ரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ! கம்பெனி ஆகிறதா கட்சி?


முப்பதாண்டுகளுக்கு மேலாக ‘தலைவா… வா’ என்று நாக்கு வறள கதறிக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு தரப்படாத அந்தஸ்து, ஒரு திடீர் மனிதருக்கு வழங்கப்பட்டதன் பின்னணி என்ன? மண்டப வட்டாரத்தில் மட்டுமல்ல… மாநிலமெங்கும் எழும் கிசுகிசுப்புதான் இந்த செய்திக் கட்டுரையின் சென்ட்டர் பாயின்ட்!

சில மாதங்களுக்கு முன் ரஜினியை கட்டிப்பிடித்துக் கொண்டு ஒரு நபர் நிற்கிற புகைப்படம் ஊடங்களில் வெளியானது. ‘ரஜினியின் புதுக்கட்சியில் இணைவதற்காக தனது பதவியை கைவிட்ட சி.இ.ஓ’ என்ற தலைப்பில் ஊடகங்களில் வந்த செய்தியும் அந்த புகைப்படமும் அலட்சியமாக கடந்து போகக் கூடிய ரகம் அல்ல. அவர் வேறு யாருமல்ல. ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் பணியாற்றிய ராஜு மகாலிங்கம். ஏதோ ரஜினி கட்சி ஆரம்பித்து விட்டதாலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர் போல பில்டப் கொடுக்கப்பட்டதே… அது ஏன்?

ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனால், வசனங்களை மனப்பாடம் செய்வது. அதை எப்படி மெருகேற்றுவது என யோசிப்பது. இவ்விரண்டையும் தாண்டி சுற்று புற சூழல்களை ஆராய்வது என்று தெள்ளந் தெளிவாக இருப்பார் ரஜினி. படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகவும் அக்கறையாகவும் பணியாற்றும் எந்த முகங்களையும் சட்டென உள்வாங்கிக் கொள்வது அவரது ஸ்பெஷல் தகுதிகளில் ஒன்று. சமயம் கிடைக்கும் போது அவர்களை பாராட்டவும் தயங்க மாட்டார்.

அப்படிதான் ‘எந்திரன்’ முதல் பாகத்தில் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவராக பணியாற்றிய அதிதி என்ற பெண்ணை வியந்தார் ரஜினி. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடந்தது. அந்த விழாவில் ரஜினி சிலாகித்தது அதிதியைதான். ‘இந்த பொண்ணு எவ்வளவு சுறுசுறுப்பு! டெடிக்கேஷன்!’ என்று அடுக்கிக் கொண்டே போனார். அவரது பாராட்டு அந்த பெண்ணுக்கே வினையாக வந்து முடிந்தது. ரஜினி பாராட்டிய சில தினங்களுக்குள்ளேயே பேக்கப் செய்யப்பட்டார் அதிதி.

‘எந்திரன்’ சமயத்தில் அதிதியை வியந்தது போலவே அன்றாடம் ரஜினி வியந்தது 2.0 ல் பணியாற்றிய ராஜு மகாலிங்கத்தை. தமிழகத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், லைக்கா நிறுவனத்தின் நம்பிக்கையான இடத்தில் இருந்தவர் ராஜு. இங்கு படமெடுத்து வரும் எல்லா நிறுவனங்களை விடவும், பல மடங்கு பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கும் நிறுவனம் லைக்கா என்பதால், ராஜு மகாலிங்கத்தை ஒரு உற்சவரை போலவே பார்க்க ஆரம்பித்தது திரையுலகம்.

அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். ஜி.வி.பிரகாஷ் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர். இவரே ஒரு முறை ராஜு மகாலிங்கத்தை சந்திக்க முன் அனுமதி கேட்க, ‘இப்ப நேரம் இல்ல. என்ன விஷயம்னு கேளுங்க’ என்று பதில் வந்தது. வெறுத்துப்போன ஜி.வி. அதே நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு தயாரிப்பு நிர்வாகிகள் மூலம் கெஞ்சி கூத்தாடி பல வாரங்கள் கழித்துதான் ராஜுவை சந்தித்தார். அப்போது கூட, ‘ஐந்து நிமிஷத்துக்குள்ள பேசிட்டு போயிடணும்’ என்ற நிபந்தனையின் பேரில்தான் நேரம் கொடுத்தார் ராஜு மகாலிங்கம். (அதற்கப்புறம் லைக்கா நிறுவனம் தயாரிக்க, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தில் நடித்தார் ஜி.வி. அது தனிக்கதை)

ஜி.வி.பிரகாஷுக்கே இந்த நிலைமை என்றால், தனது கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை ராஜு மகாலிங்கத்துக்கு வழங்கியிருக்கும் ரஜினியின் முடிவால் ரஜினி கட்சியின் புதிய காவலர்கள் எப்படியெல்லாம் அவமானப்படப் போகிறார்களோ?

ரஜினியின் நெடுநாளைய நண்பர்களான விட்டல், மற்றும் சுதாகரின் மகன்கள்தான் இப்போது ரஜினிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். ராஜு மகாலிங்கத்தின் வருகை இவர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கப் போகிறதோ?

சரி… ஏன் ராஜு மகாலிங்கத்தை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் ரஜினி? மற்றவர்களுக்கு சொல்வது போல ரஜினி கட்சியில் இணைவதற்காகதான் தனது பதவியை ராஜினாமா செய்தாரா ராஜு மகாலிங்கம்? அப்படியெல்லாம் இல்லையாம். லைக்காவிலிருந்து ராஜு விலகுவதாக முடிவெடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. 2.0 ரிலீஸ் வரைக்கும் இருந்து பணிகளை முடித்துக் கொடுப்பதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை முன் கூட்டியே அனுப்பியும் விட்டாராம் அவர். உண்மை அப்படியிருக்க ஏதோ ஒரு நாளில் எடுத்த முடிவு போல இதை பில்டப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே.

பணத்தை மிக சரியாக கையாள்வதில் கை தேர்ந்தவரான ராஜு மகாலிங்கம் இப்போது தன் அருகில் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் உறுதியான முடிவு. அதுமட்டுமல்ல… அந்த ஒருவரும் கறை படியாத கரமாக இருக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய மனிதராக இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம்.

ஸோ…. ‘தளபதி’க்கு ஒரு தளபதி கிடைச்சாச்சு! கட்சியையும் கம்பெனியா மாத்தியாச்சு. ரஜினியின் காவலர்களுக்குதான் ஐயோ பாவம்… ஒரு டிரில் மாஸ்டர் கிடைத்திருக்கிறார்!

இனி நாள்தோறும் டரியல்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
தமிழ் ராக்கர்சிடமிருந்து பணம்? விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்?

https://www.youtube.com/watch?v=xeKTINoww44&t=2s

Close