பத்து கோடி கடன்! மீண்டும் மீண்டும் கை கொடுக்கும் பிரபுதேவா!
இந்திக்கு போன பிரபுதேவா என்கிற ராக்கெட், போன வேகத்தில் ‘யு டேர்ன்’ அடித்து சென்னையில் லேண்ட் ஆனதில் என்ன பின்னணி இருக்கிறதோ தெரியாது. ஆனால் இன்னும் இன்னும் என்று நிறைய தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டார் பிரபுதேவா. அதில் எத்தனை படங்கள் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இருக்குமோ, அதுவும் எண்ணிக்கையில் அடங்குவதாக இல்லை. ஏனிந்த கிரீஸ் டப்பா ஒரே வண்டிக்கு ஒத்தடம் கொடுக்கிறது? நாலாபுறத்திலும் விசாரித்தால், நடுங்க நடுங்க ஒரு பதில் சொல்கிறார்கள். அதில்தான் எத்தனையெத்தனை மனிதாபிமானம்?
முதல் பிரதி அடிப்படையில் படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்க்கு கிட்டதட்ட பத்து கோடி நஷ்டமாம். அதையெல்லாம் அடைக்க வேண்டும் என்றால், இதே சினிமாவில் புதையல் எடுத்து, இதே சினிமாவில் படையல் போட்டால்தான் உண்டு. விஜய்யின் சோகக்கதையை கேட்ட பிரபுதேவா, தேவி படத்தின் செகன்ட் பார்ட் எடுக்க சொன்னதோடு, கை நிறைய கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார்.
இது மட்டுமல்ல… இன்னும் சில படங்களுக்கும் கால்ஷீட் தருகிறேன். கதையிருந்தால் வா நண்பா என்றும் சொல்லியிருக்கிறாராம்.
மாஸ்டர் கையிலிருக்கிற வரைக்கும் மார்க்கெட்டுக்கு ரணம் இல்லை என்று ஓட ஆரம்பித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.