் தூதர் ஆனார் ஹன்சிகா மோத்வானி

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில்...

Close