சொன்ன சொல்லை காப்பாற்றிய இயக்குனர்! கோடம்பாக்கத்தில் அதிசயம்!
சொன்ன சொல்லை காப்பாற்றுவதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் கோடம்பாக்கத்தில் இல்லவே இல்லை! இப்படிப்பட்ட கோடம்பாக்கத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஒரு அறிமுக ஹீரோவின் பேச்சு.
வள்ளிமுத்து இயக்கும் பார்த்திபன் காதல் பட ஹீரோவான யோகியிடம்தான் இப்படியொரு பரவசம்!
சுமார் ஐந்து வருஷத்துக்கு முன், சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புக்காக அலைஞ்சேன். பெங்களூர்லேந்து இங்கு வந்து முயற்சித்தாலும், என்னை மதிச்சு பதில் சொன்னவங்க கொஞ்சம் பேர் இருந்தாங்க. அதில் முக்கியமானவர் வள்ளிமுத்து. நான் எப்ப படம் எடுத்தாலும் அதில நீதான்யா ஹீரோன்னு சொல்வார். கடுமையா முயற்சி செஞ்ச பிறகும் எனக்கு சினிமா வாய்ப்பு அமையல. பெங்களூருக்கு திரும்பி போயிட்டேன். திடீர்னு ஒரு நாள் வள்ளிமுத்து போன் பண்ணி வரச்சொன்னார்.
ஒரு கதையும் சொன்னார். நமக்கு ஏதோ ஒரு ரோல் கொடுப்பார்னு நினைச்சு, இதில் எந்த ரோல் சார் நான் பண்றேன்னு கேட்டேன். அந்த ஹீரோவே நீதான்யா என்றார். என்னால என் காதுகளையே நம்ப முடியல. அவருக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன் தெரியல என்றார் யோகி.
இதே பெங்களுரூவிலிருந்துதான் ஹீரோயினும் தேர்வாகியிருக்கிறார். பெயர் வர்ஷிதா. ஓவியக்கல்லூரி மாணவனின் வாழ்வில் கிராஸ் ஆகும் ஒரு பெண் ரோல் இவருக்கு. இந்தக்கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார் வள்ளியப்பன்.
அழியா ஓவியம் போல அமையட்டும் இந்த புதுப்படம்!