அல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய தயாரிப்பாளர்!

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் மாதிரியான தெலுங்கு ஸ்டார்கள் தமிழ்நாட்டை குறிவைக்கும் காலமிது. மாநிலம் தாண்டிய இந்த பக்திக்கு, பிசினஸ் என்று சிறிய பெயர் வைத்து அழைத்தாலும் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள், ‘தமிழ்நாட்ல எப்படி ரெஸ்பான்ஸ்?’ என்று விசாரிப்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். இது பிசினஸ் மட்டுமல்ல என்ற விபரத்தை.

இந்த சம்மருக்கு அல்லு அர்ஜுன் என்ட்ரி கொடுக்கிறார் தமிழில். பொதுவாக எந்தப்படத்தை பார்த்தாலும், படத்தை கொடுங்க. தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுவோம். வர்றதுல பங்கு என்றுதான் இதுவரை படங்களை வெளியிட்டிருக்கிறார் சினிமா பிலிம் பேக்டரி சக்திவேல். இந்த முறை அல்லு அர்ஜுன் நடித்த என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா என்ற படத்தை பணம் கொடுத்து வாங்கி வெளியிடப் போகிறார். இந்த ஒரு நம்பிக்கையே படத்தை ஹிட் லிஸ்ட்டில் சேர்க்கும் என்று நம்பலாம்.

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு ட்ரெய்லரை சுட சுட வெளியிட்டார்கள். உடம்பா, இரும்பா என்று சந்தேகப்படுகிற அளவுக்கு கட்டுமஸ்தாக இருக்கும் அல்லு, எதிரிகளின் சில்லுகளை கிழிப்பது போல சில பைட்டுகளும் இருந்தன அந்த ட்ரெய்லரில்.

இராணுவ வீரன் சம்பந்தப்பட்ட இந்தப் படத்திற்கு தமிழில் வசனங்களை எழுதியவர் விஜய் பாலாஜி. சுரேஷ்கிருஷ்ணாவின் ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய இவரே, இப்படத்தின் தமிழாக்கப் பணியையும் கவனித்துக் கொண்டார் என்பது கூடுதல் தகவல். ‘இந்தப்படத்திற்கு வசனங்கள் எழுதுகிற நேரத்தில் என் நரம்புகள் புடைத்துக் கொண்டன’ என்றார் அவர். ‘பாகுபலி படத்திற்கு பின் ஒரே நாளில் நான்கு மொழிகளில் வெளியாகிற ஒரு படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன் என்பதே எனக்கு கிடைத்த பாக்கியம்’ என்றார் விஜய் பாலாஜி.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா. அவர் பேசியதுதான் இன்டஸ்ட்ரிக்கு தரப்பட்ட ஷாக். தெலுங்குல 100 கோடி பிசினஸ் ஆகுற ஹீரோ, தனக்கான சம்பளத்தை 15 கோடிக்கு மேல வாங்குனதில்ல. அதுவும் ஒரு கோடி மட்டும்தான் அட்வான்ஸ் வாங்குறார். மீதி பணத்தை பிசினஸ்சுக்கு பின்புதான் வாங்குறார். இங்க அப்படியில்ல. 30 கோடி சம்பளம் வாங்குற ஹீரோ, 10 கோடியை அட்வான்சா வாங்கிட்டா, எப்படி படம் எடுக்கறது என்றார் காட்டமாக.

இனிமே நானும் இங்க இருக்கிற ஆபிசை காலி பண்ணிட்டு, ஆந்திராவுக்கே போயிலாம்னு இருக்கேன் என்று ஞானவேல்ராஜா சொன்னதை போகிற போக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்?

அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கிற படத்தை ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறார். ஒருவேளை அது லாபம் தருகிற பட்சத்தில், ஒரு தயாரிப்பாளர் தமிழகத்தை காலி பண்ணுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹீரோக்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவின் உறவினர் கொடுத்த ஷாக்

https://www.youtube.com/watch?v=Z34arNWQyaI&t=15s

Close