அட இந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்! சிறுத்தையும் மருத்துவரும்!
தியேட்டருக்கு பொட்டி வந்த காலத்தில், ஐயா சொன்னார்னா அதோ கதிதான்! ஒரு முறை ரஜினி இவர்களிடம் சிக்கிக் கொண்டு பட்டபாடு அந்த பரமேஸ்வரனே கூட கண்ணீர் வடித்த கதை. அப்புறம் விஜயகாந்த் சிக்கினார். அவரது படப்பெட்டியையும் அலேக் செய்தது மருத்துவரின் மாணாக்கர்கள் வீரம். இப்போதெல்லாம் மருத்துவரும் சரி, அவரது தொண்டர்களும் சரி. ஆபாச படங்களை கூட கண்டு கொள்வதில்லை. ஆனால் நல்ல படங்கள் வரும்போது மட்டும், நல்லாயிருங்க தம்பிகளா என்று வாழ்த்திவிட்டு போகிறார். அப்பா திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், அதற்கப்புறம் நேரில் வந்து பார்த்து மகிழ்ந்த படம் தர்மதுரை.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை படத்தை மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு பெருமை கொண்டது டீம். மருத்துவர் அன்புமணியும் அவரது குடும்பமும் கூட வந்திருந்தார்கள். இதுபோன்ற நல்ல படங்கள் அடிக்கடி வர வேண்டும் என்று வாழ்த்திவிட்டு போனார் மருத்துவர்.
அரசியலில் ராமதாசுக்கு நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், தர்மதுரை பார்த்துவிட்டு தன் பாராட்டுதல்களை தெரிவித்திருக்கிறார். ஒரே நேரத்தில் சிறுத்தையையும் மருத்துவரையும் மனம் குளிர பேச வைத்த தர்மதுரைக்குதான் பாராட்டுகளை சொல்ல வேண்டும்.