ப.பாண்டி /விமர்சனம்

“பெற்றோர்களுக்காகவும், அதற்கப்புறம் பிள்ளைகளுக்காகவும் வாழும் மனிதா… நீ எப்போ உனக்காக வாழப்போற?” இந்த கேள்வியை காதலால் ஒத்தடம் கொடுத்து, தத்துவத்தால் தடவிக் கொடுத்து, யதார்த்தத்தால் இதமாய் ஸ்பரிசித்து, தமிழ்சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ். இனி ‘டைரக்டர் தனுஷ்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கலாம்!

‘ஏன் மழையில நனையுற? குடைக்குள் வா…’ என்று கூப்பிடுகிற காதலியும், ‘ஏன் குடைக்குள் இருக்கே? மழைக்கு வா…’ என்று கூப்பிடுகிற காதலனும் நாற்பது வருஷம் கழித்து நேருக்கு நேர் சந்தித்தால் எப்படியிருக்கும்? தனுஷின் இந்த கற்பனைக்கு ரத்தமும் சதையுமாய் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ராஜ்கிரணும், ரேவதியும்! இனி சால்ட் பெப்பர் மண்டைகளை காணுகிற யாரும், கண்களை ஊடுருவி அதற்குள் காதல் மிதக்கிறதா என்று தேடினால் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவ்வளவும் ப.பாண்டி செய்த மாயம்!

பழைய சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் பவர் பாண்டி, ஆஃப்டர் ஓய்வுக்குப் பின் மகன் பிரசன்னா வீட்டில் இருக்கிறார். அநீதி கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று முஷ்டியை தூக்குகிற இந்த ஸ்டன்ட் மாஸ்டர், அடிக்கடி ஊர் வம்பை வாங்கிக் கொண்டு வர… மகன் பிரசன்னாவுக்கோ மூக்கு மேல் கோபம்! மகனுக்காக அடங்கி அடங்கிப் போகிற பவர் பாண்டி ராஜ்கிரண், ஒரு நாள் பீர் பாண்டியாக மாறி செம போதையுடன், “அப்பன்னா என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க?” என்று மகனை விட்டு விளாச…. வீடே அந்தல சிந்தலயாகிறது. ‘ஐயோ போதையில இப்படி பண்ணிட்டமே’ என்று குற்றவுணர்வுக்கு ஆளாகும் ராஜ்கிரண், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். அதுவரை மனசு கொள்ளாத பாசத்துடன் முறைப்பு காட்டிய பிரசன்னா அப்பாவை தேடி அலைகிறார். அப்பாவோ தன் முதல் காதலியை பேஸ்புக் உதவியுடன் கண்டுபிடித்து அவளைக் காண ஐதராபாத் செல்ல… அங்கே நடக்கும் அமளி துமளிகள்தான் க்ளைமாக்ஸ்!

யானை தலையில் எலுமிச்சம் பழத்தை வைத்ததை போல, அவ்வளவு பெரிய கேரக்டரை அசால்டாக சுமக்கிறார் ராஜ்கிரண். ரிட்டையர்டு உள்ளங்களின் ஏக்கத்தை இவ்வளவு அழகாக இறக்கி வைக்கிற கேரக்டருக்கு இவரைவிட்டால் ஆளேது? ஷுட்டிங் ஸ்பாட்டில் தன் காலில் விழும் இளம் ஸ்டன்ட் நடிகர்களின் மரியாதையை ஏற்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே வருகிற அழகென்ன? பக்கத்து வீட்டு பையனுடன் அவன் வயசுக்கு இணையாக வாயாடும் ரவுசென்ன? மனசெல்லாம் கொள்ளாத காதலுடன், ‘இன்னமும் நான் உன் மனசுல இருக்கேனா?’ என்று ரேவதிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காத்திருக்கும் ஏக்கமென்ன? அறுபது வயசு காதலுக்கு அலுங்காமல் குலுங்காமல் நியாயம் சேர்க்கும் மதிப்பென்ன? சிகரமாய் நிற்கிறீர்கள் ராஜ்கிரண் சார்… ரேவதியுடன் நீங்கள் காட்டும் சின்ன சின்ன செல்லக் கோபங்கள் அழகோ அழகு!

சண்டைக்காட்சிகளில் மட்டும், செயற்கைத் தனம் எட்டிப் பார்க்கிறது. அதை மட்டும் சரி செய்திருந்தால், இந்த பவர் பாண்டியார் இன்னும் பிரைட்டாக இருந்திருப்பார்.

சின்ன வயசு ராஜ்கிரணாக தனுஷ். எவ்வளவுதான் யதார்த்த படமாக இருந்தாலும், ஹீரோவுக்கான பில்டப் காட்சி இன்றியமையாதது என்ற பார்முலாவை மீற விரும்பவில்லை டைரக்டர் தனுஷ். இவருக்கும் மடோனாவுக்குமான காதல் காட்சிகளில் தனுஷ், மடோனா நடிப்பை மேலும் உயர்த்திக் கொடுப்பது அந்த ஊரின் அதிகாலை வெளிச்சமும், அதை அப்படியே திரைக்குள் வார்த்த ஒளிப்பதிவும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு தனி அப்ளாஸ்!

மடோனாவின் முகத்தை அப்படியே கால சக்கரத்தில் ஏற்றி நாற்பது வருஷங்களுக்கு பின் தள்ளிக் கொண்டு வந்தால், அவ்வளவு சரியாக பொருந்துவதால்தான் ரேவதியை தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ? ஆனால் ரேவதி…! இந்தியிலிருந்து வித்யாபாலனைதான் முதலில் அழைத்தார்களாம். ஆயிரம் வித்யா பாலன்கள் வந்தாலும், ரேவதி போல அமைந்திருக்குமா, டவுட்டுதான்! நாற்பது வருஷம் கழித்து ராஜ்கிரணை சந்திக்கும் ரேவதி, அந்த நிமிஷங்களில் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் நடித்திருப்பதே நடிப்புக்கான ஷீல்டு.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், சும்மா ஊதி தள்ளிவிட்டு போகிறார் டி.டி. தாத்தா மீது பிரியம் காட்டுகிற அந்த குழந்தைகளும் கொள்ளை அழகு. சூப்பர்ப் நடிப்பு.

யார்ப்பா… அந்த பக்கத்து வீட்டு பையன்? டயலாக் டெலிவரியும் நடிப்பும் அவ்வளவு சிறப்பு. “ சும்மா வேலைக்கு போயிட்டு போயிட்டு வர்றதெல்லாம் ஒரு வேலையா? வெட்டியா இருந்துப்பாரு தெரியும்…” என்று அவன் பேசும் டயலாக்குக்கு தியேட்டர் துவம்சம் ஆகிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களாலும் கவனிக்க வைக்கிறார் தனுஷ்.

படத்தின் எல்லா பாடல்களும் தனுஷ் படத்திற்கேயுரிய அழகு மற்றும் லட்சணங்களுடன் அமைந்திருப்பதே பேரதிர்ஷ்டம். ஷான் ரோல்டனின் உழைப்பும் அக்கறையும் இனி பல வருடங்களுக்கு தனுஷ் காம்பவுண்டுக்குள் மற்றொரு இசையமைப்பாளருக்கு அனுமதி தரப்போவதில்லை.

ஒண்டியாக உட்கார வைத்து அறுத்தால் உபதேசம்! கூட்டமாக உட்கார வைத்து பேசினால் போதனை! இதையே இரண்டரை நேரம் கண்கொட்டாமல் பார்க்க வைத்து, மனம் கொள்ளாமல் ரசிக்க வைத்தால் அதுதான் நல்ல சினிமா!

நேரம் இல்ல… நேரம் இல்லன்னு சொல்லாதீங்கடா. அப்பா அம்மா பேசுனா ரெண்டு நிமிஷம் காது கொடுத்துக் கேளுங்க. இதுதான் அந்த உபதேசம்!

பாண்டியோட பவர், இனி வீடு தோறும் வெளிச்சம்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

https://www.youtube.com/watch?v=HCxFWrOECU0&t=5s

4 Comments
  1. தமிழன் பிரசன்னா says

    பவர் பாண்டி படம் சூப்பர். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.
    இயக்குனராக தனுஷ் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்.
    வாழ்த்துக்கள்.

  2. Muthu says

    பவர் பாண்டி படம் போரடிக்காமல் செல்கிறது. மறுமுறை பார்க்கத்தூண்டும் வகையில் கதை அமைப்பு உள்ளது.
    சூப்பர். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு நல்ல படம் அமைந்து இருக்கிறது.

  3. ஜார்ஜ் says

    பவர் பாண்டி சூப்பர் படம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

  4. தமிழ்நேசன் says

    பவர் பாண்டி சூப்பர் சூப்பர் சூப்பர். இயக்குவதில் தனுஷ் கலக்கி விட்டார்.
    வாழ்த்துக்கள்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
AAA Shooting In Bangkok | But Simbu Atrocity With Heroines.

https://www.youtube.com/watch?v=6Qq9JmhV9SU

Close